யோகத்தின் தத்துவம் (தமிழாக்கம் )
புதுவை ஞானம்.

****

யோகம் என்பது மனிதனின் இயல்பான செயற்பாடுகளின் மற்றொரு வடிவம். அது உணர்வுபூர்வமாக நெறிப்படுத்தப்பட்ட மனதின் உயரிய வழிமுறை ஆகும்.

சமீப காலத்திய ‘உளவியல் பகுப்பாய்வு அறிவியல் ‘ மனதில் மறைத்து வைக்கப்பட்ட ஊற்றுகளையும் அடி ஆழ நீரோட்டங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. நமது தற்போதைய ஆய்வுக்குப் பலன் தரும் வகையில் நமது மொத்த உடலியல் வாழ்க்கை முறையை பரிசீலிக்கும் ஒரு புதிய முறைக்கு நம்மை பரிச்சயப்படுத்தி/அறிமுகப்படுத்தி இருக்கிறது இந்த அறிவியல். மனது என்பது தனக்குள்ளேயேயும் தனக்கு எதிராகவும் கூட பிளவு பட்டிருக்கும் ஒரு வீடு என்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று எதிரான உணர்வுகளின் போர்க்களமாக அது விளங்குகிறது. எப்படியாயினும் இந்த சக்திகளின் மோதலுக்குத் தீர்வு காணும் ஒரு வித அமைப்பு, அவற்றைச் சமநிலையில் வைத்திருக்கும் ஒரு சூத்திரம், அதற்குள் இருந்தாக வேண்டும். இல்லையெனில் மனது – மனித இருப்பே- ஒரு உயிருள்ள பொருளாக இல்லாது ஒழிந்து விடும். இந்த சக்திகளின் சமநிலைக்கான ஏற்பாடு எதுவாக இருக்கும் ? இதனை அறிந்து கொள்ளும் முன், இந்த மோதல்களின் அடிப்படை இயல்பு என்ன ? இந்த மோதலில் ஈடுபடும் மூல சக்திகளின் குணாம்சம் என்ன ? என்பதை முதலில் தெரிந்து கொண்டாக வேண்டும். மனிதனுக்குள் திருப்தி அடைய விரும்பும் சில அடிப்படை ஆசைகள்/விருப்பங்கள் இருக்கின்றன. இவை உயிரின் பிராண சங்கடங்கள் ஆகும். அவற்றுள் தலையானது; தன்னை இருக்க வைப்பதும்/காப்பாற்றிக் கொள்வதும் தன்னை மறுவார்ப்பு செய்வதுமான விருப்பம் ஆகும். அல்லது எதிர்த்தாக்குதல் மூலமோ அன்றி தற்காப்பு யுக்தியாலோ தன் உடலைக் காப்பாற்றி வைத்துக் கொள்வதுடன், தன் இனத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக உடலுறவு கொள்ளும் விருப்பமாகும். ஒரு உடலியல் உயிரியாக (ஜீவியாக) மனிதன் வாழ்வதற்கு (நிலைப்பதற்கு) இந்த இரண்டு உயிரியல் தேவைகளும் தவிர்க்க இயலாதவை ஆகும். மனிதன் உயிர் வாழ்வதற்கான குறைந்த பட்ச நிபந்தனைகளை இவை வழங்குகின்றன/விதிக்கின்றன என்பதனால், அவனது உடல் அமைப்பிற்கும் உள் அமைப்பிற்கும் அடிப்படையான மூலகங்கள் எனவாகி அவனுள் நுழைகின்றன.

