{ 24 . மெய்ப்பொருள் }

களங்க நீத்துலகம் களிப்புற மெய்ந்நெறி
விளங்கவென்னுள்ளே விளங்கு மெய்ப்பொருளே

மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
ஓவற விளங்கு மொருமை மெய்ப்பொருளே

எழுநிலை மிசையே யின்புருவாகி
வழுநிலை நீக்கி வயங்கு மெய்ப்பொருளே

நவநிலை மிசையே நடுவுறு நடுவே
சிவமயமாகித் திகழ்ந்த மெய்ப்பொருளே

ஏகா தசநிலை யாததி நடுவே
ஏகா தனமிசை யிருந்த மெய்ப்பொருளே ( 890 )

திரையோ தசநிலை சிவவெளி நடுவே
வரையோ தருசுக வாழ்க்கை மெய்ப்பொருளே

ஈரெண் நிலையென வியம்பு மேனிலையிற்
பூரண சுகமாய்ப் பொருந்து மெய்ப்பொருளே

எல்லா நிலைகளுமிசைந்தாங் காங்கே
எல்லா மாகியிலங்கு மெய்ப் பொருளே

மனாதிகள் பொருந்தா வானடு வானாய்
அனாதி புண்மையதாய் அமர்ந்த மெய்ப்பொருளே

தானொரு தானாய் தானே தானாய்
ஊணுயிர் விளக்கு மொருதனிப் பொருளே (900 )

அதுவினுள் அதுவாய் அதுவே யதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே

இயல்பினுள் இயல்பாய் இயல்பே இயல்பாய்
உயலுற விளங்கும் ஒருதனிப் பொருளே

அருவினுள் அருவாய் அருவரு அருவாய்
உருவினுள் விளங்கும் ஒருபரம் பொருளே

அலகிலாச் சித்தாய் அது நிலையதுவாய்
உலகெலாம் விளங்கும் ஒருதனிப்பொருளே

பொருளினிற் பொருளாய் பொருளது பொருளாய்
ஒருமையின் விளங்கும் ஒருதனிப் பொருளே ( 910 )

ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு
கோடியும் விளங்கக் குலவு மெய்ப்பொருளே

கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
ஆட்டுற விளக்கும் அரும்பெரும் பொருளே

அறிவுறு சித்திகள் அனந்த பல்கோடியும்
பிறிவற விளக்கும் பெரும்தனிப் பொருளே

வீடுகள் எல்லாம் விதிநெறி விளங்க
ஆடல் செய்தருளும் அரும்பெரும் பொருளே

பற்றுகள் எல்லாம் பதி நெறி விளங்க
உற்றரு ளாடல் செய் ஒருதனிப் பொருளே ( 920 )

{ 25 .பராபர இயல் }

பரத்தினிற் பரமே பரத்தின்மேற்பரமே
பரத்தினுட் பரமே பரம்பர பரமே

பரம்பெறும் பரமே பரம்தரும் பரமே
பரம்பதம் பரமே பரம்சிதம் பரமே

பரம் புகழ்பரமே பரம்பகர் பரமே
பரம்சுக பரமே பரம் சிவபரமே

பரங்கொள்சிற் பரமே பரம்செய் தற்பரமே
தரங்கொள் பொற் பரமே தனிப்பெரும் பரமே

வரம்பரா பரமே வணம்பரா பரமே
பரம்பரா பரமே பதம்பரா பரமே ( 930 )

{ 26 . பதவியல் }

சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே

தத்துவ பதமே தற்பத பதமே
சித்துறு பதமே சிற்சுகபதமே

தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே
அம்பரம் பதமே அருட்பரம் பதமே

தந்திர பதமே சந்திர பதமே
மந்திர பதமே மந்தண பதமே

நவந்தரு பதமே நடந்தரு பதமே
சிவந்தரு பதமே சிவசிவ பதமே ( 940 )

{ 27 . சிவ ரகசியம் }

பிரமமெய்க் கதியே பிரம மெய்ப் பதியே
பிரம நிர்க்குணமே பிரம சிற்குணமே

பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்
பரமமே பரம பதந்தரும் சிவமே

அவனோ டவளாய் யதுவாய் யலவாய்
நவமா நிலைமிசை நன்னிய சிவமே

எம்பொருளாகி எமக்கருள் புரியும்
செம்பொருளாகிய சிவமே சிவமே

ஒரு நிலையிதுவே உயர்நிலை யெனுமொரு
திருநிலை மேவிய சிவமே சிவமே ( 950 )

மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு
தெய்வப் பதியாம் சிவமே சிவமே

புரை தவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்
சிரமுற நாட்டிய சிவமே சிவமே

கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச்
செல்வமும் அளித்த சிவமே சிவமே

அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த்
தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே

சத்தெலா மாகியும் தானொரு தானாம்
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே ( 960 )

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே

யாரே யென்னினு மிரங்குகின்றார்க்குச்
சீரே யளிக்கும் சிதம்பர சிவமே!

பொய்நெறி யனைத்தினும் புகுத்தாதெனையருட்
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே

கொல்லா நெறியே குருவரு ணெறியெனப்
பல்காலெனக்குப் பகர்ந்த மெய்ச் சிவமே

உயிரெலாம் பொதுவினு ளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே ( 970 )

Advertisements