திண்ணைப்பள்ளிக்கூடம்
நடத்துபவர் – ஆண்டி வாத்தியார் ( புதுவை ஞானம் )

நான் பிறந்தவுடன் சோதிடம் கணித்து வடலூர் வள்ளலாரின் ஞானசபையின் நினைவாக, ஞானப்பிரகாசம் என்று பெயரிட்டு:

‘நாடுவ நல்லோர் நேசம்
நடையுற கலை நூல் இச்சை
தெளிந்ததோர் சிந்தையாலே
தேறிய கலை நூல் ஆய்வன்’-

என வாழ்த்துப்பா எழுதிய, ஆண்டிக்குப்பம் என்ற ஊரில் பிறந்ததனால் செல்லமாகவும் மரியாதையாகவும் ஆண்டி வாத்தியார்’ என அழைக்கப்பட்ட திரு. ராமசாமி அய்யருக்கு சமர்ப்பணம் இந்தக் கட்டுரைத் தொடர். இதில் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே மனிதன் சாதித்தவை அனைத்தையும், அதற்கப்பால் சாதிக்கக் கனவு கண்ட அனைத்தையும் எனக்குத் தெரிந்தவரை எழுதிப் பகிர்ந்து கொள்ள ஆசை .
உங்கள் ஆதரவைப் பொறுத்து என் ஆசை நிறைவேறும்.

– புதுவை ஞானம்

‘கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று’
– திருக்குறள் (கல்லாமை 402)

‘அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டிக் கொளல்’
– திருக்குறள் (கல்லாமை 401)

‘நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்’
– திருக்குறள் (ஊழ் – 373)

என்பனவும் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.

இதையே

‘அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யறி
அன்னார் தலையிடை கடை மாணாக்கர்”

என்று நன்னூல் சூத்திரம் சொல்கிறது. அதன்படி பார்த்தால் நான் கடை மாணாக்கன். குற்றம் குறை இருக்கும் , பொறுத்துக் கொள்வது பெரியோர் கடன்.

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் வாய்ப்பு நம்மில் எண்ணற்ற பேர்களுக்கு எட்டாக்கனியாகிப் போனது நல்லதும் கெட்டதுமான ஒரு நிகழ்வு.

குழந்தைகளுக்குத் தலைவாரிப் பூச்சூடி புத்தாடை உடுத்தி நெற்றி நிறைய விபூதியும் சந்தனமும் துலங்க ; வெற்றிலை பாக்கு, பழம், கற்கண்டு, ஊதுவத்தி சகிதமாக திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு வந்து வாத்தியாரின் காலில் விழுந்து கும்பிட்டு:

‘இந்தப் புள்ளக்கி நாலு எழுத்து சொல்லிக் கொடுங்கய்யா’ என வேண்டி கோடித் துணி உடுத்த குழந்தையின் ஆட்காட்டி விரலைப் பிடித்துக் கொண்டு திண்ணையில் பரப்பி வைத்திருக்கும் ஆற்று மணலில்:

‘அரிநமோத்து சிந்தம் நன்றாக குரு வாழ்க
குருவே துணை’

என்று சொல்ல வைத்து,

‘அ’னா ”ஆ”வன்னா எழுதக் கற்றுக் கொடுத்துக் குழந்தையை மாணவனாக்கி மனிதனாக வளர்த்தெடுப்பார் திண்ணைப் பள்ளி வாத்தியார். பூட்ஸ் இல்லை, டை, இல்லை. புத்தகச் சுமையில்லை, ஆட்டோ ரிக்ஷா புகையில்லை. கூன் விழுந்த முதுகும் குழி விழுந்த கண்ணுமில்லை. லஞ்சம் இல்லை.
கட்டாய நன்கொடை இல்லை. இலகுவாக இருந்தது கல்வி. இனிமையான பொழுதுபோக்காக ஆடலும் பாடலுமாக இருந்தது கல்வி. காலப்போக்கில், அவன் நாலும் தெரிந்தவனாக சமூகத்தில் நடமாடுவான். சொந்த முயற்சியில் அரசனாகவோ ஆண்டியாகவோ ஆவான். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொடுக்கப்பட்ட அந்த நாலு அடிப்படைப் பாடங்கள் என்ன தெரியுமா ?

