சிவபோக சாரம் _பகுதி – 4 –

தேகம் நாம் என்று என்று செப்புவீர் ஈதில்வரும்
போகம் நாம் என்று புலம்புவீர் _ நோக
வருந்துவீர் தீவினையின் மாறாத இன்பம்
பொருந்துவீர் எப்படி நீர் போய்?

தன்னை இழந்திடத்தே தானே சுக வடிவாய்
இன்னபடி என்று அரியா எங்கோனுள் _ பின்னமற
நின்ற நிலை தானும் தெரியாதே நின்றவர்கட்கு
அன்றோ பிறப்பு அறுக்கலாம்.

உன்னாதே பற்று உரையாதே ஒன்றியதில்
நின் நாமம் இல்லை நிகழாதே _ பன்னாள்
பரை இழந்து நிற்கும் பயன் அணைந்தார் நெஞ்சில்
திரை இழந்து நிற்கும் சிவம்.

அருள் அறிந்து தானாம் அறிவு அறிந்தே ஆங்கு உள்
பொருள் அறிந்து தான் அடங்கிப் போத _ இருள் அகல
விம்மாது இருந்து விகற்பமற ஒன்றாகிச்
சும்மா இருக்கை சுகம்.

செறியும் தனுஆதி சேர்ந்துஅறிந்து நின்ற
அறிவை அறிவால் அறிந்தே _ அறிவிழந்து
நின்றால் சுகானந்த நீடு நிலை வேறு
சென்றால் சுகம் கிடையாதே.

தத்துவத்தை விட்டு அருளில்தான் கலந்து தன் இழப்பில்
மெத்தும் சுகத்தில் மிக அழுந்திச் _ சுத்தமாய்
ஒன்றாகி நின்ற உணர்வும் ஒழிந்தக்கால்
அன்றோ சிவ போகமாம்.

கட்டறிவு கெட்ட சுகாதீத உண்மையிலே
விட்டு அகலாது என்றும் விரவுவோர் _ இட்டமுடன்
யோக சமாதிகளும் உட்புறம்பாம் பூசைகளும்
ஆக நினையார் அவர்.

நின் அறிவில் யான் ஒளித்து நீஆகி நின்றது போல்
என் அறிவில் நீஒளித்தே யான் ஆகி _ எந்நாளும்
நிற்க வல்லமையாகில் நின் சனனம் போக்குதற்குக்
கற்கவல்லது ஏதும் இல்லை காண்.

இன்ப சுகத்துள்ளே இருக்கலாம் எப்போதும்
துன்பவினை உன்னைத் தொடராது _ வன்பா
மருள் தேகமாய் அடங்கி மாயாமல் நெஞ்சே
அருள் தேகமாய் அடங்குவாய்.

தேகம் மறந்து திருவருளாய் நின்று சிவ
போகம் விளையப் புணர் நெஞ்சே _ நோக
வருந்தாமல் தீவினையில் வாடாமல் துன்பம்
அருந்தாமல் நீ பிறவாமல்.

பூதாதி பாசம் அன்றோ பூரணா னந்தமன்றோ
பேதமற நம்முள் பிரான் அன்றோ _ வாதனைகள்
விட்டால் சுகமன்றோ என்று உணர்வில் வேண்டுவதும்
கெட்டால் பிறப்பு கெடும்.

அழுந்தாதே பாசத்து அனுதினமும் ஐயோ
விழுந்தால் எழுந்திருக்க வேண்டும் _ செழும்பாகை
மீறித் தரும் இரத வீட்டுஇன்ப மாமலை மேல்
ஏறித் திரும்பலாமே. 71

என்றும் சனனத்து இடர்க்கடலிலே மூழ்கிப்
பொன்று மனமே!உனக்கு ஓர் புத்தி கேள் _ நன்று
கனிச்சங்கம் சேராமல் தற்பரனைச் சேரில்
இனிச்சங்கம் சேராதிரு.

அவரவர்க்கு உள்ளபடி ஈசன் அருளாலே
அவரவரைக் கொண்டு இயற்றுமானால்_ அவரவரை
நல்லார் பொல்லார் என்று நாடுவது என் நெஞ்சமே
எல்லாம் சிவன் செயல் என்று எண்.

எங்கே நடத்துமோ? எங்கே கிடத்துமோ?
எங்கே இருத்துமோ என்றறியேன் – கங்கைமதி
சூடினான் தில்லையிலே தொம் தொம்மெனநின்று நடம்
ஆடினான் எங்கோன் அருள்.

போகம் புவனம் பொருந்தும் இடம் எங்கெங்கும்
தேகம் கரணம் திரியுமே _ யாகில் அது
தன்னை நீஎன்று தவியாதே நெஞ்சமே
நின்னையே கண்டு அருளில் நில்.

ஏதேது செய்திடினும் ஏதேது பேசிடினும்
ஏதேது சிந்தித்து இருந்திடினும் _ மாதேவன்
காட்டிடுவதான அருள் கண்ணைவிட்டு நீங்காது
நாட்டம் அதுவாய் நட.