இந்தப் பிராண சங்கடங்கள் தடையேதும் இன்றிக் கடந்துவிடின் வெகு சுலபமான/எளிதான விஷயம் என்றாகிவிடும். மற்ற காரணிகளையும் சக்திகளையும் எதிர் கொள்ளாமல் இவை திருப்தி அடைந்துவிட்டால் எந்தப் பிரச்சனையும் எழப் போவதில்லை, உண்மை நிலை என்னவெனில் மனிதன் தனது உணர்ச்சிகளை எங்கு, எப்போது வேண்டுமானாலும் நேரடியாகத் தீர்த்து கொள்ள இயலாது. தனது ஆதிநிலையில் காட்டுமிராண்டியான நிலையில் இருந்தபோது கூட தனது மிருக இச்சைகளைக் கட்டுபடுத்தவும், மூடி மறைக்கவும் நேரிட்டது. இன்றைய நாகரிக உலகிலோ இந்தக் கட்டுப்பாடுகள் பண்முகப்பட்டவை ஆகவும், வெளிப்படையாகப் புரிந்து கொள்ளப்பட்டவை ஆகவும் நிலவுகின்றன. நமது உடலுறவு இச்சைகளின் இழுத்த இழுப்புக்கு, வெளிப்படையாக நாம் செல்ல முடியாது.

திருமணம் என்ற அமைப்பு மூலமாக திரைமறைவில் இருந்த விருப்பங்களை நாம் நிறைவேற்றிக் கொள்கிறோம். உணவைக் கண்டவுடன் அதன்மேல் பாய்ந்து குதறி, நமக்குக் கிட்டியவரை திணித்துக்கொள்வதில்லை. நாம் பொருளாதார அமைப்பு என்ற விரிவான ஒரு ஏற்பாட்டின் மூலம், கிடைக்கும் உணவை உறுதி செய்து கொள்கிறோம். அரசு என்கிற எந்திரமும் ஷத்திரிய தருமத்தின் வழிபாடும் இந்த போரிடும் உணர்வை நெறிப்படுத்தும் சுற்று வழிகள் தாம்.

மனிதனின், இயல்பானதும் நேரடியானதுமான இந்த மிருக இச்சைகளின் வெளிப்பாட்டுக்கு இடையூறாகத் திகழும் காரணங்களின் விளக்கம் என்ன ? மனிதனின் சமூக வாழ்க்கை அவன் ஒரு குழுவின் அங்கமாக, கூட்டாக வாழ்கிறான் என்ற உண்மைதான் இந்த கட்டுப்பாடுகளை அவன் மீது விதித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. சுதந்திரமான தடையற்ற ஆதிவாசியுடையதைப் போன்ற பண்படாத மிருக உணர்வுகளை திருப்திப்படுத்திக் கொள்வது, தனித்தும் தன் போக்கிலும் வாழும் ஒருவருக்கு சாத்தியமாகக் கூடும். ஆனால் கூட்டு வாழ்க்கையில் நிறுவனமான சமூக வாழ்க்கையில் இணைந்து வாழ்வதற்கான எல்லாப் பிணைப்புகளையும் இது சிதிலப்படுத்திவிடும். மனித உயிரியலின் மூன்றாவது தேவை தான் மந்தையாக சேர்ந்து வாழ்வதற்கான மனித உணர்வின் பரிணாமமும் கூட. இத்தகைய இந்த மந்தை உணர்வுதான் இயற்கையாகவும் தன்னிச்சையாகவும் வெறும் மிருக உணர்வுகளில் வளர்சிதை மாற்றங்களை உண்டுபண்ணி கேவலமான மிருக இச்சைகளை -மட்டுப்படுத்தி திசை மாற்றி விடுகிறது(ஒர்க:- மற்றென் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய் ‘) மனிதனுடைய இந்த ஒழுக்கம் மற்றும் ஆன்மீக லட்சியங்கள் அவனது மிருக இச்சைகளின் பாசாங்கு தானா ? அல்லது இரண்டாவதாக சொல்லப்பட்ட ஆன்மீக லட்சியங்களைத் தாண்டியும் உடனுறையும் மெய்நிலைகளா ? என்பதைக் கொஞ்சம் ஒத்தி வைத்துவிட்டு இந்த மிருக இச்சைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய ஒரு எளிய உண்மையை ஏற்றுக்கொண்டு இதன் செயற்பாட்டு அமைப்பைப் பற்றி உள்நோக்கிச் செல்ல முயற்சி செய்வோம்.