அரிச்சுவடி
எண் சுவடி
நெடுங்கணக்கு
ஐந்தொகை
(பற்று, வரவு, லாபம், நஷ்டம், இருப்பு)
இந்த நாலு தூண்களை அஸ்திவாரமாகக் கொண்டு (அஸ்திவாரங்களை யாரே அழகு செய்வார்?) அந்தக் காலத்து மனிதன் எழு நிலை மாடங்களையும் எண்ணற்ற கோயில்களையும் கட்டினான். அறிஞனானான்,
ஆசானானான், கவிஞனானான், கலைஞனானான், கட்டிடச் சிற்பியானான், மனையடி சாத்திரம் (மயமதம்) மாட்டு வாகடம், சித்த வைத்தியம், சோதிடம் என எத்தனையோ கற்றான். எந்தெந்த உருவிலோ இருப்பை நிலை நாட்டினான் – அவனவன் ருசிக்கும் அவனவன் திறமைக்கும் ஏற்ப. நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்து கொண்டு, ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா ‘ என்று இறைவனடி சேர்ந்தான்.

அனேகமாக உங்களுக்கு அரிச்சுவடி தெரிந்திருக்கும். உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, ஆயுத எழுத்து1, உயிர்மெய் எழுத்து 216. மொத்தம் 247 எழுத்துக்கள். பின்னர் ஒற்றையெழுத்து வார்த்தைகள் ஈரெழுத்து, மூவெழுத்து, நான்கெழுத்து வார்த்தைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. பாடல் வாயிலாக. பாடிப் பழகுவதால் மனப்பாடம் ஆகும் . (நெட்டுரு) குருட்டுப்பாடம் வேறு மனப்பாடம் வேறு என்பதைப் புரிந்து
கொள்க. மனம் ஒரு கணினியைப் போல் விரைவாகச் செயல்படும் விதத்தில் பழக்கப்படுத்தப்பட்டது

சென்ற இதழில் திண்ணைப் பள்ளியின் பாடல்கள் பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம். அவற்றில் பலவிதம் உண்டு. முதலில் அரிச்சுவடி (எழுத்து வரிசை) சொல்லிக் கொடுத்த சில பாடல்களைப் பார்ப்போம். முடிந்தால் உங்கள்குழந்தைகளுக்குப் பாடிக் காட்டும்படி வேண்டுகிறோம்.

‘அ’-னா… ”ஆ-வன்னா,
”இ-னா… ‘ஈ’-யன்னா…
‘உ’-னா என்று சொல்லடா
என் சின்னக்கண்ணே!
‘ஊ’-வன்னா ‘எ’-னா
‘ஏ’-யன்னா ‘ஐ’-யன்னா
ஓ-னா என்று சொல்லடா
என் செல்லக்கண்ணே.

இதுவே கிண்டலாகவும் கேலியாகவும் பாடினால் :

‘அ’னா ‘ஆ’வன்னா
அவனுக்கு வந்த கேடென்னா?
‘இ’னா , ‘ஈ’யன்னா
இவனுக்கு வந்த வாழ்வென்னா ? என வரும்.

ஆரம்பத்தில் வகுப்பில் பாடம் கற்க ஆரம்பித்தவுடன் உயிரெழுத்துகள் பன்னிரண்டையும்
இப்படிப் பாடல் வடிவில் அறிமுகப்படுத்தினார்கள்.

“அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போல நல்லார்
ஊரில் எவர் உள்ளார்
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அதுவே எனக்கு வழியாம். ”

அதையே அவ்வைப் பாட்டியும் ‘ஆத்திச்சூடி’ யில் சொல்லியிருக்கிறார். இப்படியாக…

” அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்…
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண்ணெழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஒளவியம் பேசேல்
அ•கம் சுருக்கேல் .”

