காட்டுக்குள்ளே திருவிழா.
____________________________________________________________

குழந்தைகளுக்கான இசை நாடகம்.
இயற்றியது _ புதுவைஞானம்.
______________________________
காட்சி _ 1

ஏலேலோ காட்டுக்குள்ளே ஏலேலோ
பனிபெய்து காற்றடித்தது ஏலேலோ
பனி பெய்து காற்றடித்து ஏலேலோ
பல்லெல்லாம் கிடு கிடுத்தது ஏலேலோ
குளிராலே . . . .
பல்லெல்லாம் கிடு கிடுத்தது ஏலேலோ.

குளிர் தாங்க முடியாமல் ஏலேலோ
குட்டி முயல் தவித்திடுதாம் ஏலேலோ
தவித்த முயல் ஓடிப்போய் ஏலேலோ
போர்வை ஒன்று வாங்கிட்டுதாம் ஏலேலோ

போர்த்திக்கொண்டு போகையிலே ஏலேலோ
பொல்லாத கற்றடித்தது ஏலேலோ
பொல்லாத காற்றடித்து ஏலேலோ
போர்வை. . . . . .
அந்தரத்தில் பறந்து விட்டது ஏலேலோ
அந்தரத்தில் பறந்த போர்வை ஏலேலோ
ஆற்றுக்குள்ளே விழுந்து விட்டது ஏலேலோ

போர்வை போன துயரத்திலே ஏலேலோ
புலம்புகின்றது குட்டி முயல் ஏலேலோ
புலம்புகின்ற ஓசை கேட்டு ஏலேலோ
பன்றி ஒன்று வந்து நின்றது ஏலேலோ
முள்ளம் பன்றி ஒன்று வந்து நின்றது ஏலேலோ
முள்ளு முள்ளாய் உடல் முழுதும் ஏலேலோ.

****************************************

முள்ளம்பன்றி :

“புலம்பாதே முயலுக்குட்டி புலம்பாதே
நான் பிடித்துத்தாரேன் போர்வையைத்தான் புலம்பாதே !”

****************************************
காட்சி_ 2.

முள்ளம்பன்றி முயன்று முயன்று ஏலேலோ
போர்வையைப் பிடித்திடுத்தாம் குச்சியாலே ஏலேலோ
பிடித்தெடுத்த போர்வயைத்தான் ஏலேலோ
பிழிந்து உதறிப் போர்த்திட்டுதாம் ஏலேலோ
பனி பெய்து காத்தடித்து ஏலேலோ
பல்லெல்லாம் கிடுகிடுத்தது ஏலேலோ.
*****************************************

முள்ளம்பன்றி :

“காற்றடிக்கும் காலத்திலே முயலுக்கண்ணே
போர்த்திகொண்டால் போதாது முயலுக்கண்ணே
சட்டை ஒன்று தைத்துக்கொண்டால் முயலுக்கண்ணே
பத்திரமாய் ஓடலாமே முயலுக்கண்ணே!”

முயல் குட்டி :

“நல்லாதாங்க இருக்குதண்ணே உங்கள் யோசனை
இல்லாதவன் நான் எப்படிங்க சட்டையைத் தைப்பேன்?”

முள்ளம்பன்றி :

“சட்டை ஒன்று தைத்துப்போட முயலுக்கண்ணே
என்னவேண்டும்? ஊசி நூலு இரண்டும் தானே?
என் முதுகு முழுக்க முள்ளாயிருக்கே முயலுக்கண்ணே
அதிலே ஒன்று ஊசியாகும் முயலுக்கண்ணே!”

முயல் குட்டி :

“ஊசிக்கவலை தீர்ந்துவிட்டது பன்றி அண்ணே
நூலுக்கவலை யாரு தீர்ப்பார் ? பன்றி அண்ணே!”

முள்ளம்பன்றி :

“பட்டுப் பூச்சி பாப்பாவிடம் கேட்டுப் பார்க்கலாம்
பாசத்தோடு அவள் தருவாள் முயலுக்கண்ணே!”

***************************************************
காட்சி _ 3.

ஏலேலோ காட்டுக்குள்ளே ஏலேலோ
இலவ மரம் பூத்திருக்காம் ஏலேலோ
இலவ மரத்தடியினிலே ஏலேலோ
முசுக்கொட்டைச் செடி முளைச்சிருக்குது ஏலேலோ
முசுக்கொட்டைச் செடி மேலே ஏலேலோ
மொசமொசன்னு பட்டுப்பூச்சி ஏலேலோ

மொசமொசன்னு பட்டுப்பூச்சி ஏலேலோ
வசவசன்னு வலை பின்னுதாம் ஏலேலோ.