அடிப்படை உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது நெறிப்படுத்துவதற்கு மூன்று பாதைகள், உளப்பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டும் மூன்று நெறிமுறைகள் இருக்கின்றன. முதலாவது ஆக Defense Reaction எனப்படும் பாதுகாப்பு எதிர் நடவடிக்கை வருகிறது. அதாவது இந்த (மிருக) உணர்வுத் தூண்டுதல் தோன்றும் போதே, மனது தானே நேரடியாக அந்த உணர்வுகளை மறுப்பதும், அந்த உணர்வுகளின் ஊற்றை முற்றிலும் அடைத்து விடுவதற்குச் செய்யும் முயற்சியும் ஆகும். ஆனால் அதை மறுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையின் வேகத்தையும், திடத்தையும் ஒப்பிட்டால் இந்த உணர்வுகளின் பீறிடும் வேகம் அதற்கு சமமாகவே இருக்கும். அது ஒரு சீமாட்டி ரொம்பவும் பிகு செய்து கொள்வதைப் போன்றது தான். எனவே ஆழ்மனதில் ஒரு குறிப்பிட்ட உணர்வுத் தூண்டுதல் ஏற்படுகையில் மனது அதற்கு எதிரான, அதை மாற்றக்கூடிய ஒரு மாற்று உணர்வுத்தூண்டுதலை உருவாக்க உணர்வு கடமைப்பட்டுள்ளது. இவ்வாறு பலமானதொரு பாலியல் ஏக்கம் மனதில் ஏற்படும் போது தன்னைக் காத்துக் கொள்ள எதிர்வினையாக ஒரு தூய்மையான (துறவு) மெய்ஞான மனோநிலையை ஏற்படுத்துகிறது என்பதாகும்.

இரண்டாவது குறிப்பிடப்படுவது SUBSTITUTION ‘பதிலி ‘ மார்க்கமாகும். இந்த மார்க்கத்தில் இத்தகைய உணர்வுத் தூண்டுதல்களை எதிர்த்துப் போராடும் மனநிலையில் மனது இருப்பதில்லை மாறாக அத்தூண்டுதல்களை வேறு வழிகளுக்குத் திருப்பி விடுகிறது. அதிகம் தியாகம் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லாததும் ஆனதோந்நிலையில் உள்ளுணர்வு வழி நடத்தும் உயரிய மனித நோக்கங்களில் மனதைச் செலுத்துகின்றது. இவ்வாறு சாதாரணமாக பாலுணர்வில் திருப்தி காணும் மனோசக்தி, மாற்று வழிகளான கலை இலக்கியம் இவற்றை வளர்ப்பதில் செலவிடப்படுகிறது. நாம் படிக்கும் நவீனங்களில் காதலில் தோல்வியுற்ற கதாநாயக நாயகிகள் பொதுப்பணியிலும் தர்ம காரியங்களிலும் ஈடுபட்டு தங்கள் தோல்வியை மறக்கடிப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். மற்றொரு விதம் குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆகி சோகத்தில் மூழ்கி விடுவது ஆகும்.

(வாசக நண்பர்கள் இது பற்றி மேலும் விவரமாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்ளவிரும்பினால் இன்னும் தமிழில்வெளிவராத ஆங்கில நூலான THE GREATNESS AND LIMITATIONS OF FREUD என்ற ERICFORMM எழுதிய நூலைப் படிக்கலாம்.

புதுவை ஞானம்)

மூன்றாவதாகக் குறிப்பிடப்படுவது SUBLIMATION எனப்படும் ‘உள்ளுணர்வில் கரைந்து போகும் ‘ மார்க்கம் ஆகும். இந்த மார்க்கத்தில் இயற்கையாக எழும் இந்த உணர்வுந்துதல்கள் ஒடுக்கப்படுவதும் இல்லை மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுவதுமில்லை. மாறாக உயரியதோர் முறைமைக்கு மேல் நோக்கி உயர்த்தப்படுகிறது. ஒரு புதிய உணர்வும் புதிய விழுமியமும் ஏற்றப்பட்டு அதன் மூலம் அந்த விஷயத்துடன் பிணைக்கப்பட்டிருக்கும் களங்கம் அகற்றப்பட்டு சுதந்திரமாக ஈடுபட அனுமதிக்கப்படுகிறது. சிற்றின்பம் உள்ளுணர்வில் ஊறி ஆன்ம ஒன்றிப்புக்கு இட்டுச் சொல்லப்படுவதும் கட்டுக்கடங்கா உணர்ச்சிப் பெருக்கு பக்தியாக உருமாற்றம் ஆவதும் இந்த மார்க்கத்தினை விளக்கும் சீரிய எடுத்துக்காட்டுகளாகும்.