உயிர் எழுத்துகள் பன்னிரண்டையும் வரிசைப்படுத்தி பாடல்களாகப் பாடியதைப் போலவே, மெய்யெழுத்துகள் பதினெட்டையும் வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். சொல்லின் முதலில் வரும் எழுத்துக்கள், இடையில் வரும் எழுத்துக்களை அவ்வாறே வரும்படி பாடல் எழுதியிருக்கிறார்கள். ஒளவையின் ‘ஆத்திசூடி’ யிலேயே அதற்கான பாடல்கள்கள் உள்ளன.

ஆத்திசூடி :

கண்டு ஒன்று சொல்லேல்
ங -ப்போல் வளை
சனி நீராடு
ஞயம்பட உரை
இடம் பட வீடு எடேல்
இணக்கம் அறிந்து இணங்கு
தந்தை தாய்ப் பேண்
நன்றி மறவேல்
பருவத்தே பயிர் செய்
மன்று பறித்து உண்ணேல்
இயல்பு அலாதன செயேல்
அரவம் ஆட்டேல்
இலவம் பஞ்சில் துயில்
வஞ்சகம் பேசேல்
அழகு அலாதன செயேல்
இளமையில் கல்
அறனை மறவேல்
அனந்தல் ஆடேல்

எந்த மொழிக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு தமிழ்மொழியில் உண்டு. அது ‘ழ’ என்னும் சிறப்பு எழுத்து.

ஆனால் பலருக்கும் அதனை உச்சரிப்பதில் சங்கடம் இருக்கிறது. அதற்காகவே அந்த எழுத்தை பழகிக் கொள்வதற்கான பாடல்கள் சில உண்டு. அது தவிர வல்லின மெல்லின இடையின வேறுபாடுகளை அறிந்து
கொள்ளவும் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நாப்பயிற்சிப் பாடல்கள் என்று சொல்வார்கள்.
உங்களின் பயிற்சிக்காக ஒரு சில பாடல்கள் மட்டும் இங்கே கொடுக்கப்படுகிறது.

‘நாப்’ பயிற்சிக்காக (Tongue Training)

” வருது பாரு வண்டி
மாடு ரெண்டும் சண்டி
வண்டிக்காரன் நொண்டி

தோத்தான் தொல்லி
தோலு குத்தற கொறவா
நொண்டி நொடிச்சிக்கோ
வெல்லம் தாரேன் கடிச்சிக்கோ ”

‘நாப்’ பயிற்சிக்கு

” ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி
கிழ நரி முதுகுல ஒரு பிடி நரை முடி

வாழைப்பழம் கொழகொழவென
அழுகிக் கீழே விழுந்தது .

யாரு தச்ச சட்ட இது
தாத்தா தச்ச சட்ட இது”

இதையே கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு என்று பார்த்தால் வேறுவிதமான பாடல்கள் இருக்கின்றன.

” ஆரல்வாய் மொழிக் கோட்டையிலே
உழக்காழாக்கு நெல்லுக்கு
ஏழு வாழைப்பழம் ”

இப் பாடலைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதால் ‘ழ’கர எழுத்து நாவுக்குப் பழக்கமாகும். நாவிலேயே
தங்கியும் இருக்கும்.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

ஏற்கனவே சொன்னதைப் போல் அரிச்சுவடி (Alphabets) கற்றுக் கொடுத்த
திண்ணைப் பள்ளி வாத்தியார் எண் சுவடியை ஆரம்பித்தார் ! .

” ஒன்று யாருக்கும் தலை ஒன்று
இரண்டு யாருக்கும் கண் இரண்டு
மூன்று முக்காலிக்குக் கால் மூன்று
நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்து கையின் விரல் ஐந்து
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது தானிய வகைஒன்பது
பத்து இரு கை விரல் பத்து .”

என்று ராகத்துடன் நீட்டிப் பாடிக் கொண்டே அதே நேரத்தில் எண்களையும் கற்றுக் கொள்வது.
மற்றொரு முறை.விளையாட்டின் மூலமாக பலரும் சுற்றிச் சுற்றி வர பாடலைப் பாடுவது. அதிலும்
எண்கள்தான் முக்கியம். அந்தப் பாடலை நீங்களும் ஆடிக் கொண்டே பாடலாம்.

” ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரே பூ பூத்தது
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டே பூ பூத்தது
மூணு குடம் தண்ணி ஊத்தி
மூணே பூ பூத்தது –
நாலு குடம் தண்ணி ஊத்தி
நாலே பூ பூத்தது
அஞ்சு குடம் தண்ணி ஊத்தி
அஞ்சே பூ பூத்தது
ஆறு குடம் தண்ணி ஊத்தி
ஆறே பூ பூத்தது
ஏழு குடம் தண்ணி ஊத்தி
ஏழே பூ பூத்தது
எட்டு குடம் தண்ணி ஊத்தி
எட்டே பூ பூத்தது
ஒம்பது குடம் தண்ணி ஊத்தி
ஒம்பதே பூ பூத்தது
பத்து குடம் தண்ணி ஊத்தி
பத்தே பூ பூத்தது .”

அதன் பின்னர் வாய்ப்பாடு. இதையும் ராகமாகப் பாடலாம். இதன் மூலம் எண்களைக் கூட்டிச் சொல்லத் தெரிந்து கொள்ளலாம்.

“ஒரோன் ஒண்ணு
ரெண்டோன் ரெண்டு
மூவோன் மூணு
நாலோன் நாலு
இப்படியாக ஆரம்பித்து 16-வரை கூட்டல் வாய்ப்பாடு . பிறகு ஒன்றாம் வாய்ப்பாட்டிலிருந்து
ஓரெண்டு ரெண்டு
ஈரெண்டு நாலு,
மூவிரண்டு, ஆறு
நாலு ரெண்டு எட்டு,
ஐயி ரெண்டு பத்து ”
இப்படியாக 16 வாய்ப்பாடுகள் பெருக்கல் கணக்கினையும் இந்த வகுப்பில் ஆண்டி வாத்தியார்
எண்களைச் சொல்லிக் கொடுத்தார். .

பழங்கணக்கல்ல; புதிதே !
‘நோக்கிய நோக்கே நுணுக்கரிய
நுண்ணணர்வே’
என்றவாறு மிகப் பெரிய அளவைகளையும் – வரையறுக்கப்பட்டதிலிருந்து வரம்பிலனதையும் (infinte) மிகச் சிறிய சிற்றணுவையும் , அணுவையும், அண்டத்தையும் கூட தெரிந்து வைத்திருந்த முன்னைப் பழம்பொருள் நமது கல்வி. இதைப் பழம் பெருமை பேசுவதற்காகச் சொல்ல வரவில்லை.

நான் 1980-ல் அந்தமானில் L.I.C.-யில் பணிபுரிந்தேன். அங்கு என்னைத் தவிர அனைவரும் வங்காளிகள்.
ஒரு நாள் என் மனைவிக்குத் தமிழில் கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன். ஒரு வங்காளி நண்பர் நான் தமிழில் எழுதுவதைப் பக்கத்தில் நின்று உன்னிப்பாகக் கவனித்தார். முகத்தைச் சுளித்து, ”தமிழ் பழம்பெரும் மொழி என்று கேள்விப்பட்டிருக்கிறேனே! நீங்கள் ஏன் கடிதத்தில் தேதியிடும்போது ரோமன் லிபியைப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் மொழியில் எண் வரிசை (Numerals) கிடையாதா?” என்று கேட்டார்.
எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
தமிழனைத் தவிர மற்றவர்கள், தாய் மொழியில்தான் எண்களை எழுதுகிறார்கள். ”தமிழில் எண்கள் இருக்கின்றன. ஆனால் நான்பள்ளியில் படித்தபோது அவை சொல்லித் தரப்படவில்லை. பழைய நூல்களில் மட்டும் அவை உயிர் வாழ்கின்றன” என்றேன் நான். ”Shame Shame” என்றார் அவர். உங்கள் தகவலுக்காக அவை கீழே தரப்படு

Advertisements