FLORA AND FAUNA _ TAMIL LITERATURE
CONTINUATION – 3 .
பழந்தமிழ் நூல்களில் உயிர் வகைகள் .
—————————————————————-

-அரிமா.-
———-

அரிமா என்பது சிங்கத்துக்கு வழங்கும் ஒரு பெயர். சிங்கம் போக்கு வரவு புரியும்
இடங்களில் பிற விலங்குகள் செல்வதற்கு அஞ்சும். சிங்கம் விலங்குகளுக்கு அரசு என்பதற்கு
ஏற்ப வலியும் தோற்றமும் உடையது.

” அரிமான் வழங்குஞ் சாரல் பிறமான்
தோடுகொளநிரை நெஞ்சதிந்தாங்கு.” (பதிறுப்பத்து-2-2)
என்கிறது காண்க.ஒரு சிங்கம் வழங்கும் (புழங்கும்) மலைச்சாரலில் பிற விலங்குகளின் தொகுதிகள்
செல்ல அஞ்சும் தன்மை கூறப்படுவதால் பல விலங்குகள் கூடிய வழியும் வெல்ல முடியாத சிங்கத்தின்
வல்லமை காண்க. சிங்கத்தின் இத்த்கைய வல்லமை கருதியே வேந்தர் பலர் வெருவி யோடத்தக்க
கரிகாலன் திறமைக்கு உவமை கூறவந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலையில்,

” அரிமாவன்ன அணங்குடைத் துப்பின் ”

என்று சிங்கத்தையுவமை கூறியுள்ளார்.கரிகாலனுக்கும் அரிமானுக்கும் உள்ள பொதுத்
தன்மையீதென்று தோன்ற ‘அணங்குடைத்துப்பின்’ என்று கூறியுள்ள்மை காண்க.அணங்குதல்-
வருத்துதல். துப்பு _ வலிமை.’பகைவர்களை வருத்துகின்ற வலிமை’ என்பது கருத்து. விலங்கின்
வேந்தாய் விளங்குகின்ற சிங்கத்தின் பெருமை உணர்ந்து வேந்தர்கள் அவையில்
வீற்றிருத்தற்குறிய இருக்கையைச் சிங்கத்தின் வடிவாகச் செய்து ‘அரியணை’ என்று பெயரிட்டு
அவ்வரியணையில் அமர்ந்து அரசு செலுத்தும் வழக்கத்தை மேற்கொண்டார்கள். அரிமான் போன்ற
ஆற்ற்லுடையேம் என்பதைத் தம் இருக்கையால் காட்ட வேண்டி மன்னர்கள் இவ்வாறு சிங்கத்தின்
வடிவாய் இருக்கையும் இழைத்திருந்தனர் என்றால், அச்சிங்கத்தின் பெருமயைக் கூறவும் வேண்டுமோ !

– அயிரை –
அயிரை மீன் மருத நிலத்து நீர் நிலைகளில் வாழும் இயல்பினது. சிறிய வடிவினது. அசரை எனவும்
இக்கால மக்கள் வழங்குவர்.

” அயிரை பரந்த அந்தன் பழனத்து.” (குறுந்தொகை – 178)

என மருத நிலத்துக்கு அடையாக அயிரை மீன் பரவியிருத்தலை நெடும்பல்லியத்தை என்ற
நல்லிசைப் புலவர் மெல்லியலார் கூறியிருத்தல் காண்க. இந்த அயிரை மீன் நெய்தல் நிலத்திலும்
வாழும். அந்நிலத்தில் உள்ள நாரைகள் இவ்வயிரை மீனை விரும்பி அருந்துமாம்.கடலில் உள்ள
அயிரை மீன்களை அலைகள் புரட்டிக் கரையில் தள்ளுகின்றனவாம். நாரையினம் இரை தேடி
வருந்தாமல் கரையில் பெயர்ந்து பெயர்ந்து அமர்ந்து அவ்வயிரை மீன்களை வ்யிறார
அருந்துகின்றனவாம்.

” தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்.” (குறுந்தொகை – 166 )
என்று கூடலூர் கிழார் கூறியிருத்தல் காண்க. சேரர் மரபைச் சார்ந்த பொறயனுக்குரியதாய்
மேலைக்கடற்கரையில் உள்ள தொண்டி நகரத்து முன் துறையில் அயிரை மீன் மிகுதியாக
இருக்குமாம். அங்குள்ள சுவை மிக்கஅவ்வயிரை மீனை உண்ண விரும்பியது போல
கீழ்க்கடலில் உள்ள கிழ நாரை அங்கிருந்தே தன் தலையை நிமிர்த்தி உண்ண விரும்பியது
போல சேய்மையில் உள்ளவளாகிய அரிய தலைவியை நினைத்து வருந்துகிறாய் என அல்ல
குறிப்பட்டு மீளும் தலைவன் தன் நெஞ்சினை நெருங்கிக் கூறுகிறான்.

“குணகடற் றிரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
அயிரை ஆரிரைக் கணவந் தாஅங்குச்
சேயன் அரியோர்ப் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.” ( குறுந்தொகை – 128)
என்று இதனைப் பரணர் கூறுவது காண்க. இது புலவர் படைத்துக் கொண்ட உவமையே யெனினும்
அரிய தலைவிக்கு உவமையாக அவ்வயிரை மீனைக் கூறியிருத்தலின் அதன் உயர்வை அறியலாம்.
அயிரைக்குப் பேர் போனது தொண்டி முன்றுறை என்பதும் உணரலாம்.

இவ்வயிரை மீன் தென்குமரியாற்றின் பெருந்துறையில் மிகுதியாக வாழ்ந்தனவாம்.அவற்றை உண்ண
விரும்பி வட இமயத்தில் இருந்து அன்னப்பறவை தென்னாட்டுக்கு வந்ததாம்.அக்குமரித்துரையில்
உள்ள அயிரை மீன்களை வயிறார உண்டதாம். பல நாள் தங்கியிருந்து தன் வேட்கை தணிந்த பின்
மீண்டும் வடதிசையிலுள்ள இமயமலைக்குப் போகின்றதாம். அவ்வாறு செல்லுகின்ற ஒரு அன்னச்
சேவலைப் பார்த்து பிசிராந்தையார் என்னும் புலவர், கோப்பெருஞ்சோழன்பால் தனக்குள்ள நட்புரிமை
தோன்ற ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வேண்டுகோட்கு முன்,

“அன்னச்சேவல் ! அன்னச்சேவல் !
குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை யாயின் ” (புறநானூறு – 67 )

என விளித்துத் தொடங்கியுள்ளார். இதனால் அயிரை மீன் குமரித்துறைய்ல் நிறைந்திருந்தன என்பதும்
இமயத்திலுள்ள அன்னமும் விரும்பத்தக்க சுவை மிகுதி அயிரை மீன்களுக்கு உண்டு என்பதும் அறியலாம்.
அயிரை என்னும் பெயருடைய மலை ஒன்று சேர நாட்டிலுண்டு. அம்மலையினைக் கூறவந்த
பாலைக்கவுதமனார் என்ற புலவர், கேட்போர் அயிரை மீனோ என்று அயிராமை வேண்டிச்சில
அடைமொழி கொடுத்து அயிரை மலைதான் என்பதை வெளிப்படையாக்கி யுள்ளார்.
” நீரறன் மருங்கின் வழிபடாப் பாகுடிப்
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
நேருயர் நெடுவரை அயிரை ” ( பதிற்ருப்பத்து – 21 )
என்பது கான்க அயிரை என்பது மீனின் பெயர் என்பதை எல்லாரும் அறிவர். ஆதலின் அப்பெயர்
கொண்ட மலை ஒன்று உண்டு என்பதை இவ்வாறு அடைமொழி கொடுத்து விளக்கி வெளிப்படையாக்க
வேண்டி நேர்ந்தது என்பதை எண்ணும் பொழுது அயிரை மீனின் பலர் அறி பெருமை யறியலாம். அயிரை
மீன் நீரில் செல்லும் இயல்பு உடையது , கூரிய பார்வையுடைய கொக்கின் வேட்டைக்கு அஞ்சுவது .
அவ்விரண்டும் அயிரை மலைக்கு இல்லை என்பதை அவ்வடைகளான் விளக்கியவாறு. அயிரை என்ற
பெயருடைய கொற்றவையும் உண்டு. அயிரை மலையில் இருப்பதனால் பெற்ற பெயராகவும் கொள்ளலாம்.