இந்த அடிப்படையான உணர்வுத் தூண்டுதல்களை கட்டுப்படுத்தவும் மறைக்கவும், மனித மனது மேலே சொன்ன மூன்று மார்க்கங்களில் ஏதாவது ஒன்றை வெகு இயற்கையாகவே எந்த பிரியத்தனமும் இன்றியே கையாளுகின்றது. இயற்கையின் நோக்கங்களுக்கு நல்லவிதத்தில் பணியாற்றும் விதத்தில் இந்த தன்னெழுச்சியான செயல்முறைகளை உளப்பூர்வமாக ஒழுங்குபடுத்தமுடியும். இதுதான் யோகத்தின் தொடக்கம். அதாவது உளப்பூர்வமாக இயற்கையை திருப்திப்படுத்துவது என்பதாகும். உளப்பகுப்பாய்வியல் நமக்கு யோகத்தின் தொடக்கமும் அடிப்படையுமான இந்த செயல்முறையை வழங்கி உள்ளது. இதனை நாம் (காம இச்சை)கட்டுப்பாட்டின் நான்காவது மார்க்கம் எனக் கொள்ளலாம். இந்த வழிமுறையில் மனிதன் ஒருபுதிய இருத்தல் மட்டத்தில் நுழைந்து புதிய வாழ்க்கை முறையை வளர்த்துக் கொள்கிறான். அப்போது தான் இயற்கையின் தன்னிச்சைப்போக்கு உளப்பூர்வமான கட்டுப்பாடு என்ற சக்தியால் கட்டுப்படுத்தப்படும். மனிதன் இங்கு (இயற்கை) சக்திகளின் குருட்டுத் தனமான ஒரு கருவி அல்ல. மித மிஞ்சித் துய்ப்பதும் கட்டுப்படுத்துவதும் ஆன அவனது நடவடிக்கைகள் முற்றிலும் ஆழ்மனத்தின் சட்டங்களின்படி வழி நடத்தப்படுவத்ம் அல்லது அச்சட்டங்கள் பற்றிய அறியாமையினால் அவற்றுக்கு அடிமைப்படுவதும் அல்ல. உளப்பூர்வமான கட்டுப்பாடு என்பதன் பொருள் ஆதிவாசித் தேவைகளுக்கு வெட்கப்படுவதோ அல்லது தவிர்ப்பதோ அல்ல. அவற்றை நேரடியாக எதிர்கொண்டு புரிந்து கொண்டு அவற்றின் மேல் ஆட்சி செலுத்துவது ஆகும்.

உணர்வற்ற அல்லது ஆழ்மனதின் முறை, அடிப்படையில் ஒடுக்குவது ஆகும். வெறும் வன்முறையான பாதுகாப்பு எதிர்நடவடிக்கை தவிர, பதிலி மற்றும் உள்ளுணர்வில் கலந்து போகும் மார்க்கத்தில் கூட, பின்புலத்தில் ஒடுக்கப்பட்ட ஏராளமான மன உணர்வுகள் தங்கள் ஆரம்பகால வலுவுடனேயே இருக்கின்றன. அந்த அமைப்பு முற்றிலும் தூய்மையாக்கப்பட்டுவிடுவதில்லை, அந்த அரிப்புகளுனுடனேயே கருக்கொண்டு இரகசியமாக உறைகின்றன. அவற்றுள் ஒரு பகுதி தான் திசை மாற்றுப்பட்டு, மூடி மறைக்கப்பட்டு அவற்றின் மேல்மட்டம் மட்டுமே உருமாற்றம் பெற்றுள்ளன. திடாரென பீறிட்டுக்கிளம்பும் போது ஆழத்தில் உள்ள இந்த சக்திகள் இந்த மேல் கட்டுமானம் எப்போதும் பரிதாபமாக சரிந்துவிடும் அபாயம் தலைக்கு மேல்தான் உள்ளது. மொத்த அமைப்பு முற்றிலும் உணர்வுபூர்வமாக இல்லாவிட்டாலும் கூட , ஒடுக்கப்பட்ட உணர்வுகளில் கொந்தளிப்பை அனுபவிக்கத் தான் செய்கிறது, என்பதோடு கூட ஆரோக்கியக்கேடான சமநிலையற்ற துன்பத்தில் துடிக்கிறது. தாந்தேயின் ‘ஆன்மீக மயமாக்கப்பட்ட கட்டுக்கடங்கா உணர்ச்சிகள் ‘ உள்ளுணர்வில் கரைந்து போகும் (SUBLIMATION) மார்க்கத்துக்கான ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும். ஆனால் DIVINA COMEDIA -அமைதியானதும் களங்கமற்றதும் ஆன ‘வாழ்வின் துன்ப துயரங்களின் கொந்தளிப்பில் இருந்து உயர்ந்து நின்று, முற்றிலும் தன்னோடு இசைந்து போகும் ஆன்மாவைப் பிரதிபலிப்பதாக இல்லை.

