பழந்தமிழ் நூல்களில் உயிர் வகைகள்
நூல் அறிமுகம் – தொடர்ச்சி. – 2.
————————————

2 அன்றில் :
—————–
இது காதல் உணர்ச்சியில் சிறந்த பறவை.பனை மரத்தின் வளைந்த கிளைகளில்
கூடு கட்டி வாழும் இயல்புடையது. எப்பொழுதும் ஆணும் பெண்ணும் இணைபிரியாதிருக்கும்
இயபிற்சிறந்தது.

” மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத்
துணைபுணர் அன்றில் ” ( நற்றினை -303)

என்பது காண்க.ஆணைவிட்டுப் பெண்ணோ பெண்ணைவிட்டு ஆணோ பிர்[ந்தால் ப்[ரிவாற்றாது
மிகவும் வருந்தும். பிரிந்து சென்ற ஆண் அன்றில் சிறிது காலம் தாழ்த்தினாலும் பெண் அன்றில்
மூன்று முறை உரத்த குரலில் கூவிப் பார்த்து விட்டு உயிரையே விட்டுவிடும் என்பர்.

“………………பெண்ணைத்தோடு மடலேறி
கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேறிய
உயிர்செலக் கடைஇப் புணர் துணைப்
பயிதல் ஆனாப் பைதலங் குருகே ” (நற்றினை- 338)

என்ற அடிகளில், அன்றில் வளைந்த அலகினை உடையதென்பதும் , ஆண் அன்றில் தன்
புணர் துணையாகிய பெண் அன்றில் பிரிந்து காலம் தாழ்த்தமையால் கூட்டிலிருந்து வெளிவந்து
உயர்ந்த மடல் மேல் ஏறியிருந்து பெண் அன்றில் தன் கூட்டினையடையும் வண்ணம் உயிரே
போகுமளவுக்கு உரத்த குரலை எழுப்பி , அப் பெண் அன்றிலை அழைக்கும் என்பதையும் காண்க.

“மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில்
துணையொன்று பிரியுனும் துஞ்சா காண். ” ( அக நானூறு – 50 )

எனத் தலைவி வருந்தும் நிலையைத் தோழி புலப்படுத்துகின்றாள் . இதனால் துணை ஒன்று பிரிந்தாலும்
தூங்காது அழைக்கின்ற அன்றிலின் துன்பக் குரல் தலைவனைப் பிரிந்த தலைவிக்கு மிக்க வருத்தட்தைக்
கொடுக்கும் என்பது புலப்படுதல் காண்க. நாள்தொறும் இரவில் அகவும் அன்றில் ஒருநாள் அகவாது இருக்கக்
கண்ட தோழி , “தலைவனைப் பிரிந்த தலைவி பெரிது வருந்துவாள் என்ற எண்ணத்தால் தான் அந்த அன்றில்
இரவில் அகவவில்லை ” என்று கற்பனைத் திறம் தோன்ற தற்குறிப்பேற்றமாகக் கூறியுள்ள தன்மை சுவை
மிக்கதாக உள்ளது.

” தன்றுணை யில்லாள் வருந்தினாள் கொல்லென
இன்றுணை யன்றில் இரவின் அகவாவே ” (கலித்தொகை – 131 )
என்பது காண்க.

மன்றத்திலுள்ள பனை மடலில் இருந்து ஒரு அன்றிற் பறவை அகவுவது கேட்டு வர்ந்திய தலைவி ஒருத்தி
அவ் வன்றிலையே வினவுகின்றாள்.

” மன்றிரும் பெண்ணை மடல்சேர் அன்றில்
நன்றறை கொன்றனர் அவரெனக் க்லங்கிய
என்றுயர் அறிந்தனை நரறியோ எம்போல
இன்றுனைப் பிரிந்தாரை யுடையையோ நீ ” (கலித்தொகை -129 )
என்பது அவள் வினா. மன்றத்தில் உள்ள கரிய பனை மரத்தின் மடலில் இருக்கும் அன்றிலே ! என் தலைவர்
யான் செய்த நன்றியை அடியோடு மறந்தனரே என்று கலங்கிய என்னுடைய துயரை அறிந்து அத்துயரின் பொருட்டு
நீ கூவுகின்றாயா ? அல்லது என்னைப்போலவே தலைவரை பிரிந்துதான் கூவுகின்றாயோ ? என்கிறாள்.
இந்த இரண்டு வினாக்களில் பின்னையதுதான் உண்மை என்பதை உய்த்து உணரலாம். பிரிந்த வழி இரங்கிக் கூவுதலே
அன்றிலின் இயல்பு என்பதை ஓர்க. ஆண் அன்றிலின் தலையில் சிவந்த கொண்டை இருக்கும் என்பதும்
பெண் அன்றிலின் வாய் இறா மீன் போல் வளைந்த்ருக்கும் என்பதும்,

” நெருப்பின் அன்ன ச்ந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு
. . . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . .
நரலும், ” (குறுந்தொகை -160)

என்பதால் அறியலாம்.

தகவல் திரட்டியவர்:
புதுவை ஞானம்.
4.06.2009

Advertisements