சித்த மருத்துவக்குறிப்புகள்.

தில்லைப்பால் .

“பாரிசவாதம் சன்னிபாதம் சூலம் குட்டம்
நேருமுடவாதம் சில்விடம் போம்_ பேருரைக்க
இல்லை இல்லை என்றோடு எண்பது வாதமுமே
தில்லை மரப்பாலாற் றெளி.”

திருகு கள்ளி .

“வாத முடக்கறும் வன்கிரந்தி குட்டம் போம்
சீத மொழியும் கிருமி சேருமோ _ மாதே
பருகு பக்க நோயுடனே பாழ் கரப்பான் தீரும்
திருகு கள்ளிப் பாலால் தெளி.”

தூதுவளை .

“தூது பத்திரி ஊன் சுவையாக்கும் படி
தாது வைத்தழைப் பித்திடும் காயமது
வாத பித்த கபத்தையும் மாற்றும் வேர்
ஓதும் வல்லை பண்ணோயொழிக்குமே.”

தேன் .
“புண்ணும் புரையும் போம் போகா கரப்பாணாறும்
எண்ணரிய தீபனமா ஏந்திழையே _ கண்ணாகளில்
பூச்சி புழுவெட்டு கபம் பொல்லா இருமல் அறும்
பேச்சின் மனைத்தேனுக்குப் பேசு.”

தேற்றான் .

“கூற்றென்று உரைக்கும் விழி கோமளமே எப்போதும்
உற்றாம் பிரமியமும் உட்புண்ணும் _ ஆற்றல் இலா
வெட்டை அகக்கடுப்பு வீறி வரித் தேன்றாங்
கொட்டை தனை எடுத்துக்கொள்.”

தேங்காய் .
“வாதம்மாம் பித்தமு வனகரப்பானும் படரும்
தாது மிக விருத்தியாம் தாழ்குழலே _ போத நல்ல
அன்ன மிறங்கும் மதியரிசை உண்டாகும்
தென்னங்காய் பாலால் தெளி.”

தேவதாரம் .

“தேவதாரக்கு ணந்தானள் சேர்ந்துவளர் பீனசத்தை
காதகத்தில் ஓட்டும் சுரப்பலவே _ மாவலர்
சொல்லும் புராண சுரமொடு நீரேற்றத்தை
வெல்லும் மனம் தணிக்கு மெய்.”

நல்லெண்ணெய் .

“புத்தி நயணக்குளிர்ச்சி பூரிப்பு மெய்ப்புகழும்
சத்துவம் காந்தி தனி இளமை _ மெத்த உண்டாம்
கண் நோய் செவி நோய் கபால அழல் காசநோய்
புண்ணோய் போம் எண்ணெயால் போற்று.”

நன்னாரி .

“நன்னாரி வேரை நறுக்கி அரைத்து அதன்
விண்ணாரி ஊனால் வெதுப்பியே _ தின்னவெறி
தோணாது கற்றாழை சோற்றில் கலந்துண்ணக்
காணாது வண்டு கடி.”

நந்தியாவட்டை .

“காசம் படலம் கரும்பாவை தோடம் எனப்
பேசுவிழி நோய்கள் தமைப் பேர்ப்பதன்றி _ ஓசைதரு
தந்திபோலே தெறித்துச்சாறு மண்டை நோய் அகற்றும்
நந்தியா வட்டப்பூ நன்று.”

நண்டு .

“வயலில் உறு நண்டருந்த வாதக்குடைச்சல்
அயலிலும் இருக்காதணங்கெ _ துயிலவொட்டா
வன் சயித்தியம் கரப்பான் மன்குடல் இரைச்சலும் போம்
முன் பயித்தியம் கதிக்கு முன்.”

நத்தை .

“நத்தைக்கறி தனக்கு நாடாது மூலமுதல்
ஒத்தமல ரோகமெல்லாம் ஓடுங்காண் _ நித்தநித்தம்
தின்றால் செரியாது தேடறிய தாது விருத்தி
நன்றாகு மாதே நவில்.”

நல்வேளை .

“நல்வேளப் பூண்டை நாடுங்கால் வாதமும் போம்
சொல்லும் ஐயத்துடனே சோபை அறும் _ மெல்ல மெல்ல
தக்க அனலும் பித்தும் தான் எழும்பும் சாந்தமின்றி
அக்கர நோய் மிஞ்சு அறி.”

நாய் வேளை .

“வாதம் உடற்கடுப்பு வன்சூலை காதிரைச்சல்
ஓதமிகு பீனசமும் ஓடுங்காண் _ போதெறிந்து
காய்வேளைக்காயும் விழிக்காரிகையே வையமதில்
நாய்வேளை உண்ண நவில்.”

நாரத்தை.

“நன்றியுற உலகில் நாரத்தங்காய் அருந்த
வென்றி தரும் புளிப்பால் மெய் சுத்தம் _ அன்றியுமோ
வாதமொடு குன்மம் அறும் கிருமியுய்வாம் போகும்
காதலறு தீபனமாம் காண்.”

நாயுருவி .

“மலிகாரம் கைப்புள்ள அபமார்க்கியின் வேரால் வசியமுண்டாம்
இலைமூல உதிரமந்தம் பேதிகபம் வியர்வு தந்தி இறங்கு மேகம்
மலைஏறும்படி பிரிய முள்ளரிசி பசி மாற்றும் வன்சமூலம் பல
மாதர்க்குள் அழுக்கைநீக்கும் வங்க செந்தூரம் பண்ணுமாதோ.”