சாதாரணமாகவும் பழக்கதோஷத்திலும்தான் எந்த ஒடுக்கப்பட்ட உணர்ச்சிகளின் அழுத்தத்திலிருந்துவிடுபட விரும்புகின்றதோ அந்த ஒடுக்கப்பட்ட உணர்வுகளின் இருப்பை (பிரத்யட்சத்தை) உளப்பூர்வமான கட்டுப்பாட்டு முறையில்தான் மனது முதன்முறையாக தெரிந்து கொள்கிறது. அவை எவ்வளவுதான் அசிங்கமானவை ஆகவும் கிளர்ச்சி செய்வதாகவும் அம்மணமாகத் தோன்றினாலும் கூட மனது அதைத் தெரிந்து புரிந்து கொள்கிறது. பின்னர் உணர்வுபூர்வமான உறுதிக்கு அவற்றை அப்புறப்படுத்தவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ அல்லது மாற்றி வடிவமைக்கவோ எளிதாகி விடுகிறது. இவ்வாறாக மனித இயந்திரத்தில் ஒரு ஆரோக்கியமான இசைவான போக்கை ஏற்படுத்துவது சுலபமாக ஆகிறது. உணர்வுபூர்வமான கட்டுப்பாட்டில் அடங்கியுள்ள இந்தப் புரிதலின் பொருளே தூய்மைப்படுத்துதல் ஆகிறது.

இருந்தபோதிலும் இத்துடன் கட்டுப்படுத்தல், மாற்றத்துக்கு உள்ளாதல் என்ற செயல்முறை முடிவுக்கு வந்து விடுவதில்லை. இப்போது நாம் ஐந்தாவது மார்க்கத்துக்குச் செல்கிறோம். இந்த ஐந்தாவது மார்க்கம் தான் யோகமார்க்கத்துக்கு உண்மையானதும் நெருக்கமான உறவு கொள்வதும் ஆகும். தங்களது இருண்ட தாமச/ மந்த குணத்திலிருந்து விடுபட்டு ஒரு சுத்திகரிக்கப்பட்ட லயத்தில் இயங்குவதற்கு; தன்னிச்சையாக எழும் உணர்வுத்தூண்டுதல் மீது உணர்வு பூர்வமான கட்டுப்பாடு ஆதிக்கம் செலுத்துகிறது. நாம் அவற்றை மறைத்து வைக்கவோ ஒடுக்குவதற்கோ அவற்றுடன் போரிடுவதற்கோ முனைவதில்லை. ஆனால் ஒரு கலைஞன் தனது படைப்புக்கான மூலப்பொருளுடன் விளையாடுவது போல் அவற்றைக் கடந்து செல்கிறோம். இந்த KATHARSIS -ன் இந்த ஆரம்பகால தூண்டுதல்களின் அழகியல் அமசங்களை கிரேக்கர்கள் வென்றடைந்தார்கள். இந்த தொடக்ககால தூண்டுதல்கள் உணர்வுந்துதல்கள் ஆதிநிலையிலேயே இருந்தனதான் என்ற போதிலும், சந்தேகத்துக்கிடமின்றி அவை திருப்தி அடைகின்றன. வாழ்வெனும் அமைப்பில் உண்மையான ஆரோக்கியமான செயலாற்றுகின்றன. எனினும், தங்கள் அடிப்படை அம்சத்தில் மனிதனுள் மிருகமாகவே தொடருகின்றன. உணர்வு பூர்வமான கட்டுப்பாடு ஆதிஉணர்வுகளின் அப்புறப்படுத்தலும் சாகடிப்பும் என்ற போதிலும் கூட, அது ஒரு சரியான முடிவாக இல்லை; அப்போதும் கூட, அடிப்படைப் பிரச்சனைகள் தீரவில்லை என நாம் சொல்கிறோம். ஏனெனில் விடுபடுவதற்கும் மாற்றம் பெறுவதற்குமான இந்த உணர்ச்சிகளின் அரிப்பு/துடிப்பு திருப்தி அடைவதில்லை. அது வெறுமனே ஒத்தி வைக்கத்தான் செய்யப்படுகிறது.