எடுத்த உடற்கு ஏய்ந்த கன்மம் எப்போதும் ஊட்டும்
விடுத்துவிட்டோம் என்பர் விழலர் _ விடுத்தது
அதுவன்றே ஐந்து மலம் ஆறும் ஆறும் நீத்த
இதுவன்றோ யாம் துறவு என்போம்.

எவ்வுயிரும் காக்க ஓர் ஈசன் உண்டோ இல்லையோ
அவ்வுயிரில் நாம் ஒருவர் அல்லவோ _வவ்விப்
பொருகுவது நெஞ்சே புழுங்குவதும் வேண்டா
வருகுவதும் தானே வரும்.

முப்பதும் சென்றால் விடியும் முப்பதும் சென்றால் இருளும்
அப்படியே ஏதும் அறிநெஞ்சே _ எப்பொழுதும்
ஆம்காலம் எவ்வினையும் ஆகும் அது தொலைந்து
போம்காலம் எவ்வினையும் போம்.

ஆவ லுற்றிடும் சகலத்து ஆவதும் ஆங்கவரே
கேவலத்தில் மூழ்கிக் கிடப்பதுவும் _ நா அரற்றல்
இல்லாத கத்தத்து இருப்பதுவும் இம்மூன்றும்
இல்லான் செயல் என்று இரு.

பாசம் சடம் உயிரோ தானாகப் பற்றறியாது
ஈசன் இரண்டும் இணைத்து ஆட்டிப் _ பூசல் என்றும்
செய்பவனே தானே திரும்பி அருள் செய்யாமல்
உய்பவர்கள் உண்டோ உரை.

முற்றின்பாம் அறிவில் மூழ்குவதும் மோகம் மிகு
சிற்றின்பமாம் அருளில் சேர்குவதும் – உற்று இங்கு
அறிந்தால் என் நெஞ்சே!அகிலாண்டம் எங்கும்
செறிந்தான் செயலே தெளி.

என்னிடத்தில் நின் செயலே இல்லையென்றால் யாது உறினும்
நின்னிடத்தில் யான் வேண்டல் நிச்சயமே _ என்னிடத்தில்
இன்மை உயிர்க்கு உயிர்நீ இன்மை இருந்து இயற்றின்
நன்மை தீமைக்கு எதுவோ நான். (83)

பகுதி – 5 .

நாம் பெரியம் என்னும் அதை நாடாது அடக்குமவர்
தாம் பெரியர் என்று மறை சாற்றியிடும் _ நாம் பெரியர்
என்பார் சிறியர் இவரலாது இவ்வுலகில்
துன்பு ஆர் சுமப்பார்கள் சொல்.

கட்டமாம் காயம் கலை அனைத்தும் கற்றாலும்
அட்டமாசித்தி அடைந்தாலும் _ இட்டம்
பரம சுகமே பதியாத போது
திரம சுகமே தெளி.

மனம் வாக்குக் காயம் உயிர் மன்னி அசைப்பானும்
அனம் ஆதிபோகம் அளிப்பானும் _ நனவு ஆதி
கூட்டி விடுவானும் முக்தி கூட்டிடுவானும் பிறப்பில்
ஆட்டிவிடுவானும் அரன்.

முன்னை வினைக்கு ஈடா முதல்வன் அருள் நமைக்கொண்டு
என்ன வினை செய்ய செய்ய இயற்றுமோ _ இன்னவினை
செய்வோம் தவிர்வோம் திரிவோம் இருப்போம் இங்கு
உய்வோம் எனும் வகை ஏது.

ஊட்டும் வினை இருந்தால் உன்ஆணை உன்பதத்தைப்
பூட்டிப் பிடித்துப் புசிப்பிக்கும் _கேட்டுத்
திரியாதே வந்து தில்லைத் தெய்வமே என்றென்று
எரியாத நெஞ்சே இரு.

என்னது அன்று நின் செயலே என்று அறிந்தால் யான் விரும்பி
என்ன என்று வாய் திறப்பேன் ஈசனே _ இன்னமின்னம்
எப்படியோ நாயேனை ஈடேற்ற வேண்டும் உனக்கு
அப்படியே செய்து அருளுவாய். 89

வன்மைபுரி காய மரப்பாவை தன்னை அரன்
கன்மமெனும் சூத்திரத்தால் கட்டியே _ நன்மைதின்மை
ஆட்டுவது நாடாது அறிவிலார் தம்செயலாய்
நாட்டுதல் போல் உண்டோ நகை.

ஆறுஆறு தத்துவமும் ஆணவமும் நீங்கி உயிர்
பேறாக ஆனந்தம் பெற்றாலும் _ வேறாகப்
பார்த்திருப்பது அன்றியே பாழான கன்மத்தை
நீத்திருக்கலாமோ நிலத்து.

