சிவபோக சாரம் தொடர்ச்சி.
பகுதி _ 6 _

அனைத்து உலகும் நம்மால் அநுக்கிரகம் பெற்று என் ?
அனைத்துலகும் நம் வசமாய் ஆய் என்? _ அனைத்து உலகும்
கொண்டாடில் என்னை? வினைக்கொத்து அறுத்துப் பேரின்பம்
கண்டாடில் அன்றோ கதி.

அறிவு இழந்து நின்ற சுக ஆனந்தத்து உள்ளே
குறி இழந்து நின்று குலாவிப் _ பிறியாது
இருந்தால் பிறப்பு அறுமோ?விச்சைமால் கொண்டு
திரிந்தால் பிறப்பு அறுமோ? செப்பு.

எத்திசையும் எவ்வுலகும் எத்தொழிலும் எப்பயனும்
நித்தியம் என்று எண்ணின் நிலையாதே _ புத்தியினால்
கண்ணாடியில் தோன்றி மாய்ந்து விடும் காண் இவற்றைக்
கண்ணாடியில் கனவில் காண்.

எத்தனைதான் கற்றாலும் எத்தனைதான் கேட்டாலும்
எத்தனை சாதித்தாலும் இன்புறா _ சித்தமே
மெய்யாகத் தோன்றி விடும் உலக வாழ்வு அனைத்தும்
பொய்யாகத் தோன்றாத போது.

மின் போலத்தோன்றிடும் உலக வாழ்வு அனைத்தும்
என்போலிகள் திரமென்று எண்ணுவர்_தன்போதம்
இல்லார் சிவபோகம் என்றும் அருந்தியிடு
நல்லார் திரம் இது என்னார்.

தேசம் ஊர்பேர்காணி சீர்வரிசை சாதியெனும்
ஆசையால் நெஞ்சே! அலையாதே _ நேசப்
பொருப்பானை நின்று அறிவில் போக்கு வரவுஅற்று
இருப்பானைப் பார்த்தே இரு. 113

ஆகம் பகை ஆவது அன்றிப் பகை உண்டோ?
மோகம் தவிர்த்த முனிவோர்க்கு இங்கு _ ஏகன்
இருவர் அறியாத ஈசன் அருள் அல்லால்
ஒருவர் துணை உண்டோ ? உரை.

அளவிலாச் செல்வத்து அடைந்தாலும் ஆகத்து
அளவிலாச் சித்திகள் உண்டாயும் _ அளவில் கலை
ஆய்ந்தாலும் என்னை? சுகர் அல்லர் சிவானந்தம்
தோய்ந்தார்கள் அன்றோ சுகர்.

ஆகாத காரியம் செய்து ஆம்சுகமும் ஆங்கதனால்
போகாத துக்கம் பொருந்துவதும் _ ஓகோ
உரைக்கில் அணுவுக்கும் உயர்ந்த மாமேரு
வரைக்கும் நிகராம் மதி.

பொஊஇல் வரும் துன்பம் புகுந்து அறிந்தும் பூரணமா
மெய்யில் வரும் இன்ப விளைவு அறிந்தும் _ ஐயோ
தெளியாதது என்ன? நலம்தீங்கு கண்டு சற்றும்
களியாதது என்ன மயக்கம்.

ஆகம் சிறைச்சாலை அக்கரணம் காவலாள்
போகம் புவனம் பொருந்தும் இடம் _ ஒகோ
இதனுள் படும் உயிர்கட்கு ஈடேற்றம் செய்வான்
அதனுக்கு இறைவன் அரன்.

அதிட்டானம் ஈசன் அருள் அன்றி மற்றை
அதிட்டானம் எல்லாம் அநித்தம் _ அதிட்டானம்
பொய் என்று அறியாமல் பூதலத்து நெஞ்சமே!
மெய் என்று உழல்வது எல்லாம் வீண்.

நின்னை மதிக்கின் நினக்கு அதிகர் செல்வம் நினை
நின்னை அறிஞன் என நீ நினையின் _ நின்னில்
சிறியார் வறுமை நினை சிந்தை புக என்றும்
குறியா இடும்பை துக்கம் கோள்.

அநித்தியத்தை நித்தியம் என்று ஆதரிக்கும் பொல்லா
மனித்தருடன் கூடி மருவார் _ தனித்திருந்து
மோனந்தமாம் சிவத்தில் மூழ்கி மலத்தை அறுத்து
ஆனந்தமாய் அழுந்துவார்.

தாகம் மறந்து சதுர் மறந்து தான் மறந்து
தேகம் மறந்து அட்டமா சித்தி மறந்து _ ஆகத்தின்
வந்தது அறியாது இருந்து மாறாச் சிவானந்தம்
சந்ததம் வாழ்வார்க்கு ஆர்சரி.

உள்ள மலம் நீங்கி ஒழியாச் சிவானந்த
வெள்ளம் துளைந்து விளையாடும் _ பிள்ளைகாள்
அத்துவிதம் ஆனீர் நம்மாகம் பிரிந்தோம் என்று
இத்துவிதம் எண்ணுவானேன்.