நாவல் .

“மாந்தம் விளையும் வலிகரப்பான் உண்டாகும்
சேர்ந்ததொரு நீரிழிவும் சேருமோ _ நாந்தலொடு
வாய்வும் கடுப்பும் வருங்கொதிப்புத் தாகமும் போம்
தூய நாவல் பழத்தால் சொல்.”

நாபி .

“வாதவலி மந்தம் அறல் மாறாக் கர்ப்பினிகள்
ஓது குட்டம் குன்மம் ஓடுங்காண் _ காதலர் தம்
புத்தியோடு ஆருயிரும் தான் பூவும் வனைகுழலே
சுத்தி செய்த நாபியின் பேர் சொல்.”

நில வாகை.

“வாகை அனல் விரணம் வாத வரட்சியுடன்
தாகசுரமும் தணிக்கும் காண் _ ஆகமதில்
அக்கரமெல்லாம் அகற்றி விடும் பூவனமே
அக்கணத்தில் என்றே அறி.”

நிலக்குமிழ் .

“பேதியொடு கண் சொருகர் பேராத சீதளமும்
வாதவலி கொட்டாவி மாந்தமும் போம் _ ஓதச்
சலக்குமிழை ஒத்த தனக் கருங்கண் மாதே
நிலக் குமிழைக்கையிலெடு நீ,”

நிலப்பனை .

“மேக அனல் தணியும் வெண்குட்டம் தான் விலகும்
போக மிகவுறும் பொற்கொடியே _ போகாத
சூலை மேகங்களொடு துன்னு கரும்புள்ளியும் போம்
சால நிலப்பனைக்குத்தான்.”

நிலாவாரை .

“நிலாவாரையின் குணந்தான் நீ கேள் மயிலே
பல மூல வாயு வெப்பு பகவைச் _ சிலகிரந்தி
பொல்லாத குன்மம் பொருமு மலக்கட்டு முதல்
எல்லாம் அகற்றுமென எண்.”

நீர்ப்பூலா.

“மாந்தம் கணம் பொருமல் மாறா சலத்துடனே
சேர்ந்த சொறி சிரங்கும் தீரும் காண் _ ஏந்தொழிலைச்
சேர்ப்பாகக் கொண்ட செந்திருவே பூவிலுறை
நீர்ப்பூலகப் பூண்டை நினை.”

நீரடிமுத்து .

“நீரடி முத்துக்கு நீங்கா கிரந்தி குட்டம்
போரிடு வாதமுமே போகும் காண் _ காரடுக்கும்
மென்குழலாய் பித்தம் மிகும் அலை உண்டாகும்
முன் கிளர் நமைச்சலறு முன்.”

நுரை .

“பட்டை கரப்பானோடு பாரஞ் சிலேத்தும சுரம்
ஒட்டி நின்ற புண் கிராந்தி ஓட்டும் காண் _ மட்டவரை
ஏந்து நுணாவின் இலை மந்தந்தீர்த்து நல்ல
காந்தி தரும் மேகம் அடும் காண்.”

நெல்லி முள்ளி .

“ஆக வலஞ்சசி அசுர்க்கு என்புருக்கி கண் நோய்
தாக முதிரப் பித்தந் தாது நட்டம் _ மேகனத்தின்
இல்லி முள்ளியாபோல் அருக்கலெண் காமிய வியங்கம்
நெல்லி முள்ளியாற் போ நினை.”

நெய் .
“தாகம் அழலை கட்கம் சர்த்தி பித்தம் வாயுபிர
மேகம் வயிற்றெரிவு விக்கல் அழல் _ மாகாசம்
குன்மம் வறட்சி குடல் புரட்டல் அத்தி சுட்கம்
சொன் மூலம் போக்கு நிரைத் துப்பு.”

நெல்லிக்காய் .

“நெல்லிக்காய்க்குப் பித்தம் நீங்கும் அதன் புளிப்பால்
செல்லுமே வாதம் அதில் சேர்துவரால் _ சொல்லும் ஐயம்
ஓடும் இதை சித்தத்தில் உண்ண அனலுடன்
கூடும் பிரமேகமும் போம் கூறும்.”

நெரிஞ்சில் .

“நல்ல நெரிஞ்சிலது நாளும் கிரிச்சரத்தை
வல்ல சுரம் அனலை மாற்றும் காண் _மெல்லியலே
மாநிலத்தில் கல்லடைப்பும் வாங்காத நீர்க்கட்டும்
கூனுறு மெய் வாதமும் போக்கும்.”

நேர்வாளம் .

“ஓதில் உதரத்தூறு மலம் பன்நோய் விலகும்
பேதி மருந்தில் பெரிதாகும் _ வாதம் அறும்
கூர் வாளை ஒத்த கொம்பனையே பண்டிதர் சொல்
நேர் வாளக் கொட்டைதன நீ.”

நொச்சி .

“நாசம் தருவாதம் நாசிப்பிணியழல் சு
வாசம் தசனவுறு வந்தோடம் _ காசம் அறல்
உச்சியையடயை உறை நோயும் என்படுமோ
நொச்சி அடையை நுவல்.”

Compiled by:

PUTHUVAIGNANAM

Advertisements