இந்த கட்டத்தில் தான் யோகம் வந்து, நாம் உணர்வு கடந்த உறுதி (TRANS SUBSTANIATION) என்ற; தனது சக்தியின் மூலம் தீர்வினை வழங்குகிறது. தெளிவாகச் சொல்வதானால், இங்கே வடிவம் மாற்றப்படுவதில்லை, செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதில்லை, ஒழுங்குப்படுத்தப்படவோ, சுத்திகரிக்கப்படவோ இல்லை. ஆனால் இந்த உணர்வுகளின் உள்ளடக்கமே முற்றிலும் பண்பு மாற்றம் செய்யப்படுகிறது. உணர்வுபூர்வமான கட்டுப்பாடு என்பது மனிதனின் மனோதிடத்தின் வலிமை ஆகும். அதாவது தனிப்பட்ட நபரின் சொந்த மனோதிடம் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் அவசியத்திற்கேற்ப மட்டுப்படுத்தப்படுகிறது. இது இயற்கை சக்தியின் ஒரு துணைச்சக்தியாக இருந்து, அது புதிய வடிவம் பெற வழிகாட்டுகிறது. ஆனால் இயற்கையின் அடிப்படை உள்ளடக்கத்தை இயற்கையின் கருப்பொருளை மாற்ற அதனால் (மனோதிடத்தால்) இயலாது. இந்த நோக்கத்துக்காகத் தான், மனித மனோவலிமை அப்பால் சென்று தெய்வீக வலிமையின்/விருப்பத்தி விண்ணிலிருந்து இறங்கும்/விண்ணுலகம் சார்ந்த தெய்வீக சக்தியின் விருப்பில் மனதை இருக்க வைத்து யோகம் வருகிறது.

உண்மையில் இதுதான் மனிதன் தன்னுடைய ஆதிகால அடிப்படை உணர்ச்சிகளையும் அகத்தூண்டுதல்களையும் மறுமதிப்பீடு செய்வதற்காக தொடர்ந்து நடத்தும் தார்மீகப் போராட்டத்தின் உண்மையான அர்த்தமும் சாராம்சமும் ஆகும். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், கீழிலிருந்து மேல் மேல்நோக்கிச் செல்லும் ஒரு ஏறுமுக மார்க்கமாக, மனிதனின் ஒழுக்கம் மற்றும் ஆன்மீக இலட்சியங்களாவன; தனது மிருக உணர்ச்சிகளின் மாறுவேடமும், அவற்றை மேல்நோக்கி திசை திருப்புவதும் என ஆகின்றன. வேறு ஒரு கோணத்திலிருந்து அதாவது மேலிருந்து கீழ்நோக்கி இறங்குமுகமாகப் பார்த்தால் மனிதன் என்பவன் வெறும் உணர்ச்சித்தூண்டுதல்கள் அல்ல; இயற்கைச் சக்திகளின் கையில் பம்பரமாய்ச் சுழலும் குருட்டுக்கருவி அல்ல என்றாகிறது. அவனுக்குள் மற்றொரு வளமைஇருக்கிறது. ஒரு எதிர்த்துருவமான இருப்பு இருக்கிறது. அதிலிருந்து தான் மற்ற அகத்தூண்டுதல்கள் ஊற்றெனப் பெருகி கீழ்மட்டத் தூண்டுதல்களை தொடர்ந்து மாற்றியமைத்து வருகின்றன. அவனது அடிவாரம் மிருகம் என்றால் அவனது சிகரம் தெய்வீகம் என்று ஆகிறது. உடலியல் தேவைகள் அவனது (யதார்த்த நிலை) மெய்நிலையிலிருந்து மலருகின்றன என்றால் அவனது ஆன்மீக உயர்ச்சி அவனது உயர்நிலைக்கு ஆலயம் அமைக்கிறது.

