அருட்பெரும் சோதி அகவல்  பகுதி  2 .

எம்மையும் என்னைவிட்டு இறையும் பிரியாது
அம்மை அப்பனுமாம் அருட்பெரும் சோதி

பிரிவுற்றறியாப் பெரும் பொருளாயென்
அறிவுக்கு அறிவாம் அருட்பெரும் சோதி

சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அநாதியாம் அருட்பெரும் சோதி

தநு கரணாதிகளாம் கடந்து அறியுமோர்
அனுபவமாகிய அருட்பெரும் சோதி

உனுமுணர் உணர்வாய் உணர்வெலாம் கடந்த
அனுபவாதீத அருட்பெரும் சோதி                (120)

பொதுவுனர்வு உணரும் போதலால் பிரித்தே
அதுவெனில் தோன்றா அருட்பெரும் சோதி

உளவினில் அறிந்தால் ஒழிய மற்றனக்கின்
அளவினில் அளவா அருட்பெரும் சோதி

என்னையும் பணிகொண்டு இறவா வரமளித்து
தன்னையில் உவந்த அருட்பெரும் சோதி

ஓதியோதாமல் உறவெனக்கு அளித்த
ஆதியீறில்லா அருட்பெரும் சோதி

படியடி வான் முடி பற்றினும் தோற்றா
அடிமுடி எனுமோர் அருட்பெரும் சோதி         (130)

பவனத்தின் அண்டப் பரப்பின் எங்கெங்கும்
அவனுக்கு அவனாம் அருட்பெரும் சோதி

திவளுற்ற அண்டத் திரளின் எங்கெங்கும்
அவளுக்கு அவளாம் அருட்பெரும் சோதி

மதனுற்ற அண்ட வனப்பின் எங்கெங்கும்
அதனுக்கு அதுவாம் அருட்பெரும் சோதி

எப்பாலுமாய் வெளியெலாம் கடந்துமேல்
அப்பாலுமாகிய அருர்பெரும் சோதி

வல்லதாய் எல்லாமாகி எல்லாமும்
அல்லதாய் விளங்கும் அருட்பெரும் சோதி     (140)

எப்பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய்கண்டோர்
அப்பொருளாகிய அருட்பெரும் சோதி

தாங்கு அகிலாண்ட சராசர நிலை நின்று
ஆங்குற விளங்கும் அருட்பெரும் சோதி

சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம் புறத்து
அத்திசை விளங்கும் அருட்பெரும் சோதி

சத்திகள் எல்லாம் தழைக்க எங்கெங்கும்
அத்தகை விளங்கும் அருட்பெரும் சோதி

முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழில் அளிக்கும் அருட்பெரும் சோதி        (150)

பெரிதினும் பெரிதாய் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம் அருட்பெரும் சோதி

காட்சியும் காணாக்காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெரும் சோதி

இன்புறு சித்திகள் எல்லாம் புரிக என்று
அன்புடன் எனக்கருள் அருட்பெரும் சோதி

இறவா வரமளித்து என்னை மேலேற்றிய
அறவாழியாம் தனி அருட்பெரும் சோதி.

நானந்த மில்லா நலம் பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருட்பெரும் சோதி       (160)

எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்றெனை
அண்ணி உள்ளோங்கும் அருட்பெரும் சோதி

மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது
வாயினை என்றருள் அருட்பெரும் சோதி

எண்ணில் செழுந்தேனின் இனிய தெள்ளமுதென
அண்ணித்து இனிக்கும் அருட்பெரும் சோதி

சிந்தையுற் றுன்பொழி சிவம் பெருகெனத்தொழில்
ஐந்தையும் எனக்கருள் அருட்பெரும் சோதி

எங்கெங்கிருந்து உயிர் ஏதேது வேண்டினும்
அங்கங்கிருந்தருள் அருட்பெரும் சோதி       ((170)

சகமுதற் புறப்புறம் தங்கிய அகப்புறம்
அகம் புறம் முற்றுமாம் அருட்பெரும் சோதி

சிகரமும் அகரமும் சேர்தனி உகரமும்
அகரமும் ஆகிய அருட்பெரும் சோதி

உபரச வேதியின் உபயமும் பரமும்
அபரமும் ஆகிய அருட்பெரும் சோதி

மந்தனம் இதுவென மறுவிலாமதியால்
அந்தணர் வழுத்தும் அருட்பெர்ம் சோதி

எம்புயக்கனியென எண்ணுவார் இதய
அம்புயத்தமர்ந்த அருட்பெரும் சோதி     (180)

செடியறுத்தே திட தேகமும் போகமும்
அடியருக்கே தரும் அருட்பெரும் சோதி

துன்பறுத்தொரு சிவதுரிய சுகந்தனை
அன்பருகே தரும் அருட்பெரும் சோதி

பொதுவது சிறப்பது புதியது பழையதென்று
அதுவதுவாய்த் திகழ் அருட்பெரும் சோதி

சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை
யாதனத்தோங்கிய அருட்பெரும் சோதி