அறிவாய் அறிவு இழப்பில் ஆகின்ற இன்பச்
செறிவாய் சுகமாய்த் தினமும் _ பிறியாது
இருந்து அங்கு அதீதமாய் ஏய்ந்த சிவானந்தம்
பொருந்துவார் முத்தரெல்லாம் போய்.

தனை அறியார் ஈசன்தனை அறியார் பாச
வினை அறியார் ஆனந்தம் மேவார் _ தனை அறியும்
சிட்டர் தமக்கு இல்லாத தீங்கு உரைப்பர் பொல்லாத
துட்டர் தமக்கு உள்ள தொழில்.

தன்னை அறியார் தலைவன் தனை அறியார்
முன்னை வினையின் முடிவு அறியார் _ பின்னைக்
குருக்கள் என்றும் பேரிட்டுக் கொள்ளுவார்கள் ஐயோ
தெருக்கள் தனிலே சிலர்.

வாயுவெளிதான் அசையாதவாறு இருந்தால் போல் என்று
நீயதுவும் பூரணமாய் நிற்கவே_ காயத்துக்கு
உள்ளுக்குள்லேதான் சிவம் என்று உற்றுப்பார்ப்பார் ஊசிப்
பொள்ளலால் வான் பார்ப்பார் போல்.

கற்க இடர்பட்டு மிகக் கற்றஎல்லாம் கற்றவர்பால்
தற்கம் இட்டு நாய் போலச் சள்ளெனவே _ நற்கருணை
வெள்ளம் அடங்கும் விரிசடையார்க்கு ஆளாகி
உள்ளம் அடங்க அல்லவோ.

அறியார் கனவிலும் ஆனந்த ரூபம்
அறிவார் தமையும் அடையார் _அறிவார்கட்கு
இல்லாத தீங்கே எடுத்து உரைப்பார் இவ்வுலகில்
பொல்லார் தலையில் பொறி.

நீதி இல்லா மன்னர் இராச்சியமும் நெற்றியிலே
பூதி இலார் செய்தவமும் பூரணமாம் _ சோதி
கழல் அறியா ஆசானும் கற்பு இலரும் சுத்த
விழல் எனவே நீத்துவிடு.

ஐந்தறிவால் கண்டாலும் ஆர் ஏது சொன்னாலும்
எந்த விருப்பு வெறுப்பு ஏய்ந்தாலும் _ சிந்தையே!
பார விசாரத்தைப் பண்ணாதே ஏதொன்றும்
தீர விசாரித்துச் செய்.

பரபரக்க வேண்டா பலகாலும் சொன்னேன்
வரக்கண்டு ஆராய் மனமே _ ஒருவருக்கும்
தீங்கு நினையாதே செய்நன்றி குன்றாதே
ஏங்கி இளையாது இரு.

மிகுந்த குலம் செல்வத்து மேவுவதும் அத்தைப்
பகுத்துப் பொய் என்று விடும் பாங்கும் _ தொகுத்து
விரித்தால் நன்னெஞ்சே! மிகு வாரணத்தை
உரித்தான் செயல் என்று உணர்.

ஆறு ஆறு தத்துவம் வைத்து அத்தில் உறை மூர்த்திகள் வைத்து
ஏறா மலபாகம் ஏறவே _ மாறாமல்
உன்னை விடாது ஆள்வான் உனைக்கேட்டோ நெஞ்சமே
என்ன விசாரம் எமக்கு.

தானோ அசத்து அல்ல என்று அறிந்தால் தாரணியில்
ஏனோ பிதற்றிடுவது ஏழை நெஞ்சே _ தானே
தானே இறவாது தான் இறக்க அருளை
மறவாது இரு சிவம் ஆவை.

ஏற்றாது அவையாய் இருப்பதுவும் உள்மயக்கம்
ஆற்றாது தீர் என்று அறற்றுவதும் _ தோற்றாது
தோற்றுவதும் உன்னைச் சுக பூரணன் என்று
தேற்றுவதும் ஈசன் செயல்.

அன்றே அரன் அணுக்கள் பாசங்கள் ஐந்தொழில்கள்
நன்றே சிவனும் நடுவனே _ சென்று அருளில்
நிற்கச் சிலர் சிலர்கள் நீள் நரகில் பூதலத்தில்
சொற்கத்து இருப்பது என்னோ சொல்.

ஆசை அறாய் பாசம் விடாய் ஆனசிவ பூசை பண்ணாய்
நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய் _ சீ சீ
சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்
மனமே உனக்கு என்ன வாய் ?

தில்லைவனம் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனம் கூடல் முதுகுன்றம் _ நெல்லை களர்
காஞ்சி கழுக்குன்றம் மறைக்காடு அருணை காளத்தி
வாஞ்சியமென் முத்தி வரும்.

சிவபோக சாரம் முற்றிற்று _ சிவ சிவ.

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழாசான்
திரு. அ.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு காணிக்கை.

Advertisements