– அணில் –
__________

இது அணிற்பிள்ளை எனவும் வழங்குவதுண்டு. தொல்காப்பியர் இதனைக்குறிப்பிடும்போது
‘ மூவரியணில்’ (மரபி-6) என்று இதன் முதுகில் உள்ள வரிகளை எண்ணிச் சொல்லி யிருக்கின்றார்.
பூதப்பாண்டியன் தேவி பெருஙோப்பெண்டு வெள்ளரிக்காயைக் குறிப்பிடும்போது
” அணில் வரிக்கொடுங்காய்” ( புற நானூறு – 246 ) என்று இவ்வணிலையும் இதன் முதுகிலுள்ள
வரிகளையும் வெள்ளரிக்காய்க்கு உவமையாகக் கூறியுள்ளமை காண்க.கடியலூர் உருத்திரங்கண்ணனார்
வேட்டுவர் குரம்பையில் ஈய்ந்திலை வேய்ந்திருப்பதற்கு காரணம் கூறுவாராய் , ” வரிப்புற அணிலோடு
கருப்பை ஆடாது ” (பெரும்பாண்-85) அணிலின் வரிப்புறம் இப்புலவரையும் கவர்ந்திருத்தல் காண்க.
கருப்பை என்றது எலியை. தாழை மடலில் உள்ள முள்ளின் வரிசைக்கு இந்த அணிலின் பல்லை உவமை
கூறி மகிழ்கின்றார் ஒரு புலவர்.
“அணிற் பல்லன்ன கொங்கு முதிர் முண்டகம் ” (குறுந்தொகை- 307)
என்பது காண்க. காட்டில் உள்ள ஊககம் புல்லின் பூவிற்கு இவ்வணிலின் வாலை உவமை கூறி
மகிழ்கிறார் ஒரு புலவர்.
” வேனல் வரியணில் வாலத்தன்ன
கான ஊகின் கழன்றுகு முதுவீ ” (புற நானூறு – 307 )
என்பது காண்க. ஊகம்புல்லின் முனையிலுள்ள பூங்கற்றையையும் அணிலின் வாலமைப்பையும்
காண்போர்க்கு இவ்வுவமையின் அருமை தெள்ளிதிற் புலனாம்.

அணிலின் மென்மயிர் செறிந்த தோற்றத்திற்கு இலவின் பசுங்காய் பஞ்சுடன் விரிந்துள்ல நிலையை
உவமை கூறியுள்ளார் உருத்திரன் கண்ணனார்.

“நீளரை யிலவத் தலங்குசினை பயந்த
பூளையம் புசுங்காய் புடை விரிந்தன்ன
வரிப்புற அணில். ” ( பெரும்பாண்- 83 – 85 )

என்பது காண்க.நீண்ட அடிபாகத்தையுடைய இல்வமரத்தின் அசைகின்ற கிளை ஈன்ற
பஞ்சினையுடைய பசுங்காய் பக்கத்தே விரிந்தாற்போன்று வரிகளை முதுகிலே உடைய அணில்
என்பது பொருள். இலவங்காய் பக்கவாட்டமாக விரிந்து ப்ந்சு பிதிர்ந்து தோன்றுவது போல
உள்ளது அணிலின் வரிப்புரம்.என்பது கருத்து.

