பஞ்ச காவிய நிகண்டு
நூற்பெருமை
————–

விரும்பிப்பார் மகராச பூபதியே கேளும்
விளங்கினோம் வைத்திய காண்டம் பண்டிதர்கள் தேற
விரும்பிப்பார் முதற்காண்ட நூற்று முப்பதுக்குள்
விளங்கும் சகல மூலியுட கருக்களெலாம் சொன்னோம்
விரும்பிப்பார் புலத்தியனே இந்தெண்ணூரிவிடயம் விடாதே
செகமனிதரிலே விட்டரேயானால்
விரும்பிப்பார் அண்டயிடி தலை தெறித்துப்போகும்
விசிதமுள்ள இந்தெண்ணூறு வெகுபதனம் பண்ணே.

உரை : மருத்துவத்தில் தேர்ச்சியடைய வைத்திய காண்டம் எடுத்துக்கூறினோம்
முதல் காண்டம் 130 பாடல்களுக்குள் எல்லாவகையான மூலிகைகளின் இயல்பைக்
கூறினோம் . 800 பாடல்கள் உள்ள இந்த நிகண்டை யாருக்கும் தராதே.தந்தால்
இடிவிழுந்து தலை வெடிக்கும்.

பேரான பேர்களெலாம் பொறுக்கி மணிபோல
பிரபல்லியமாக வல்லோ பேசினோமிந் நூலில்
காரான கனமூலி கருக்கள் கண்டறிந்து
கருணை பெறச்சொல்லி விட்டோ மிந்த யெண்ணூறில்
வாரான புலவர் சித்தர் சிவயோகி யறிவார்கள்
மகத்தான லட்சனமாம் என்னூல்காரர்
வேரான வேதாந்தி கவுன ஞானத்தோர்கள்
விசிதமிந்நூல் இல்சத்தை விரும்பிப் பாரென்றே.

உரை: பிரபலமான மூலிகைகளின் பெயர்களை எல்லாம் பொறுக்கி
அணிகலனாக ஆக்கினோம் கருப்போன்றவைகளைக் கண்டு பிடித்து
அருளுடன் சொல்லியுள்ளோம் எண்ணூறு பாடல்களில். இதை புலவர்கள்
சித்தர்கள் சிவயோகிகள் அறிய முடியும்.

பதனமதாய் வைத்து சிவபூசை செய்து
பண்புடைய வேதாந்தப் பரிபூரண எண்ணூரில்
பதனமதாய் வைத்துத்தரிசிப்பாய் புலத்தியனே
பரிவான பஞ்சகாவியம் சவுமியமும்
பதனமாய் வைத்து எண்ணூறு பணிந்திடுவீராகில்
பராபரமாய் எந்நாளும் பாவித்து வாழ்வாய்
பதனமதாய் நாலாவதிந்த் கண்டமதைச் சொன்னோம்
பாடினோம் வனமூலி பரிபூரண முற்றே.

உரை :கவனமாய் பாதுகாத்து சிவபூசை செய்யவும். 800 பாடல்களையும் வைத்து
புண்ணிய நூலாகக் காண்பாய். பஞ்சகாவியம் சவுமியமும் கவனமாக வைத்து 800-ஐ
வணங்கிடநன்கு வாழ்வாய். நாலாம் காண்டத்தில் காட்டில் வளர்ந்துள்ள மூலிகைகளைப்
பற்றி முழுமையாகப் பாடினோம்.

ஐந்தாம் காண்டம்
——————
காப்புச் செய்யுள்
——————

பூரணமாம் சதுர்முகத்தான் பாதம் போற்றி
பொன்னடிவாழ் மாது சரசுவதியே போற்றி
வாரணமாம் கசமுகவன் வல்லபையைப் போற்றி
வசனித்தேன் வாதகாவியமே போற்றி
காரணமாம் பொதிகை தட்சணானாகிக்
கவி பதினாறு லட்சம் பாடல் போற்றி
ஆரணமாம் ஆதியந்தம் விளங்கும்
அம்பரத்தின் சூட்ச சடாசரம் காப்பே.