**********************************************
முள்ளம் பன்றி :
“வசவசன்னு வலையைப்பின்னும் பட்டுப் பெண்ணே
முயலைக் கொஞ்சம் கவனிச்சியா ? பட்டுப்பெண்ணே!”

பட்டுப்பூச்சி :

“முயலுக்கென்ன மோசம் இப்போ? பன்றி மாமா
முடை வராம பார்த்துக்கிடலாம் பன்றி மாமா.”

முள்ளம் பன்றி :

“பனியினாலும் குளிரினாலும் பட்டுப்பெண்ணே
குட்டி முயல் நடுங்குது பார் பட்டுப்பெண்ணே
சட்டை ஒன்று தைத்துக்கொண்டால் பட்டுப்பெண்ணே
கஷ்டம் தீரும் குளிரும் போகும் பட்டுப்பெண்ணே
சட்டை தைக்க வேண்டுமென்றால் பட்டுப்பெண்ணே
ஊசி நூலு இரண்டும் வேண்டும் பட்டுப்பெண்ணே
ஊசி என்னால் கொடுக்க முடியும் பட்டுப்பெண்ணே
நூலு நீதான் உதவ வேண்டும் பட்டுப்பெண்ணே!”

பட்டுப்பூச்சி :

“நூலுக்கென்ன பஞ்சமிங்கே பன்றி மாமா
சிப்பம் சிப்பம் நான் கொடுப்பேன் பன்றி மாமா
ஆனாலும், ஊசி நூலு போதாது பன்றி மாமா
தையற்காரன் வேண்டுமிப்போ பன்றி மாமா!”

முள்ளம் பன்றி :

“தையற்காரர் எங்கிருப்பார்? பட்டுப்பெண்ணே
தன்னந்தனியாய்த் தவிக்கலாச்சே பட்டுப்பெண்ணே.”

பட்டுப்பூச்சி :

“தூக்கணாங்குருவி மச்சான் இருக்கும்போது பன்றி மாமா
துக்கமென்ன உங்களுக்கு? பன்றி மாமா.”

*******************************************
காட்சி_ 4 .

ஏலேலோ காட்டுக்குள்ளே ஏலேலோ
இலவ மரம் பூத்திருக்காம் ஏலேலோ
இலவ மரம் பக்கத்திலே ஏலேலோ
ஈச்சமரம் பழுத்திருக்கு ஏலேலோ
பழுத்த மரம் உச்சியிலே ஏலேலோ
குருவி கட்டுதுவாம் மெத்தைக்கூடு ஏலேலோ.

************************************************

பட்டுப்பூச்சி :

“காச்சு மூச்சு சப்தம் போடும் குருவி மச்சான்
ஒரு உதவி தேடி வந்திருக்கோம் குருவி மச்சான்”

தூக்கணாங்குருவி :

” அத்திப்பூ பூத்தாற்போல ஏலேலோ
அத்தை மகள் வந்திருக்கே ஏலேலோ
எட்டுத்திசை சென்று வந்தும் ஏலேலோ
உன் ஆசையை நான் பூர்த்தி செய்வேன் ஏலேலோ.”

பட்டுப்பூச்சி :

“பனியினாலே குளிரினாலே ஆசைமச்சான்
குட்டி முயல் நடுங்குதுவே ஆசைமச்சான்
சட்டை ஒன்று தைத்துக் கொடுத்தால் ஆசைமச்சான்
நடுக்கம் தீரும் குளிருபோகும் ஆசைமச்சான்
ஊசி நூலு கொண்டு வந்தோம் ஆசைமச்சான்
உடனடியாய் தைத்துத் தரணும் ஆசைமச்சான்.”

தூக்கணாங்குருவி :

“தைப்பதற்கு தடையேதும் இல்லையே பெண்ணே
தலயணையுரை போல் போய்விடுமே நானு தைச்சாக்கா
அளவறிந்து வளைவறிந்து வெட்டி தந்தாக்கா
அழகு அழகா தைத்துத் தருவேன் பட்டுப்பெண்ணே.”

பட்டுப்பூச்சி :

“வெட்டத்தெரிந்த ஆளு யாரு இந்த வட்டாரத்துள்ளே
விரைந்து ஓடி அழைத்து வருவேன் நொடி நேரத்துள்ளே”

தூக்கணாங்குருவி :

“வெட்டுக்கிளி தம்பி இங்கே இருக்கும் போது
வெட்டிப் பேச்சு நமக்கெதுக்கு அழைத்து வந்திடலாம்.”

*************************************
காட்சி _ 5 . (தொடரும்)

Advertisements