தலைவன் பிரிந்த பொழுது தனித்து வருந்திப் பொலிவழிந்திருப்பதற்கு உவமையாக அணிலாடு
முன்ன்றிலைத் தலைவி கூறியதாக ஒரு புலவர் கூர , அவ்வுவமை நலத்தை யுணர்ந்த புலவர்கள்
அப்புலவர்க்கு அத்தொடரையே பெயராக அமைத்து மகிழ்ந்துள்ளார்கள்.
” மக்கள் போகிய அணிலொடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்
றலபென் தோழி அவர் அகன்ற ஞான்றே. (குறுந்தொகை – 41 )
என்பது காண்க. இவ்வாறு பாடிய புலவர் பெற்ற பெயர் ” அணிலாடு முன்றிலார் ‘ என்பதேயாகும்.
மக்கல் யாரும் வாழாது பொலிவழிந்த வீட்டிற்கு அணில் ஆடுதலைச் சிறந்த அடையாளமாகக் கூறினார்
அப் பெரும் புலவர். இதனால் அணிலின் அஞ்சும் இயல்பு புலனாகும்.

– அசுணமான் –

அசுணமான் அசுணம் எனவும் வழங்கப்படும் இது இசையுணர்ச்சி மிகவுடைய விலங்கு. இதைப்பிடிக்க
விரும்பும் வேடர்கள் காட்டில் சென்று யாழிசை யெழுப்புவார்கள். அவ் யாழிசை கேட்டவுடன் இசை வரும்
வழியே வந்து அண்மையில் அணுகி இசையைக் கேட்டு மகிழ்ந்திருக்கும் போது பறை மேளத்தை
அடிப்பார்கள். மென்மையான யாழிசையைக் கேட்ட அசுணத்தின் செவிகட்கு பறையின் வல்லோசை

பெருந்துயரைச் செய்யும். அத்துயர் மிகுதியால் மயங்கி மூர்ச்சித்து விழுந்து விடும். சில இறந்தே
விடுவதுமுண்டு. இந்நிலையில் வேட்டுவர்கள் இவ்வசுணத்தைப் பற்றிப்பிடித்துக் கொள்வார்கள்.
அசுணமானின் இத்தகைய இயல்பையுணர்ந்த நல்லந்துவனார் என்னும் நல்லிசைப்புலவர் தலைவி
கூற்றாக,

” மறையில் தன் யாழ்கேட்ட மானை யருளாது
அறைகொன்று மற்றதன் ஆருயிர் எஞ்சப்
பறையறைந்தாங்கு ஒருவன் நீத்தான்.” ( நெயதற்கலி )

என விளக்கியுள்ளார். இவ் வசுணமான் யாழிசையிலுள்ள விருப்பத்தால் வண்டின் ஒலியை யாழொலியாக
மயங்கிக் கேட்டு மகிழ்வதுமுண்டு. புலியை வென்ற பெரிய தும்பிக்கையை உடைய யானையின்
கன்னத்தில் வழியும் மதநீரில் வண்டுகள் ஆரவாரிக்க அவ்வொலியை யாழொலியாகக் கருதிப் பெரிய
மலைக்குகையில் அசுணம் கூர்ந்து கேட்கும் நிகழ்ச்சியை,

” யானைக் கவுண்மலி பிழிதரு காமர் கடாஅம்
இருஞ்சிறைத் தொழுதி யார்ப்பயாழ் செத்து
இருங்கல் விடரளை அசுணமோர்க்கும்.” ( அக நானூறு – 88 )

என்ற அடிகள் அறிவிக்கின்றன.

கவுண் = கன்னம்
மலிபு = நிறந்து
இழிதரும் = ஒழுகுகின்ற
கடாம் = மதம்

தகவல் தொகுப்பு : புதுவை ஞானம்.

Advertisements