{ 31 . உயிர்த்தாய் }

சீறுற வருளாந் தேசுற வழியாப்
பேறுற வென்னைப் பெற்ற நற்றாயே

பொருத்திய வருட்பெரும் போகமே யுறுகெனப்
பெருந்தயவாலெனைப் பெற்ற நற்றாயே

ஆன்ற சன்மார்க்க மணிபெற வெனைத்தான்
ஈன்றமுதளித்த வினிய நற்றாயே !

பசித்திடுதோறுமென் பாலணைத் தருளால்
வசித்தமு தருள்புரி வாய்மை நற்றாயே

தளர்ந்ததோர் அடியேன் சார்பணைந் தென்னை
உளந்தெளி வித்த ஓருமை நற்றாயே ( 1080 )

அருளமுதே முதல் ஐவகை அமுதமும்
தெருளுற எனக்கருள் செல்வ நற்றாயே

இயலமுதே முதல் எழுவகை அமுதமும்
உயலுற வெனக்கருளிய நற்றாயே

நண்புறு மெண்வகை நவவகை யமுதமும்
பண்புற வெனக்கருள் பண்புடைத்தாயே

மற்றுள வமுத வகையெலா மெனக்கே
உற்றுண வளித்தரு ளோங்கு நற்றாயே

கலக்கமு மச்சமும் கடிந்தெனதுளத்தே
அலக்கணும் தவிர்த்தருள் அன்புடைத்தாயே ( 1090 )

துய்ப்பினில் அனைத்தும் சுகம்பெற அளித்தெனக்கு
எய்ப்பெலாம் தவிர்த்த இன்புடைத் தாயே

சித்திக ளெல்லாம் தெளிந்திட வெனக்கே
சத்தியை யளித்த தயவுடைத்தாயே

சத்தினி பாதந் தனையளித்தெனை மேல்
வைத்தமுதளித்த மரபுடைத்தாயே

சத்திசத்தர்களெலாம் சார்ந்தெனதேவல் செய்
சித்தியை அளித்த தெய்வ நற்றாயே

தன்னிகரில்லாத் தலைவனைக் காட்டியே
என்னை மேலேற்றிய இனிய நற்றாயே (1100 )

வெளிப்பட விரும்பிய விளைவெலாமெனக்கே
அளித்தளித்து இன்புசெய் யன்புடைத்தாயே

எண்ணகத் தொடுபுறத்தென்னை யெWWஆன்றும்
கண்ணெனக்காக்கும் கருணை நற்றாயே

இன்னருளமுதளித்திறவாத் திறல்புரிந்து
என்னை வளர்த்திடும் இன்புடைத்தாயே

என்னுடலென்னுயிரென்னறிவெல்லாம்
தன்ன வென்றாக்கிய தயவுடைத்தாயே

தெரியாவகையாற் சிறியேன் றளர்ந்திடத்
தரியா தணைத்த தவுடைத் தாயே (1110 )

சினமுதலனைத்தையும் தீர்த்தெனை நனவினுங்
கனவினும் பிரியாக் கருணை நற்றாயே

தூக்கமும் சோம்புமென் றுன்பமுமச்சமும்
ஏக்கமும் நீக்கிய வென்றளித்தாயே

Advertisements