சிவபோக சாரம் பகுதி _ 3.

நெருப்பு என்றால் வாய்கடுமோ?நெய்பால் கட்டித்தேன்
கருப்பு என்றால் தித்தியா காண்நீ _ விருப்பமுடன்
நீபிரமம் என்றக்கால் நீபிரமம் ஆயினையோ
நீபிரமம் சற்குரு வானில்.

ஆர்க்கும் தெரியாத ஆனந்த இன்ப வெள்ளம்
மேற்கொண்டு விடுகின்றது இல்லை _ யார்க்கும்
தெரியாப் பரப்பிரமம் சேர்த்தாய் உனக்குச்
சரியார் ? சிதம்பர நாதா !

உள்ளம் கரைய உடல் கரைய ஆனந்த
வெள்ளம் கரை புரண்டு மேலாக _ கள்ளமலம்
பொய் ஆக என்னுள் புகுந்தவாறு என்கொலோ ?
ஐயா! தியாக வினோதா !

ஏதேது செய்தாலும் ஏதேது சொன்னாலும்
ஏதேது சிந்தித்து இருந்தாலும் _ மாதேவா !
நின் செயலே என்று நினது அருளாலே உணரின்
என் செயலே காண்கிலனே.

மாயை மலம் எங்கே மறைந்ததோ !மாயைதனில்
ஆயசகம் எங்கே அழிந்ததோ ! காயமதில்
தங்கும் புருடன் எங்கோ ! சச்சிதானந்த வெள்ளம்
எங்கும் மிகக்கோத்ததே.

நானும் சுகவடிவாய் நண்ணினேன் நின் அருளால்
வானும் சுகவடிவாய் மன்னிற்றே _ வானும்
சுகரூபமன்று மணம் தோற்ற நிலம்போல் உன்
அகரூப மட்டே அது.

ஈசன் அடியில் இருக்கையிலே எங்கெங்கும்
ஈசன் அடிதேடி இளைத்தேனே_ பேசரிய
பொற்பதந்தன் செங்கமலப் பொற்பாதன் தன்னுடைய
நற்பதத்தைக் காணாமுன் நான்.

நற்பதம் சேர் ஆரூரின் ஞானப்பிரகாசன் எந்தை
தற்பரன் ஓர் ஞானவான் தந்தானே _ சொற்பனத்தும்
காரார் மறலி அயன் கண்ணனுக்கும் அஞ்சேனை
யாராலும் என் செய்யலாம் ?

வெறும் பாழில் பேரின்ப வெட்டவெளி தன்னில்
குறும்பானார் காணாக்குடிலின் _ உறும்பாசம்
ஒட்டி எனை வைத்தனனே உற்ற பிரபஞ்சம் எலாம்
ஆட்டிய ஞானப்பிரகாசன்.

என்றும் சிவத்தோடு இணைபிரியாதே அறிவாய்
நின்றபடி தன்னை நிகழ்த்தினான் _ மன்றில்
நடம் ஆடும் ஆரூரன் ஞானப்பிரகாசன்
திடமாக என் உள்ளத்தில்.

நாதனார் தென்கமலை நாயனார் எவ்வுயிர்க்கும்
போதனார் செங்கமலப் பொற்பாதர் _ பேதம் அற
ஒன்று இரண்டு தானறவே உண்மையிலே கூட்டி எனை
இன்றறவே வைத்து விட்டாரே.

நன்னெஞ்சே நீ கேட்ட நமை எலாம் சொல்லுதற்குக்
கல்நெஞ்ச மால் அயனும் காணாதோன் _ வன்னெஞ்சர்
இன்னகுறை உண்டு எண்ணா ஈசன் எதிர் வந்தான்
என்ன குறை? சொல்லாய் இனி.

இட்டசனம் எங்கே இதம் அகிதம் தான் எங்கே
துட்டசனம் எங்கே ? தொழில் எங்கே ? – சிட்டருடன்
கூடி இருந்தது எங்கே ? குன்றாச் சிவானந்தம்
நாடி அதுவாய் இருந்த நாள்.

வாக்கு மனம் காயத்தால் வந்த பொருள் அத்தனையும்
வாக்கு மனம் காயமுடன் மாயுமே _ வாக்கு மனம்
காயம் உடன் இழந்து காண் ஞாதிரு ஞான
ஞேயம் இழந்த நிலை.

புசிப்போம் சிவபோகம் பூரணமாய் எங்கும்
வசிப்போம் உலகில் வசியோம் _ முசிப்பின்றி
வாழ்வோம் சிவத்தை உணர் மாதவர்தம் பொன்னடிக்கீழ்த்
தாழ்வோம் எமக்கு ஆர்சரி ?

அறிவுநீ என்ன அறிந்து மாயைச்
செறிவுநான் என்றென்று சேர்ந்தால் _ அறிவு
தெரிந்திடுமோ? இன்பசுகம் சேர்ந்திடுமோ? நின்னைப்
பிரிந்திடுமோ? சென்மப்பிணி.

அரணங்கள் தாம் எரித்த அத்தரே என்னுள்
கரணங்கள் ஒட்டும் வகை காட்டீர் _ கரணங்கள்
நீ அதுவாய் நில்லாமல் நின் அறிவைக் கண்டருளில்
போயதுவாய் நின்றுவிடப்போம்.

தான் அல்லாது அத்தனையும் தான் என்று உழலாமல்
தான் எல்லாமாயதனுள் தாக்காமல் _ தான் எல்லாம்
ஆனோம் எனும் போதத் தாக்காமல் ஈசன் இடத்து
ஆனோனே ஆயினவாம்.
60
தகவல் தொகுப்பு _ புதுவை ஞானம்.

Advertisements