சூட்சமென்ற நூல்களெலாம் ஆய்ந்து
சுருதிமுடிவான இந்த எண்ணூறு பாடி
தேகமென்ற திசையிலுள்ள சித்தர்க்கெல்லாம்
திரட்டி இக்காவியமாய் நிகண்டெண்ணூராய்
பாசமதாய் சொல்லுகின்றோம் பதினெண்பேர்கள்
பாடியதோர் நூல்களுக்கு குருநூலாகும்
வாசமுள்ள பூமலரின் ஒளியைப்போல
வசனிப்போம் பஞ்ச காண்டம் வகுத்துப்பாரே.

உரை: நான்முகனின் திருவடிகளை வணங்குகின்றேன். சரசுவதியை
வணங்குகின்றேன். ஆனைமுகனை வணங்குகின்றேன்.வாதகாவியம்
போற்றுகின்றேன். 16 இலட்சம் பாடல்களைப்பாடிய தட்சணாமூர்த்தியின்
பாடல்களைப்போற்றி வணங்குகின்றேன். இறைவன் காப்பாற்றட்டும்.

நுணுக்கமாக மருத்துவ நூல்களை ஆய்ந்து கேட்கப்பட்ட இந்த எண்ணூறு
பாடல்களை முடிவுடன் பாடியுள்ளேன். நான்கு திசைகளில் உள்ள சித்தர்களுக்காக
800 பாடல்களைத் திரட்டி அன்புடன் சொல்லுகின்றேன். எல்லா சித்த மருத்துவ
நூல்களுக்கெல்லாம் குரு நூலாகும் இது. மணமிக்க பூவின் ஒளியைப்போல ஐந்து
காண்டத்தில் வகுத்துக்கூறுவேன்.

வகுத்துப்பார் தொண்டனுக்குத் தொண்டனாகி
வளமான குருவிடத்தில் பன்னிரண்டாண்டு
வகுத்துப்பார் அவரிடத்தில் கேள்வி கேட்டு
மவுனப் பொருளான உபதேசம் கேட்டு
வகுத்துப்பார் கேட்கும் ரேச கும்பகமறிந்து
மகத்தான பூரணத்தை அறிவால் கண்டு
வகுத்த்ப்பார் செய் குருவைப் பணிந்தீராகில்
வாசியது ஒடுங்குமிடம் வசனிப்பாரே.

உரை: ஆசிரியரிடத்தில் பன்னிரந்து ஆண்டுகள் தொண்டு செது வினாக்களால்
பொருளறிந்து கொள்ளவும். யோகப்பயிற்சியை அறிந்து முழுமையை அறிவால்
கண்டு, பின் ஆசிரியரைப் பணிந்து வணங்க மூச்சுப்பயிற்சி ஒழுங்குபடும்.

வசனிப்போம் சுந்தரமே நன்றாய்க் கேளு
வரந்தந்தானெனக்கு வாலை அசனிப்போம்
அவ்வாலை காலை கண்டோம்
அனுக்கிர அடியேனுக்கு அம்பாளித ந்தாள்
புசனிப்போம் பூமாதே கண்ட போதே
பூரணமாம் திரேக வச்சிர பொன்னிறமே யாச்சு
துசனிப்போம் அவளிடத்தில் தொண்டு செய்தோர்
துதித்தால் அகத்தியற்குப் பத்தந்தானே.

உரை : நன்றாகக் கேள் வாலை எனக்கு வரந்தந்தாள் அருள் செய்தாள்
இதனால் உடல் பொன் வண்ணமாக இடம் கொடுத்தாள்.