ஓமயத் திருவுரு உவப்புடன் அளித்தெனக்கு
ஆமயத்தடை தவிர் அருட்பெரும் சோதி      (190)

எப்படி எண்ணியது என்கருத்து இங்கெனக்கு
அப்படி அருளிய அருட்பெரும் சோதி

எத்தகை விழைந்தன என் மனம் இங்கெனக்கு
அப்படி அருளிய அருட்பெரும் சோதி

இங்குறத் திரிந்து உளம் இளையா வகை எனக்கு அங்கையிற்கனியாம் அருட்பெரும் சோதி
பார் உயரப்புரிக எனப் பணித்து எனக்கருளியென்
ஆறுயிர்க்குள் ஒளிர் அருட்பெரும் சோதி

தேவியுற்று ஒளிர்தரு திருவுடன் எனது
ஆவியிற் கலந்தொளிர் அருட்பெரும் சோதி       (200)

எவ்வழி மெய்வழி என்ப வேதாகமம்
அவ்வழி எனக்கருள் அருட்பெரும் சோதி

வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள்
ஐயறிவு அளித்த அருட்பெரும் சோதி

சாமாறனைத்தும் தவிர்த்திங்கெனக்கே
ஆமாறு அருளிய அருட்பெரும் சோதி

சத்தியமாம் சிவசத்தியை ஈந்தெனக்கு
அத்திறல் வளர்க்கும் அருட்பெரும் சோதி

சாவா நிலையிது தந்தனம் உனக்கே
ஆவாவென அருள் அருட்பெரும் சோதி    (210)

சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெரும் சோதி

மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந்து அWசேல்
அயர்ந்திடேல் என்றருள் அருட்பெரும் சோதி

தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
ஆசறத் தெரிந்த அருட்பெரும் சோதி

காட்டிய உலகெலாம் கருணயாற் சித்தியின்
ஆட்டியல் புரியும் அருட்பெரும் சோதி

எங்குலம் எம்மினம் என்பது தொண்ணூற்று
ஆறு அங்குலம் என்பது அருட்பெரும் சோதி      (220)

எம்மதம் எம்மிறை என்ப உயிர்த்திரள்
அம்மதம் என்றருள் அருட்பெரும் சோதி

கூரிய கருநிலை குலவிய கீழ் மேல்
ஆறியல் எனவுரை அருட்பெரும் சோதி

எண்டர முடியாது இலங்கிய பற்பல
அண்டமும் நிறைந்தொளிர் அருட்பெரும் சோதி

சாருயிர்க்கெல்லாம் தாரகமாம் பரை
ஆறுயிர்க்குயிராம் அருட்பெரும் சோதி

வாழி நீடூழி வாழியென்றோங்கு பேர்
ஆழியை அளித்த அருட்பெரும் சோதி          (230)

மாண்டவர் மீட்டும் வரு நெறி தந்து இதை
ஆய்ந்திடு என்றுரைத்தாருட்பெரும் சோதி

எச்சம் நினக்கிலை எல்லாம் பெறுகவென்று
அச்சம் தவிர்த்த என் அருட்பெரும் சோதி

நீடுக நீயே நீளுகனைத்தும் நின்று
ஆடுகவென்ற என் அருட்பெரும் சோதி

முத்திறல் வடிவமும் முன்னியாங்கு எய்துறு
அத்திறல் எனக்கருள் அருட்பெரும் சோதி

மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை எனக்கருள் அருட்பெரும் சோதி    (240)

கரும சித்திகளின் கலைபல கோடியும்
அரசுற எனக்கருள் அருட்பெரும் சோதி

யோக சித்திகள் வகை உறுபல கோடியும்
ஆகவென்று எனக்கருள் அருட்பெரும் சோதி

Wஆன சித்தியின்வகை நல்விரிவனைத்தும்
ஆனியின்றெனக்கருள் அருட்பெரும் சோதி

புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவதென்று அருளிய அருட்பெரும் சோதி

முத்தியென்பது நிலை முன்னுறு சாதனம்
அத்தகவென்ற என் அருட்பெரும் சோதி        (250)

சித்தியென்பது நிலை சேர்ந்த அனுபவம்
அத்திறல் என்றவென் அருட்பெரும் சோதி

ஏக சிற்சித்தியே இயலுற அனேகம்
ஆகியதென்றவென் அருட்பெரும் சோதி

இன்ப சித்தியின் இயல் அனேகம் அனேகம்
அன்பருக்கென்றவென் அருட்பெரும் சோதி

எட்டிரண்டு என்பன இயலும் முற்படியென
அட்ட நின்றருளிய அருட்பெரும் சோதி

இப்படி கண்டனை இனியுறு படியெலாம்
அப்படியேயெனும் அருட்பெரும் சோதி        (260)