ஆன சுக துக்கத்து அழுந்துகினும் ஞானிகள் தாம்
யான் எனது எண்ணி இயைந்திடினும் _ தான் அதற்கு
வேறு என்றுஅருளால் விரளமாய்க் காணில் என்றும்
ஏறுமோ கன்மம் இலை.

சத்துருவும் மித்துருவும் தாரணியில் வேறு இல்லை
சத்துருவும் மித்துருவும் தன் நெஞ்சே _ பெத்தமலம்
வீட்டும்படிக்கு வினைக்கு ஈடு உனைத்தனுவோடு
ஆட்டும் சிவன் என்று அறி.

இன்னவினை இன்னதலத்து இன்னபொழுது இன்னபடி
இன்னதனால் எய்தும் என அறிந்தே _ அன்ன வினை
அன்னதலத்து அன்னபொழுது அன்னபடி அன்னதனால்
பின்னமறக் கூட்டும் பிரான்.

அன்றே அநாதி அமைத்தபடி அல்லாது ஒன்று
இன்றே புதிதாய் இயையுமோ _ என்றும்
சலியாது இயற்றுவான் தன்னையே நோக்கி
மெலியாது இருந்து விடு.

ஆர்பெரியர் ஆர்சிறியர் ஆர்உறவர் ஆர்பகைஞர்
சீர் பெரியர் ஆனந்த சிற்சொரூபர் _ பேர் பெரியர்
எங்கெங்கும் தாமாய் இருந்து சடசித்து அனைத்தும்
அங்கு அங்கு இயற்றுவதனால்.

நன் கருத்தே தென்கமலை ஞானப்பிரகாசனே
என் கருத்தே உன் கருத்து என்று எண்ணாமல் _ உன்கருத்தே
என்கருத்து என்று எண்ணியே யான் பட்ட துன்பம் எலாம்
உன்கருத்தே தீர அறியும்.

அமைத்த வினைக்கு ஈடா அநுதினமும் செய்வது
இமைப் பொழுதும் வீண் செயல் ஒன்று இல்லை_ உமைக்கு உரியான்
எல்லாம் அறிந்து எங்கு இயற்றுவதும் தன் அடிமை
வல்லர் தமக்கு உணர்த்துவான்.

கள்ள அரனே கருணையுடன் என் அறிவில்
உள்ள சுகம் தந்துவிட ஒன்னாதோ _ மெள்ள
வருத்துவதும் தீவினையில் வாட்டுவதும் ஞானம்
பொருத்துவதும் ஏன் தான் புகல்.

கேளாது எனை மலத்தில் கிட்டி எடுத்து ஆளாக்கி
மீளாது அளித்த பரவீட்டில் எனை _ ஆள
உனக்குப் பொறியோ உனைத் தொடர்ந்தாளென்ன
எனக்குப் பொறியோ இனி.

சும்மா தனு வருமோ சும்மா பிணிவருமோ
சும்மா வருமோ சுகதுக்கம் _ நம்மால் முன்
செய்த வினைக்கு ஈடாச் சிவனருள் செய்விப்பது என்றால்
எய்தவனை நாடி இரு. 101

பொல்லாத தீவினையில் போகார்கள் போனாலும்
எல்லாம் சிவன் செயலே என்று இருப்பர்_ நல்லார்கள்
நற்றும் கமலையில் வாழ் ஞானப்பிரகாசன் அருள்
சற்றும் பிரியாதவர்.

கூட்டுவதும் கூட்டிப் பிரிப்பதுவும் ஒன்றொன்றை
ஆட்டுவதும் ஆட்டி அடக்குவதும் _ காட்டுவதும்
காட்டி மறைப்பதுவும் கண்ணுதலோன் முன் அமைத்த
ஏட்டின்படி என்று இரு.

உள்ளதுதான் போமோ மற்று இல்லாதது வருமோ
பள்ளமே வெள்ளம் பரவாதோ _ கள்ளமாய்ப்
பித்துப்போலே பிதற்றும் பேதை மட நெஞ்சமே
செத்துப் போனானோ சிவன்.

ஈசன் பலகீனன் என்றக்கால் ஆலயத்தின்
மோசம் வந்ததென்று மொழியலாம் _ ஈசனே
ஆக்குவதும் ஆக்கி அழிப்பதுவும் தான் ஆனால்
நோக்குவது என்? யாம் பிறரை நொந்து.

தேசம் சிவாலயங்கள் சேரவலைய ஒரு
மோசம் வந்தது. ஐயோ முதல்வனே! _ தேசத்து
மண்ணை வெறுப்பேனோ வருவினையை ஊட்டுவிக்கும்
உன்னை வெறுப்பேனோ உரை.

துரத்தி உன்னை ஆசை தொடராமல் என்றும்
விரக்தியினால் ஆங்கவற்றை விட்டுப் _ பரத்தில் அன்பு
செய்யடா செய்யடா சேரப் பிரபஞ்சமெல்லாம்
பொய்யடா பொய்யடா பொய். 107

Advertisements