பரிபாஷைச் சொற்களின் விரிவுரை.
————————————————————————————————————-
நான் ஒரு வைத்தியனோ, எழுத்தாளனோ, தமிழ் ஆராய்ச்சியாளனோ அல்ல.
oரு வெறி பிடித்த வாசகன் எனலாம். பாதிக்கு மேல் வாழ்க்கை புத்தகங்களுடன்
கழிந்தது.சிறு வயதிலேயே மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் மீது ஈடுபாடு ஏற்பட
த.நா. சேனாதிபதி, த.நா.குமாரசாமி ,போன்றோர் மொழிபெயர்த்து சாகித்திய
அக்காடமி , நேஷ்னல் புக் டிரஸ்ட் வெளியிட்ட, அநேகமாக 30 – 50 ஆண்டு காலத்தில் வந்த அனைத்து மொழி பெயர்ப்புகளையும் படித்து காலம் கழிக்கையில் தான் ,
தாரா சங்கர் பந்தோபாத்தியாயாவின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ படிக்கும்
வாய்ப்பு கிட்டியது. எத்தனை முறை படித்தேன் ? ஏன் திரும்பத்திரும்பப் படித்தேன் ? நினைவு இல்லை.
அந்த நாவல் பண்டிட் ஜீவன் மஷாய் என்ற ஆயுர் வேத வைத்தியரை மையப்
பாத்திரமாகக் கொண்டு , இந்தியாவுக்கு அலோபதி வைத்திய முறை வந்தது,
பாரம்பரிய வைத்தியர்கள்-அவர்களுக்கும் மக்களுக்கும் இருந்த உறவுகள் ,
இருவித வைத்திய முறைகளுக்கும் இடையே இருந்த நன்மை தீமைகள் என
சகலமானவற்றையும் பேசியதோடு, பிறப்பு -இறப்பு – நோய்கள் பற்றிய இந்திய
தத்துவ ஞானத்தைப் பற்றியும் பேசியது . அத்தோடு கூட இரத்தப் பரிசோதனை,
எக்ஸ்ரே, ஸ்கேனிங், என்று பல பரிசோதனைகள் இன்றியே
நோயாளியின் நாக்கு, வியர்வை நாற்றம், மலத்தின் நிறம், திடம், கண்னின் நிறம்
எல்லாவற்றுக்கும் மேலாக நாடித்துடிப்பு இவற்றக்கொண்டு என்ன நோய் எனத்
தீர்மானிக்கும் ரோக நிதானம் எனப்படும் Diogonosis -முறையில் இந்திய மேன்மை, உஷ்னப்பிரதேசத்துக்கேயான நோய்களின் சிகிச்சை
பற்றியெல்லாம் பேசியது அது. இந்திய கலாச்சாரம் , இந்தியப் பூர்வீக அறிவியல் பற்றியெல்லாம் அக்கரைஉள்ள அனைவரும் படிக்க வேண்டிய நாவல் அது.

அந்த நாவல் தான் , நான் சிறு பிள்ளையாய் இருந்த போது அவ்வபோது என் வீட்டுக்கு வந்து அப்பா அம்மா பாட்டி த்ம்பி தங்கைகள் அனைவருக்கு நாடி பிடித்துப் பார்த்து
விட்டு தேவையான சிகிச்சை அளித்து வந்த குடிகாட்டார் என்ற பெரியவரையும் அவர் போன்ற நல்லவர்கள் இனிப் பிறப்பார்களா என்ற ஏக்கத்தையும் என்னுள்
தோற்றுவித்தது.அவர், யாரும் அழைக்காமலேயே வீடுகளுக்குச் சென்று நாடிபிடித்துப் பார்த்து சிகிச்சை அளித்தார். அவர் பெரும்பாலும் கடைச்சரக்குகளைத் தவிர்த்து மூலிகைகள்,வேர், பூக்கள் ,கனிகளையே மருந்தாகப் பயன்படுத்தினார். அவர் மறைந்து 30 ஆண்டுகள் வரை கூட எங்கள் குடும்பத்தில் யாரும் டாக்டரிடம் சென்று
வைத்தியம் செய்து கொள்ள் வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு வர வில்லை.அவருக்கு வயதாகி நடமாட்டம் குறைந்த காலத்தில் மூலிகைகளின் அடையாளமும்
இருக்குமிடமும் சொல்லி பறித்து வரும்படி என்னிடம் சொல்வார். வேலை கிடைத்து சென்னை சென்ற பிறகுதான் தொடர்பு அற்றுப் போனது.

சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பல வீடுகள் அவரது மருத்துவப் பராமரிப்பில் இருந்த போதும் யாரிடமும் அவர் காசு வாங்கியது இல்லை. வயல் வேலை செய்து தான் ஜீவனம் நடத்தின்னர்.கூடவே, இரவில் லாந்தர் வெளிச்சத்தில் விலாங்கு மீன் , வெள்ளெலி பிடித்து வந்து பகலில் அவற்றை வியாபாரம் செய்தல் இவற்றையும்
வேட்டைக்கார சாதியைச் சேர்ந்த அவர் செய்து வந்தார். தீபாவளி பொங்கல் சமயத்தில் வேட்டி துண்டு வெற்றிலை பாக்கு பழம், ஒரு ரூபாய் வெள்ளிப்பணம் இவற்றை மக்கள் காணிக்கையாகத் தருவதுண்டு.

ஏற்கனவே ‘ஞமலி போல் வாழேல்’ என்ற கட்டுரையில் குடிகாட்டார் என்ற
வைத்தியரைப்பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா , அவர் “பரிபாஷை நிகண்டு’
என ஒரு நிகண்டு இருப்பதாகச்சொன்னார். அவர் அதைப் பார்த்தது இல்லை
என்பதோடு அவருக்குப் படிக்கவும் தெரியாது. அவர் சொன்ன புலிப்பாணி , போகர்
எல்லாம் செவிவழிப்பாடம் தான். நான் கிராமத்தில் இருந்தவரை அவ்வப்போது அவரைக்
கண்டு பேசுவது உண்டு. திடீர் திடீர் என்று காணாமல் போய் விடுவார். மாதக்கணக்கில் கொல்லிமலை ,சுருளிமலை, பொதியமலை,கேரளா பக்கம் சுற்றிவிட்டு வருவார்.

இப்போது, திடீரென்று ‘பரிபாஷை’ என்ற சொல் என் கண்ணில் பட்டதும் அதனை மக்கள் கவனத்துக்குக் கொண்டுவர ஆவல் பொங்கியது. ஆனாலும்
குடிகாட்டார் குறிப்பிட்டது கீழ் வரும் பரிபாஷையா ? அல்லது வேறு ஏதாவது
இருக்கிறதா? என்பது எனக்குத் தெரியாது. இந்தக் குறிப்புகள் தஞ்சை சரஸ்வதி மகால் வெளியிட்டுள்ள ‘ஆனந்த கந்தம்’ என்னும் ரசவாத மொழி பெயர்ப்பு நூலில் இருந்து
எடுக்கப்பட்டவை ஆகும்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் தஞ்சை சரஸ்வதி மஹாலில் இருந்து சிற்ப சாஸ்திரம் என்ற நூலை நன்பர் கிரியா ராமகிருஷ்ணன் உதவியுடன் தருவித்து படித்தேன். அதன் மீது ஆர்வம் ஏற்பட்டதன் காரணமே தமிழர்கள் உலகப்புகழ் பெற்ற பஞ்ச லோக சிலைகளை வடித்திருக்கிறார்களே அவர்கள் எவ்வளவு திறமையான METALURGIST –
உலோகவியல் நிபுணர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் பின்பற்றிய உலோகக்
கலவைத்தொழில்நுட்பம் எவ்வாறு இருந்திருக்கும் ? என்று தெரிந்து
கொள்வதுதான். ஆனால் உலோகக்கலவை பற்றி அதில் ஒரு வார்த்தை கூட
இல்லை. ஆனால் கலாபூர்வமான வடிவமைப்பு பற்றிப்பேசியது . அதனால் அந்த
நூலை ஒவியரான எனது நண்பருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டேன்.