பதியான பதியறிந்தோர் பதியில் நின்றோம்
பராபரனை எந்நாளும் பதித்து வாழ்ந்தோம்
கெதியான விதியதனாவெல்லா மாச்சே
கேசரா மவுனகிரிச்சாரல் கண்டோம்
மதியான பூரணமே அறிவிதென்று சச்சிதானந்த
வெளிச்சாரலது விட்டோம்
மதியான மகிபதியை மவுனந்தூட்டி
மகிழ்ந்து நின்றோம் வேதாந்த மவுனங்கண்டோமே.

கண்ட கருவறியார்கள் உலகமாண்பர்
கன்மவினை அகத்தறியார் கசட்டு மாண்பர்
விண்ட பொருளாதி அந்தம் விளக்கங் காணார்
விருதாவில்லை தலைவார் விவேகங் காணார்
அண்டர் தொழு மந்தலத்தின் கருவைக் காணார்
அந்தமென்று நிலைகாணா ரசட்டு மாண்பர்
மண்டலங்கள் ரவிமதியால் சூழாய் நின்ற
மகத்தான பிருதுவியின் சாரமாமே.

சாரமென்ற சலாநிதியின் அமிர்தங்கொண்டால்
சாகாத கால தட்சின சித்தி காண்பார்
சாரமென்ற மதி அமிர்தம் நாமே கண்டோம்
சச்சிதானந்த வெளிச் சாரல் கண்டோம்
சாரமென்ற தீவரச வாலை வாலை
சங்கையில்லாசை தன்னிய பூர்வங்கண்டோம்
சாரமென்ற அறுபத்து நாலு சாரம்
சாயுச்சிய நிலையில் சார்வர்வதாமே.

சார் மணிப்பேர் பெரியோர்கள் பதமே போற்றி
சங்கையில்லா அவரிடத்தில் தொண்டு பண்ணு
நேர்வு எண்ணூரு நிகண்டினுட பொருளே கேட்டால்
நிகரில்லா அனுக்கிரக நிலையைச் சொல்வார்
வார்வு பெறு மதியமுர்த முண்ணச்சொல்வார்
வளமான சமாதி தந்து வருசிப்பார்கள்
துறவு மதி அறிவு தனைச் சொல்வாரையோ
துதிராச பூபதியே வாழ்வென்பாரே.

உரை : இறைவனை அறிந்து இடத்தில் இருந்தோம் இறவனை நாள்தோறும்
உள்ளத்தில் நினைத்து வாழ்ந்து விதியால் எல்லாமும் ஆச்சு.பேசாமை என்ற குன்றில்
சாரலைப் பார்த்தோம். முழுமையான அறிவு சச்சிதானந்த வெளி, இதை விட்டோம்.
வேதாந்தமான பேசாமையைப் பார்த்தோம். மகிழ்ச்சியுடன் இருந்தோம்,
உலக மக்கள் கருவைப்பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளவில்லை.விதியான
கன்ம வினைகளை மனதில் அறியமாட்டார்கள். சூரியன் சந்திரன் என்ற கோளங்களால்
சூழ்ந்தது பூமி. இதில் உயிரினங்களை கன்ம வினைகளால் சூரிய சந்திரன் பாதிப்பது
பற்றிய வான இயலின் தன்மைகள் கூறப்பட்டுள்ளன.

சாரமென்ற அமிர்தம் அருந்தினால் சாகாமலிருக்க முடியும் இத்னால் தட்சின சித்தி
கிடைக்கும். இந்த அமிர்தத்தை அருந்தினேன். 64 வகையான சாரம் உயர்ந்த நிலையான
சாயுச்சியப் பதவியை அணுகி இருக்கும்.
பெரியோர்களின் திருவடிகளைப் போற்றி தொண்டு செய்ய வேண்டும். 800 பாடல்களாலான்
நிகண்டை அறிதல் வேண்டும். ஒப்பிட முடியாத அருளுடன் பொருளைக்கூறுவர்.மதியமுதம்
உண்ணச் சொல்வார்.சமாதி நிலையை அடைய அருள் பொழிவார்கள்.

தகவல் தொகுப்பு :
புதுவை ஞானம்.

Advertisements