சிவபோக சாரம் _தொடர்ச்சி _ 2 .

பாவி மனம் போகாப் பரத்து அடைய நாளும்
இரவு பகல் அற்ற இடத்தே _ திரமாக
நில் என்றான் கண்ட எல்லாம் நேதி பண்ணி மும்மலமும்
கொல் என்றான் ஞான குரு.

காயம் கரணம் முதல் நான்கிற்கும் காரணம்தான்
ஆய இருள் மாயை அது என்றால் _ தூய பொருள்
போதனே!செங்கமலப் பொற்பாதனே எனை நீ
எது என்று சொல்லாய் இனி.

என்னை அறிவு என்றான் என் அறிவில் ஆனந்தம்
தன்னைச்சிவம் என்றான் சந்ததமும் _ என்னை உன்னிப்
பாரா மறைத்ததுவே பாசம் என்றான் இம்மூன்றும்
ஆராய்ந்தவர் மூத்தராம்.

எங்கும் இருக்கும் அறிவுநீ ஏகமாய்
அங்கங்கு உணர்த்தும் அறிவு நாம் _ பொங்கு
மலம் மறைத்தல் மாயை மயக்கல் விகாரப்
பலம் அனைத்தும் கன்ம மலம் பார்.

செங்கமலப் பொற்பாதன் சீர்பாத வல்லவங்கள்
நம் கமலை வாழ்கிளியே! நாடிக்கேள் _ சங்கை இலாத்
தத்துவத்தைக் காட்டியதின் தத்துவத்தைக் காட்டி அருள்
அருள் தத்துவத்தைக் காட்டியது தான்.

தேகசெறி கமலைச் செங்கமலப் பொற்பாதன்
பேசுதமிழ் ஞானப் பிரகாசன் _ பாச வினை
வாட்டினான் மீட்டுநான் வாராவகை அருளைக்
காட்டினான் கூட்டினான் காண்.

நான் இங்காய் நீஅங்காய் நாட்டமற வைத்ததன் பின்
நான் எங்கே? நீஎங்கே? நாதனே! – வான் எங்கும்
ஒன்றாகி நின்ற உணர்வுநீ உன் அறிவில்
நன்றாகத் தோன்றுசுகம் நாம்.

அலைவு அற்று இருந்த அறிவுநீ ஆங்கே
நிலை பெற்று இருந்த சுகஞேயம் _ மலைவு அற்று
இருந்தது கண்டாயே இருந்தபடி அத்தோடு
இருந்துவிடு எப்போதும் இனி.

அகத்தை இழந்து அருளாய் அவ்விடத்தே தோன்றும்
சுகத்தில் அழுந்திவிடச் சொன்னான் _ மகத்தான
சிற்பரன் ஆரூர்தனில் வாழ் செங்கமலப் பொற்பாத
தற்பர ஞானப்பிரகாசன்.

கிட்டாத ஈசன் உனைக்கிட்டி அருள்புரிந்த
நிட்டானுபூதி நிலையிலே – முட்டாது
இருவன்னி சேர்ந்து மாற்று ஏறிய பொன் போலே
வரும் இன்ப பூரணம் ஆவை.

அநாதி சுகரூபி அரன் அடிக்கீழ் என்றும்
அநாதி சுகரூபி ஆன்மா – அநாதி
இருந்த மலம் போக்கி இறை அருளினாலே
இருந்தபடியே கண்டு இரு.

இற்றைவரைக் காரணத்தோடு இணங்கினையே
இற்றைவரைச் சென்மம் எடுத்தனையே _ இற்றைவரைத்
துன்ப வெள்ளத்து உள்ளே துளைந்தனையே ஈதுஅற நல்
இன்ப வெள்ளத்து உள்ளே இரு.

தேகாதி நான் அல்ல என்று அறிந்தால் சித்தமயல்
போகாதது என்னையோ? புண்ணியா _ தேகாதி
தன் அளவே அம்மயக்கம் சத்தியமாய் எப்பொழுதும்
உன் அளவே இல்லை உணர்.

ஆறு ஆறு தத்துவம் அன்று என்று அறிந்தனையே
ஆறும் ஆறும் கண்டு அறிவன் ஆயினையே _ மாறாமல்
உன் அறிவில் ஆனந்தத்து ஓங்கினையே ஓராமல்
நின்னறிவை விட்டு அதுவாய் நில்.

மாதா பிதாச் சுற்றம் என்று மயங்கினையே
நீதான் தனுவாகி நின்றனையே _ ஈது எல்லாம்
பொய் என்று அறிந்தனையே பூரண ஆனந்த வெள்ளம்
மெய் என்று அறிந்தனையே மெய்.

மனையில் வரு போகத்தின் மாதர் மக்கள் பாச
வினையில் அழுந்தி விடாதே – உனை இழந்து
காணாமல் கண்டானைக் காட்சியறக் கலந்து
பூணாமல் எப்பொழுதும் பூண்.

கத்தவத்தை நாடீடும் சுத்த இராப்பகலா
மெத்தவத்தை நாடி விடுவையேல் _ கத்தவத்தை
தானாய் இரண்டும் தவிர்த்த சிவானந்த
வான் ஆவை நீயே மதி.

கத்தநிலம் உந்தனுக்கு சொல்லக்கேள் தொல்லைவினைத்
தத்துவங்கள் ஆறுஆறும் தாம் பெருகக் _ கத்திடுவர்
எல்லாம் இழந்த இடமே அதுவாக
நில்லாய் அதுவே நிலை.
(தொடரும்) 41

தகவல் தொகுப்பு – புதுவை ஞானம்.

Advertisements