ஆனால் கீழ் வரும் குறிப்புகளில் – அவை மருத்துவம் சம்பந்தப்பட்டதாக
இருப்பினும்-உலோகங்களைக் கையாண்ட தொழில் நுட்பங்கள் பேசப்
படுவது எனக்கு மனநிறைவு அளிப்பதால் அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இவை அனைவருக்கும் பொதுவான விஷயம் அல்ல என்பதையும் இந்த மொழிநடை பலருக்கும் புரியாது என்பதால் விருப்பம் இல்லாதவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம்.

” தன்வந்தரி பாகம் :
ஸித்தமான ரசத்தில் பாதியும், தங்க பஸ்மத்தில் மூன்றில் ஒரு பங்கும், வெள்ளி பஸ்மத்தில்
கால் பங்கும் , தாம்ர பஸ்மத்தில் ஆறில் ஒரு பங்கும் , காந்தமும் அப்பிரகமும் அரைக்கால் பங்கும் ,
நவரத்தினங்களின் பஸ்மம் வீசம் பங்கும், ரஸேஸ்வரனை நினைத்து வைத்தியனிடம் அளிக்க வேண்டியது.

கஜ்ஜலீ – பங்க ரசம் :
ரசத்தை கந்தகம் முதலிய தாதுப் பொருட்களுடன் திரவம் சேர்க்காமல் மென்மையாக மை போன்று
அரைத்தற்கு கஜ்ஜலீ எனவும், திரவம் சேர்த்து அரைப்பதற்கு பங்கரசம் ( ரசபங்கம்) எனவும் பெயர்.

பிஷ்டி :
ஒரு பலத்தின் பானிரண்டில் ஒரு பங்கு ரசத்தில் அரை நிஷ்கம் கந்தகம் சேர்த்து கடும் வெய்யிலில்
கவத்திலிட்டரைக்கப் பிஷ்டியாகின்றது.அதையே பாலுடன் விட்டரைப்பதும் ஒரு வித பிஷ்டியாகும்

பாதன பிஷ்டி:
ரசத்தில் கால் பங்கு தஙம் சேர்த்து அரைத்த்ப் பிஷ்டி செய்தல் பாதன பிஷ்டி எனப்படும்.

ஹேம கிருஷ்டி , தார கிருஷ்டி : தங்கத்தையோ வெள்ளியையோ ரஸகந்தங்களைச்
சேர்த்து பலதடவை பஸ்மம் (மடிக்கச்) செய்து மறுபடியும் உத்தாபனம் செய்து பஸ்மம் செய்யப்பட்டது ஹேமகிருஷ்டி தாரகிரிஷ்டி எனக்கருதப்படும். ஹேமகிருஷ்டியைத்
தங்கத்துடன் சேர்க்க தங்கத்தின் நிறம் குன்றாது.
ஸ்வர்ண ( ஹேம) கிருஷ்டியால் செய்த பீஜம் ரசத்துக்கு ரஞ்சனம் செய்கின்றது.

வர லோகம் : தாம்ரத்தையும் உர்க்கையு உருக்கிக் கந்தகம் சேர்த்த் எலுமிச்சம்
பழச்சாற்றில் 21 தடவை சுருக்குக் கொடுக்க வர லோஹமாகின்றது.

ஹேமரக்தீ – தாரா ரக்தீ : வரலோகத்தால் ரஞ்சனம் செய்யப்பட்ட தங்கம் மேரக்தி
எனவும் , அவ்வாறு செய்யப்பட்ட வெள்ளி தராக்தி எனவும் கூறப்படுகிறது.
இந்த ரக்திகளை உருக்கிய வெள்ளியிலும் தங்கத்திலும் சேர்க்க அவற்றின்
நிறத்தை ( மாற்றை) அதிகப்படுத்துகின்றன.பீஜத்துக்கும் ரஞ்சனம் அளிக்கின்றன.

