{ 32 . உயிர்த் தந்தை

துன்பெலாம் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே

எல்லா நன்மையுமென்றனுக்களித்த
எல்லாம் வல்ல சித்தென்றனித் தந்தையே

நாயிற் கடையே னலம் பெறக்காட்டிய
தாயிற் பெரிதும் தயவுடைத் தந்தையே (1120 )

அறிவிலாப் பருவத்தறிவெனக்களித்தே
பிறிவிலாதமர்ந்த பேரருட் டந்தையே

புன்னிகரில்லேன் பொருட்டிவணடைந்தே
தன்னிகரில்லாத் தனிப்பெரும் தந்தையே

அகத்தினும் புறத்தினும் அமர்ந்தருட்சோதி
சகத்தினிலெனக்கே தந்த மெய்த்தந்தையே

இணையிலாக் களிப்புற்றிருந்திட வெனக்கே
துணையடி சென்னியிற் சூட்டிய தந்தையே

ஆதியீ றறியா வருளரசாட்சியிற்
ஜோதிமா மகுடW சூட்டிய தந்தையே ( 1130 )

எட்டிரண்ட றிவித்தெனைத் தனியேற்றி
பட்டிமண்டபத்திற் பதித்த மெய்த்தந்தையே

தங்கோலளவது தந்தருட் ஜோதிச்
செங்கோல் செலுத்தென செப்பிய தந்தையே

நன்பொரு ளனைத்தையுந் தன்னரசாட்சியில்
என்பொருளாக்கிய என்றனித் தந்தையே

தன்வடிவனைத்தையும் தன்னரசாட்சியில்
என்வடிவாக்கிய என்றனித் தந்தையே

தன் சித்தனைத்தையும் தன் சமூகத்தினில்
என்சித்தாக்கிய என்றனித் தந்தையே (1140 )

தன்வசமாக்கிய தத்துவமனைத்தையும்
என்வசமாக்கிய வென்னுயிர்த் தந்தையே

தன்கையிற் பிடித்த தனியருட் ஜோதியை
என்கையிற் கொடுத்த என்றனித் தந்தையே

தன்னையும் தன்னருட் சக்தியின் வடிவையும்
என்னையு மொன்றேன வியற்றிய தந்தையே

தன்னியலென்னியல் தன்செயல் என்செயல்
என்னவியற்றிய வென்றனித் தந்தையே

தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை
என்னவியற்றிய வென்றனித் தந்தையே (1150 )

சதுரப் பொருட் டனிப்பெருந் தலைவனென்
றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே

மனவாக்கறியா வரைப்பினி லெனக்கே
இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே

உணர்ந்துணர்ந் துணரினும் உணராப்பெருநிலை
யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே

துரிய வாழ்வுடனே சுகபூரணமெனும்
பெரிய வாழ்வளித்த பெருந்தனித் தந்தையே

ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
பேறளித்தாண்ட பெருந்தகைத் தந்தையே ( 1160 )

எவ்வகைத் திறனும் எய்துதற்கரிதாம்
அவ்வகை நிலையெனக்கு அளித்த நற்றந்தையே

இனிப்பிறவா நெறியெனக் களித்தருளிய
தனிப்பெரும் தலைமைத் தந்தையே தந்தையே !

{ 33.உயிர்த்துணை }

Advertisements