முன்னதைப் பொறுத்தவரை அவன் அடிமை ஆக இருக்கிறான் பின்னதிலோ அவன் எசமானாக இருக்கிறான். இந்த இரட்டைச் சக்திகளின் ஊடாட்டத்தில் தான் அவனது மொத்த இயற்கையும் (சுபாவமும்) வடிவமைக்கப்பட்டன, வடிவமைக்கப்படுகின்றன. மனிதன் தனது பிராண இச்சைகளுக்கு தடையற்ற சுதந்திரம் அளிப்பதில்லை, அளிக்க முடியாது. ஏனெனில் அவனது அறிவு மற்றும் ஆன்மீகத் தளத்திலிருந்து உயரிய சக்திகளின் அழுத்தம் கீழ்நோக்கிப் பாய்கிறது. பிந்தைய இந்த உயர் சக்திகள் தான் வெறும் மிருகங்களின் நேரடி வாரிசாக அவன் இல்லாதபடி திசை திருப்புகின்றன. இவ்வாறாக மூன்று மட்டங்களில்/ நிலைகளில் மூன்று விதமான கட்டுப்பாடுகள் இருப்பதனை நாம் புரிந்து கொள்ளமுடியும். முதலாவது இயற்கையான கட்டுப்பாடு (Natural). இரண்டாவதாக உணர்வுபூர்வமான அதாவது புத்திபூர்வமான (Mental) ஒழுக்கம் மற்றும் சமயம் சார்ந்த கட்டுப்பாடு. மூன்றாவதாக ஆன்மீக அல்லது தெய்வீக (Divine) கட்டுப்பாடு. இப்போது, மனிதனால் உடல் மற்றும் மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்திகளின் பின்னே இருப்பதும் இயற்கையான கட்டுப்பாடும், ஒழுக்கரீதியான கட்டுப்பாடும், ஆன்மீக கட்டுப்பாட்டை மலரவைத்து வழிநடத்தும். இத்தகைய உச்சகட்ட மெய்மையாக இருப்பதும் ஆன்மா தான். தெய்வீக உந்துதலின் மறைமுக அழுத்தத்தை மிருக உணர்ச்சிகள் உணருகின்றன. மிருக உணர்ச்சிகளின் உண்மையான சாராம்சம் தெய்வீக உந்துதல்தான். இவ்வாறு முதலில் இயற்கையான வாழ்வில் உணர்வற்ற மோதல்களும், பின்னர் உளப்பூர்வமான மோதல் உயரிய ஒழுக்கரீதியான வாழ்விலும் தோன்றுகின்றன. ஆனால் இவை இரண்டுமே கடக்கப்படும்போது, இந்த மோதல்கள் மேலும் உயரிய மட்டத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. பின்னர் நாம் அவற்றின் உண்மையான முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதுடன் அவை திருப்தி அடையும் புள்ளியை நோக்கி பயணிக்கிறோம். யோகம் என்பது உடலியல் மற்றும் ஒழுக்கவியல் விழுமியங்களின் மறுமதிப்பீடு ஆகும். அது உயிர்ச்சக்திகளை ஆன்மீகக் கருவாக்கி இறுதியாக உறுதிப்படுத்தும் மார்க்கம் ஆகும்.
source :NOLONI KANTA GUPTA

Advertisements