உன்னை நேசிக்கிறேன் அன்பே !
———————————–

மண்டி இடுகிறேன் , மண்ணைப் பார்க்கிறேன்
புற்கள்
பூச்சிகள்
நீல நிறத்தில் முகிழ்த்தெழும்
குருத்துக்கள்.
அன்பே நான் உன்னைக் காண்கையில்
வசந்த கால பூமியென
வாரி இறைக்கிறாய்
வனப்பினை.

மல்லாந்து படுக்கிறேன், விண்ணைக் காண்கிறேன்
மரத்தின் கிளைகள்
கிளைகளில் புட்கள்
விழிப்பின் கனவு.
அன்பே நான் உன்னைக் காண்கையில்
வசந்த கால வானமென
வாரி இறைக்கிறாய்
வனப்பினை.

மூட்டம் கொளுத்துகிறேன் இரவில் குளிர் காய
தீண்டுகிறேன் தீயினை
நீரினைத்
துணியைப்
பாத்திரங்களை
அன்பே நான் உன்னைத் தீண்டுகையில்
தாரகைகளுக்கு இடையில்
மூட்டிய தீயாய் ஒளிருகிறாய் நீ.

மக்களுக்கிடையே செல்கிறேன் நான்
மக்களை நேசிப்பவன் நான்
செயலை
சிந்தனையை
போராட்டத்தை.
அன்பே நான் நேசிக்கிறேன் உன்னை
எனது போர்ப்படயில்
ஒருத்தியாய் நீ !

மூலம்: நசீம் இக்மத்

Advertisements