படிமுடி கடந்தனை பாரிது பாரென
அடிமுடி காட்டிய அருட்பெரும் சோதி

சோதியுட் சோதியின் சொரூபமே அந்த
மாதியென்றருளிய அருட்பெரும் சோதி

இந்த சிற்சோதியின் இயலுரு ஆதி
யந்தம் என்றருளிய அருட்பெரும் சோதி

ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே
ஆதியென்றருளிய அருட்பெரும் சோதி

நல்லமுதென்னொரு நாவுளம் காட்டியென்
அல்லலை நீக்கிய அருட்பெரும் சோதி       (270)

கற்பகம் என்னுளங்கைதனிற் கொடுத்தே
அற்புதம் இயற்றெனும் அருட்பெரும் சோதி

கதிர்நலம் என்னிரு கண்களிற்கொடுத்தே
அதிசயம் இயற்றெனும் அருட்பெரும் சோதி

அருளொளி என்றனின் அறிவினில் விரித்தே
அருள்நெறி விளக்கெனும் அருட்பெரும் சோதி

பரையொளி என்மனப் பதியினில் விரித்தே
அரசது இயற்றெனும் அருட்பெரும் சோதி

வல்லப சத்திகள் வகையெலாம் அளித்தெனது
அல்லலை நீக்கிய அருட்பெரும் சோதி           (280)

ஆரியலகம்புறம் அகப்புறம் புறப்புறம்
ஆரமுதெனக்கருள் அருட்பெரும் சோதி

சூரிய சந்திர சோதியுட் சோதியென்று
ஆரியர் புகழ்தரும் அருட்பெரும் சோதி

பிரிவேதினியுனைப் பிடித்தனம் உனக்கு நம்
அறிவே வடிவெனும் அருட்பெரும் சோதி

எWசேல் உலகில் யாதொன்று பற்றியும்
அWசேல்! என்றருள் அருட்பெரும் சோதி

மாண்டுழலாவகை வந்திளம் காலையே
ஆண்டுகொண்டருளிய அருட்பெரும் சோதி     (290)

பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்தெனது
அற்றமும் நீக்கிய அருட்பெரும் சோதி

சமயங்குலமுதற் சார்பெலாம் விடுத்த
அமயந்தோன்றிய அருட்பெரும் சோதி

வாய்தற் குரித்தெனும் மறையாகமங்களால்
ஆய்தற்கரிய அருட்பெரும் சோதி

எல்லாம் வல்ல சித்தெனக்கு அளித்து எனக்கு உனை
அல்லாதிலையெனும் அருட்பெரும் சோதி

நவையிலா உளத்தின் நாடிய நாடிய
அவையெலாம் அளிக்கும் அருட்பெரும் சோதி    (300)

கூற்றுதைத்தென்பால் குற்றமும் குணம் கொண்டு
ஆற்றல் மிக்களித்த அருட்பெரும் சோதி

நன்றறி வறியா நாயினேன் றனையும்
அன்று உவந்தாண்ட அருட்பெரும் சோதி

நாயினும் கடையேன் ஈயுனும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெரும் சோதி

தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்
ஆத்திரம் அளித்த அருட்பெரும் சோதி

எச்சோதனைகளும் இயற்றா தெனக்கே
அச்சோவென்றருள் அருட்பெரும் சோதி            (310)

ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண்டு
ஆறாறு கடத்திய அருட்பெரும் சோதி

 

தாபத் துயரந் தவிர்த்து உலகுறுமெலா
ஆபத்தும் நீக்கிய அருட்பெரும் சோதி

மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித்தெனக்கே
அருட்குருவாகிய அருட்பெரும் சோதி

உருவமும் அருவமும் உபயமும் ஆகிய
அருணிலை தெரித்த அருட்பெரும் சோதி

இருளறுத்து என்னுளத்து எண்ணியாங்கருளி
அருளமுதளித்த அருட்பெரும் சோதி                 (320)

தெருணிலை இதுவெனத் தெருட்டியென் உளத்திருந்து
அருணிலை காட்டிய அருட்பெரும் சோதி

பொருட்பதமெல்லாம் புரிந்து மேலோங்கிய
அருட்பதமளித்த அருட்பெரும் சோதி

உருள்சகடாகிய உளம் சலியாவகை
அருள்வழி நிறுத்திய அருட்பெரும் சோதி

வெருள்மனமாயை வினையிருள் நீக்கியுள்
அருள் விளக்கேற்றிய அருட்பெரும் சோதி

சுருள் விரிவுடை மனச்சுழலெலாம் தவிர்த்தே
அருளொளி நிரப்பிய அருட்பெர்ம் சோதி       (330)

விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே
அருட்பேரளித்த அருட்பெரும் சோதி

அருட்பேர் தரித்து உலகனைத்தும் மலர்ந்திட
அருட்சீரளித்த அருட்பெரும் சோதி

உலகெலாம் பரவவென் னுள்ளத்திருந்தே
அலகிலா ஒளிசெய் அருட்பெரும் சோதி  .  (336)

Advertisements