மருத்துவர் அய்யா அவர்களே!
________________________

மருத்துவர் அய்யா அவர்களே! எனது
இருதயத்தில் ஒரு பாதி இங்கே
மறுபாதி சீனாவில் – மஞ்சள்நதி நோக்கி
முன் நகரும் படைகளுடன்..

ஒவ்வொரு நாள் காலையிலும்
மருத்துவர் அய்யா அவர்களே !
துளைக்கப்படுகிறது
எந்தன் இதயம்
கிரீஸ் நாட்டில்.

ஒவ்வொரு நாள் இரவிலும்
மருத்துவர் அய்யா அவர்களே
கைதிகள் அயர்ந்து உறங்கும் போதும்
மருத்துவ மனை வெறிச்சோடிய போதும்
இஸ்தான்புல் நகரில் உள்ள
இற்றுப்போன பழைய வீட்டில்
நின்றுபோய் விடுகிறது
எந்தன் இதயம்.

பத்தாண்டுகள் கழித்து
எந்தன் ஏழை மக்களுக்கென
நான் வழங்க இருக்கும்
ஆப்பிள் பழம்
எந்தன் கைகளில் இருக்கிறது.
சிவந்த அந்த ஆப்பிள் பழம்
எந்தன் இதயம்தான் .
அதனால் தான்
மருத்துவர் அய்யா அவர்களே.எந்தன்
இதயம் வலி கொண்டு துடிக்கிறது.

நிகோடின் நஞ்சினால் அல்ல
சிறைவாசச் சோர்வினால் அல்ல
இரத்தநாள அடைப்பினால் அல்ல.

சிறைக் கம்பிகளூடே . .

இரவு நேரங்களில் பார்க்கிறேன் நான்.
.
நெஞ்சு வலியையும் மீறித்
துடிக்கிறது எந்தன் இதயம்
தொலைதூர விண்மீன்களோடு.
__________________________

துருக்கிய மூலம் : நசீம் ஹிக்மத்.
ஆங்கிலத்தில் :Randy Blasing-Mutlukonak
ANGINA PECTORIS.

தமிழாக்கம் : புதுவை ஞானம்
j.p.pandit@gmail.com

Advertisements