தலம் : ரச பஸ்மத்தாலோ, பந்தமடைந்த ரசத்தாலோ செய்யப்பட்ட மற்றலோகங்களை தலம் எனக்கூறுவர்.வெளுத்தது சந்திர தலம் எனவும்,மஞ்சளாகியது அனல் தலம்
எனவும் கருதப் படுகின்றது.

அயோநாகம் : காந்தலோஹத்தை மாக்ஷிகத்த்தால் ஏழு தடவை பஸ்மமாக்கி
உத்தாபனம் செய்து அப் பஸ்மம் இரண்டு பலமும், தாம்ர பஸ்மம் இரண்டு பலமும்
சேர்த்து மூஷையிட்டு ஏழுநாள் ஊததேஹலோஹவேத ஸித்தி அளிக்கும் அயநாகம்
ஆகின்றது. அதை ரசத்துடன் சேர்த்து ஸாரணா யந்திரத்தில் குளிகையாகச்செய்து
வாயிடக்கிக் கொள்ள பற்களுக்குப் பலமளிக்க வல்லது.

கல் நாகம் : தாம்ரத்தை மாஷிகத்தால் பத்து தடவை பாச்மமும் உத்தாபனமும் செய்து , அத்தாமிரமும் அதற்குச் சமம் காரீயமும் சேர்த்து நீலாஞ்சனம் சேர்த்து ஏழு தடவை
புடமிட்டு பஸ்மமாக்கி உத்தாபனம் செய்து சித்தமானது கல்பநாகம் எனப் பெயர்.
இதனால் தயாரித்த ரஸம் மேஹரோகங்களை நிவர்த்தி செய்துநரை திரையைப்
போக்குகின்றது.

பிஞ்சரீ : வேறொரு லோஹத்துடன் சேர்த்த லோஹத்தை உருக்கி , மஞ்சள்
நிறமடையும் வரை திரவத்தில் காய்ச்சுவது பிஞ்சரி எனப்படும்.

சந்திரார்க்கம் : வெள்ளி பதினாறு பங்கும் தாம்பம்ரம் பன்னிரண்டு பங்கும் சேர்த்து
ஒன்றாக உருக்கியதற்கு சந்திரார்க்கம் என்று பெயர்.

நிர்வாப (ஹ)ணம் : பீஜம் செய்யத்தயாரித்த(ஸாத்ய) வேறு லோஹத்தை வங்கநாளத்தால் (நுணி வளைந்த ஊதுகுழாய்) நெருப்பை அதிகப்படுத்திச் சேர்ப்பதற்கு நிர்வாபணம் அல்லது நிர்வாஹனம் எனப் பெயர்.பீஜலோஹத்தில் சேர்க்கப்படும் அளவு குறிக்கப்படாமல் இருந்தால் மையமாகச் சேர்க்கவும்.

லோஹபஸ்மத்தின் லட்சணம் : ஜலத்தில் மிதந்தும் கைரேகைகளில் பதிந்தும் உள்ள பஸ்மம் வாரிதரம்
எனவும், ரேகாபூர்ணம் எனவும் கூஊரப்படுகிறது.வெல்லம், குந்துமணி,காஞ்சுரி,தேன்,நெய் ஆகிய
உத்தாபன திரவியங்களுடன் சேர்த்துத் தணலில் வைத்து ஊதப்பட்ட லோஹபஸ்மம்
திரும்ப லோஹமாக மாறாமலிருப்பதற்கு அபுனர்பவம், திருத்தம் எனப்பெயர்.
வெள்ளி பஸ்மத்துடன் தாம்ரத்தை சேர்த்து உருக்க பஸ்ம எடை குறையாமலும்,
தாம்ர எ¨டாதிகமாகாமலுமிருந்தால் அபுனர் பவம் எனக் கூறலாம்.

