திண்ணைப்பள்ளிக்கூடம்
நடத்துபவர் – ஆண்டி வாத்தியார் (புதுவை ஞானம்)
(பகுதி – 2)

சென்ற இதழில் திண்ணைப் பள்ளியின் பாடல்கள் பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம்.
அவற்றில் பலவிதம் உண்டு. முதலில் அரிச்சுவடி (எழுத்து வரிசை) சொல்லிக் கொடுத்த
சில பாடல்களைப் பார்ப்போம். முடிந்தால் உங்கள்குழந்தைகளுக்குப் பாடிக் காட்டும்படி வேண்டுகிறோம்.
‘அ’-னா… ”ஆ-வன்னா,
”இ-னா… ‘ஈ’-யன்னா…
‘உ’-னா என்று சொல்லடா
என் சின்னக்கண்ணே!
‘ஊ’-வன்னா ‘எ’-னா
‘ஏ’-யன்னா ‘ஐ’-யன்னா
ஓ-னா என்று சொல்லடா
என் செல்லக்கண்ணே.

இதுவே கிண்டலாகவும் கேலியாகவும் பாடினால் :

‘அ’னா ஆவன்னா
அவனுக்கு வந்த கேடென்னா?
‘இனா , ஈயன்னா
இவனுக்கு வந்த வாழ்வென்னா ? என வரும்.

ஆரம்பத்தில் வகுப்பில் பாடம் கற்க ஆரம்பித்தவுடன் உயிரெழுத்துகள் பன்னிரண்டையும்
இப்படிப் பாடல் வடிவில் அறிமுகப்படுத்தினார்கள்.

“அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போல நல்லார்
ஊரில் எவர் உள்ளார்
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அதுவே எனக்கு வழியாம். ”
அதையே அவ்வைப் பாட்டியும் ‘ஆத்திச்சூடி’ யில் சொல்லியிருக்கிறார். இப்படியாக…
” அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்…
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண்ணெழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஒளவியம் பேசேல்
அ·கம் சுருக்கேல் .”

Advertisements