TAMIL PAIL SCHOOL

நடத்துபவர் – ஆண்டி வாத்தியார் (புதுவை ஞானம்)

நான் பிறந்தவுடன் சோதிடம் கணித்து ஞானப்பிரகாசம் என்று – வடலூர் வள்ளலாரின் ஞானசபை- பெயரிட்டு:

‘நாடுவ நல்லோர் நேசம்
நடையுற கலை நூல் இச்சை
தெளிந்ததோர் சிந்தையாலே
தேறிய கலை நூல் ஆய்வன்’-
என வாழ்த்துப்பா எழுதிய,ஆண்டிக்குப்பம் என்ற ஊரில் பிறந்ததனால் செல்லமாகவும் மரியாதையாகவும்
ஆண்டி வாத்தியார்’ என அழைக்கப்பட்ட திரு. ராமசாமி அய்யருக்கு சமர்ப்பணம் இந்தக் கட்டுரைத் தொடர். இதில் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே மனிதன் சாதித்தவை அனைத்தையும்,
அதற்கப்பால் சாதிக்கக்கனவு கண்ட அனைத்தையும் எனக்குத் தெரிந்தவரை எழுதிப் பகிர்ந்து
கொள்ள ஆசை .
உங்கள் ஆதரவைப் பொறுத்து என் ஆசை நிறைவேறும்.

– புதுவை ஞானம்

‘கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று’
– திருக்குறள் (கல்லாமை 402)

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்’
– திருக்குறள் (கல்லாமை 401)

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்’
– திருக்குறள் (ஊழ் – 373)

என்பனவும் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.

இதையே

‘அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யறி
அன்னார் தலையிடை கடை மாணாக்கர்”

என்று நன்னூல் சூத்திரம் சொல்கிறது. அதன்படி பார்த்தால் நான் கடை மாணாக்கன். குற்றம் குறை
இருக்கும் , பொறுத்துக் கொள்வது பெரியோர் கடன்.
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் வாய்ப்பு நம்மில் எண்ணற்ற பேர்களுக்கு எட்டாக்கனியாகிப்
போனது நல்லதும் கெட்டதுமான ஒரு நிகழ்வு.

குழந்தைகளுக்குத் தலைவாரிப் பூச்சூடி புத்தாடை உடுத்தி நெற்றி நிறைய விபூதியும் சந்தனமும்
துலங்க ; வெற்றிலை பாக்கு, பழம், கற்கண்டு, ஊதுவத்தி சகிதமாக திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு
வந்து வாத்தியாரின் காலில் விழுந்து கும்பிட்டு:
‘இந்தப் புள்ளக்கி நாலு எழுத்து சொல்லிக் கொடுங்கய்யா’ என வேண்டிக் கோடித் துணி உடுத்த
குழந்தையின் ஆட்காட்டி விரலைப் பிடித்துக் கொண்டு திண்ணையில் பரப்பி வைத்திருக்கும் ஆற்று மணலில்:

‘அரிநமோத்து சிந்தம் நன்றாக குரு வாழ்க
குருவே துணை’
என்று சொல்ல வைத்து,

‘அ’னா ”ஆவன்னா எழுதக் கற்றுக் கொடுத்துக் குழந்தையை மாணவனாக்கி மனிதனாக வளர்த்தெடுப்பார் திண்ணைப் பள்ளி வாத்தியார். பூட்ஸ் இல்லை, டை, இல்லை. புத்தகச் சுமையில்லை,
ஆட்டோ ரிக்ஷா புகையில்லை. கூன் விழுந்த முதுகும் குழி விழுந்த கண்ணுமில்லை. லஞ்சம் இல்லை.
கட்டாய நன்கொடை இல்லை. லகுவாக இருந்தது கல்வி. னிமையான பொழுதுபோக்காகஆடலும் பாடலுமாக இருந்தது கல்வி. காலப்போக்கில், அவன் நாலும் தெரிந்தவனாக சமூகத்தில் நடமாடுவான். சொந்த முயற்சியில் அரசனாகவோ ஆண்டியாகவோ ஆவான். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொடுக்கப்பட்ட அந்த நாலு அடிப்படைப் பாடங்கள் என்ன தெரியுமா ?
அரிச்சுவடி
எண் சுவடி
நெடுங்கணக்கு
ஐந்தொகை
(பற்று, வரவு, லாபம், நஷ்டம், இருப்பு)
இந்த நாலு தூண்களை அஸ்திவாரமாகக் கொண்டு (அஸ்திவாரங்களை யாரே அழகு செய்வார்?) அந்தக்
காலத்து மனிதன் எழு நிலை மாடங்களையும் எண்ணற்ற கோயில்களையும் கட்டினான். அறிஞனானான்,
ஆசானானான், கவிஞனானான், கலைஞனானான், கட்டிடச் சிற்பியானான், மனையடி சாத்திரம் (மயமதம்)
மாட்டு வாகடம், சித்த வைத்தியம், சோதிடம் என எத்தனையோ கற்றான். எந்தெந்த உருவிலோ இருப்பை
நிலை நாட்டினான் – அவனவன் ருசிக்கும் அவனவன் திறமைக்கும் ஏற்ப. நாலும் நடந்து முடிந்த பின்னே நந்ல்லது கெட்டது தெரிந்து கொண்டு, ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா ‘என்று இறைவனடி சேர்ந்தான்.
அனேகமாக உங்களுக்கு அரிச்சுவடி தெரிந்திருக்கும். உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18,
ஆயுத எழுத்து1, உயிர்மெய் எழுத்து 216. மொத்தம் 247 எழுத்துக்கள். பின்னர் ஒற்றையெழுத்து வார்த்தைகள் ஈரெழுத்து, மூவெழுத்து, நான்கெழுத்து வார்த்தைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. பாடல் வாயிலாக. பாடிப் பழகுவதால் மனப்பாடம் ஆகும் . (நெட்டுரு) குருட்டுப்பாடம் வேறு மனப்பாடம் வேறு என்பதைப் புரிந்து
கொள்க. மனம் ஒரு கணினியைப் போல் விரைவாகச் செயல்படும் விதத்தில் பழக்கப்படுத்தப்பட்டது
அன்றைக்கு. சில பாடல்களை இனி வரும் வாரங்களில் பார்ப்போம்.

Advertisements