பீஜம் – உத்தரணம் : நிர்வாஹணம் செய்யும் பொழுது ஸாத்ய லோஹ்த்தின் நிறத்தை மற்ற
லோஹமடைந்தவுடன் பீஜம் எனக்கருதப்படுகிறது. இரண்டு லோஹங்களில் ஒரு
லோஹம் மறைவதற்கு உத்தரணம் என்று பெயர்.

தாடணம் : வங்க நாளத்த்தால் ஓரிடத்தில் நெருப்பின் தாபத்தை அதிகமாக ஏற்படுத்துவதற்கு தாடணம் எனப்பெயர்.

தான்யாப்பிரகம் : அப்பிரகத்தைத் தூள் செய்து நெல் சேர்த்து துணியில் முடித்து
காடியில் பிசைய பாத்திரத்தின் கீழ் படியும் அபிரகத்தூள் தான்யாப்பிரகம் எனப்படும்.

ஸத்வம் : தாதுப் பொருள்களுடன் க்ஷாரம், புளிப்புகள் திராவகங்கள் சேர்த்துப் பெரிய அடுப்புகளில் துருத்திகளால் ஊதி எடுக்கப்படும் ஸாரப்பொருளை ஸத்வம் என்பர்.

ஏக கோலீஸகம் : கோஸ்ஷ்டிகளில் வைத்துள்ள மூஷையின் கழுத்துவரை கரியை
நிரப்பித்து துருத்தியால் ஊதுவது ஏக கோலீஸகமாகும். திராவணத்திலிம் ஸத்வ
பானத்திலும் இலுப்பைக்கரியும் கருங்காலிக்கரியும், ஸ்வேதனம் செய்ய இலந்தக்கரியும் உயர்ந்தவை..

ஹிங்குலா கிரிஷ்டாசம் : வித்யாதர யந்திரத்தின் மூலம் இஞ்சிச்சாற்றில் அரைத்த
லிங்கத்தினின்றும் எடுக்கப்பட்ட ரஸம் இப்பெயர் கொண்டது.

கோஷாகிரிஷ்டம் :வெங்கலத்தில் சிறிதளவு தாளகம் சேர்த்து வங்கநாளத்தால்
ஊதுவதில் ஈயம் பிரிந்த பின்னர் மீதி உள்ள தாம்ரத்திற்கு வழங்கும் பெயர்.

குஸ்ய நாகம் : இருபது பலமுள்ள சுத்தி செய்த காரீயத்தின் மேல் எருக்கம் பாலால் அரைத்த மனோசிலையைப் பூசி வில்லை தட்டி சராவத்தில் இட்டு குக்குடப் புடமிட பஸ்மமாகும்.பிறகு உத்தாபன வர்க்கத்துடன் மூஷையிலிட்டு உருக்கி காரியமானவுடன் ஒரு பலம் ரஸமும் மனோசிலையும் சேர்த்து எருக்கம் பாலில் அரைத்துக் கஜபுடமிடவும் . இவ்விதம் 20 தடவை உத்தாபனமும் கஜபுடமும் இட கால் பலமளவு மீதமாகும்.
இது குஸ்ய நாகமாகும்.

வரநாகம் : எ·கை நீலாஞ்சனம் சேர்த்து அநேக தடவை உருக்கப்பட்டதும்
மெதுவானதும் ஆனதற்கு வரநாகம் எனப்பெயர்.

உத்தாபனம் : மடிக்கப்பட்ட (பஸ்மமான) லோஹத்திற்கு மறுபடியும் லோஹ உருவை
அளிப்பது இந்த முறையாகும்.

டாலனம் : உருக்கிய லோஹம் முதலியவற்ரை திரவத்தில் சாய்ப்பது டாலனமாகும்.

(தொடரும்)

தகவல் தொகுப்பு : புதுவை ஞானம்.

Advertisements