மருத்துவ மூலிகைகள்.
__________________________

அகத்தி : ஓர் மரம், a class of leguminus trees – CORONILLA GRANDIFLORA.

” மூதண்ட அச்சமென்று மசகமென்றும் பேரு
முக்கியமுள்ள அசோக மென்றும் பேரு
யாதண்ட வாணிதமென்றதற்குப் பேரு
யாதக மென்றதற்கும் பேருண்டாச்சு
தாண்டமென்ற அவப்பித்தாண்டி என்றும் பேரு
ஆரோக்கிய மாதரென்றதற்கும் பேரு
தண்டமென்ற பத்திய முறிச்சானெறும் பேரு
பாடினோ மெட்டும் பேர் அகத்தியின் பேரே ”

உரை : அச்சம், மசகம், அசோகம் வாணிதம், அவபித்தாண்டி, ஆரோக்கியமாதர்
பத்திய முறிச்சான் என்ற எட்டுப் பெயர்கள் அகத்திக்குண்டு.

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வேறுவேறான பெயர்கள் மூலிகைகளுக்கு சுட்டப்படுகின்றன.
எனவே நமது முன்னோர்கள் அவற்றைத் தொகுத்து ஒரு நிகண்டாக ( THESAURUS )
எழுதி வைத்துள்ளனர். இதனால் மூலிகைகளைத் தேடிப் பயன்படுத்துபவர்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்கும்.

இப்படியான பெயர் பற்றிய குழப்பம் தவிர, எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான்
என்ற பழமொழிக்கேற்ப, தவறான புரிதலின் காரணமாக விபரீதங்கள் நிகழ்ந்து விடுவதுண்டு. ஒரு முறை திருமுருக
கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஒரு கதை சொன்னார்:
“சித்தர்கள் சில விடயங்களப் பூடகமாகச் சொல்லிவைப்பதுண்டு.அப்படிப்பட்ட ஒன்று ‘இரு குரங்கு கையைப்
பிழிந்து’ என்ற சொல்லாடல். அரை வேக்காடு ஒன்று அதைப் படித்து விட்டு இரண்டு குரங்குகளை
அடித்து அவற்றின் கையைச் சாறு பிழிந்து கொதிக்க வைத்து குடித்துவிட்டு செத்துத் தொலைத்ததாம்.உண்மையில் இரு
குரங்கு என்பதற்கு ‘முசுமுசுக்கை’ என்று அர்த்தம். முசு என்றால் குரங்கு, இரு குரங்கு என்பதன் உண்மையான பொருள்
முசு முசு. அத்தோடு கையைச் சேர்த்தால் முசுமுசுக்கை எனப் பொருள் கொள்ளல் வேண்டும்.”

மருத்துவ குணமுள்ள பொருகளுக்கு என பிரயோகங்கள் உண்டு.இதனை அநுபானம் எனவும் சொல்லுவதுண்டு ஒரே மருந்து அல்லது மூலிகையை வெற்றிலைச்சாற்றுடன் கலந்து சாப்பிட்டால் சளி போகும்.அதனையே இஞ்சிசாற்றுடன் சாப்பிட்டால
பித்தம் போகும். இதனைச் சரியாகப் பின் பற்றாவிட்டால் விளைவுகள் விபரீதம் ஆகிவிடுமே என்ற அச்சத்தில் இப்படி பூடகமாக
மறைத்து வைத்துள்ளனர் என்பது வாரியார் அளித்த விளக்கம்.

தகவல் தொகுப்பு : புதுவை ஞானம்.

Advertisements