வீழ்வோமாயினும் வெல்வோம் !___________________________

நூறாயிரம் தடவைகள் தடுமாறி இருக்கிறது
தலை குப்புற விழுந்திருக்கிறது
சிராய்த்துக் கொண்டிருக்கிறது
மீண்டும் எழுந்திருக்கிறது
தொழிலாளர் இயக்கம்.

கழுத்து நெரிக்கப்பட்டிருக்கிறது
மூச்சுத் திணறி உணர்விழந்திருக்கிறது
நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டு.

தாக்கப்பட்டிருக்கிறது அடியாட்களால்
தடியடிபட்டிருக்கிறது காவல் துறையினரால்
துப்பாக்கி சூடு பட்டிருக்கிறது இராணுவத்தால்.

அவதூறு பொழியப்பட்டிருக்கிறது பொதுமக்களால்
மிரட்டப்பட்டிருக்கிறது மதகுருக்களால்
திசை திருப்பப்பட்டிருக்கிறது அரசியல்வாதிகளால்.

நிராகரிக்கப்பட்டிருக்கிறது ஓடுகாலிகளால்
உதிரம் உறிஞ்சப்பட்டிருக்கிறது புல்லுருவிகளால்
ஊடுருவப்பட்டிருக்கிறது உளவாளிகளால்.

காட்டிகொடுக்கப்பட்டிருக்கிறது துரோகிகளால்
பாரம்பரியம் இழந்திருக்கிறது பச்சோந்திகளால்
விலைபேசப்பட்டிருக்கிறது தலைவர்களால்
கைவிடப்பட்டிருக்கிறது கோழைகளால்.

இத்தனையும் மீறி இவ்வளவும் தாண்டி
இந்தப் புவிக்கோளம் இது நாள் வரை
அறிந்தவற்றுள் எல்லாம்
உயிர்ப்பும் திறனும் உள்ள சக்தியாய்
காலங்களின் அடிமைத்தனத்திலிருந்து
பாட்டாளி வர்க்கத்தை விடுவிப்பதான தனது
சரித்திரக்கடமையை நிறைவேற்றும்.

அடைந்தே தீரும் இறுதி லட்சியத்தை !
சூரியன் அஸ்தமிக்கும் என்பதுபோல்
நிச்சயமாய்.

மூலம்:EUGIN V.DEBIS MAY 1904
தமிழாக்கம்: புதுவை ஞானம்.

Advertisements