PROVOCATEUR
——————–
இந்த மனிதன் தன் தோழனை விற்றான்
துண்டிக்கப்பட்ட தன் தோழனின் தலையை
தங்கத்தட்டில் வைத்து விற்றான்
குருதி சொட்டச் சொட்ட.

அச்சம் துரத்துகிறது அவனை
அவனது நிழல் தொடர்வது போல
கருத்திருண்ட நீரோடை போல
ஒவ்வொரு அந்திப்பொழுதிலும்
முன்னங்காலை ஊன்றி ஊன்றி
உம்மை நெருங்கி வருவதவன்தான்
மனைவியின் உள்ளாடையை
போர்த்து இழுத்துக்கொண்டு.

அவனது இதயத்தில் தொங்கி
ஊசலாடும் தொழுநோயாளியின்
மணியோசையால் அறிவீர் அவனை.
தொழுநோய் அவனது ஆன்மாவின் சதையை
அரித்துத் தின்றுகொண்டிருக்கிறது.
இன்று அவன் பசியோடு இருக்கிறான்
அவன் பசித்திருந்த போதிலும்
வலிய பெரும்பசி கூடஇழந்து போனது
தன் புனிதத்தன்மையை.

நண்பர்களே !
இந்த மனிதன்
ஒருநாள் அந்தி சாயும் நேரம்
தங்கத்தட்டில் குருதி சொட்டச்சொட்ட
தனது தோழனின் தலையை வைத்து விற்றான்.

மூலம்:நசீம் இக்மத் . ஆங்கிலத்தில்:BERNARD LEWIS
தமிழாக்கம் : புதுவை ஞானம். WordPress.com/puthuvaignanam.