காற்று வந்ததால் கொடி அசைந்ததா ?
கொடி அசைந்ததால் காற்று வந்ததா ?
_______________________________________

வீடு என்ற ஒன்று விளையக் காரணம் ?
மரமெனும் பண்டத்தால் கட்டப்பட்டது.

மரம் என்பது யாது?
அது ஒரு கோட்பாடு.

வீடு விளைந்ததன் காரணம் மரமா?
இல்லை.

மரம் என்பது எதனால் ஆனது?
நீர், நார் எனும் பண்டத்தால் ஆனது.
வீடு விளைந்ததன் காரணம் நீரும் நாருமா?
மரத்தை உருவாக்கியது நீரும் நாருமா?
இல்லை.
நீர்ம வாயு, பிரான வாயு,கரி இவற்றின் கூட்டு
என்ற கோட்பாடே நீரும் நாரும் இவை சேர்ந்த மரமும்.

வீடு விளையக் காரணம் நீரும் நாருமா?
நீரும் நாரும் உருவான காரணம்
நீர்ம வாயு பிராண வாயு கரி இவற்றின் கூட்டா?
இல்லை.
எலெக்ற்றான், புரோட்டான் மற்றும்
நியூற்றான், எனப்பட்ட அணு அங்கங்களின்
கூட்டு எனும் கோட்பாடு.

அணு அங்கங்கள் அல்லது
நீர்மம்,பிராணன், கரி அல்லது
நீரும் நாரும் அல்லது
மரம் இவை
வீடொன்று விளையக் காரணமா?

இல்லை.
இவையனைத்தும்
முதலும் முடிவும் அற்ற
அநாதி அண்டத்தின்
அபின்ன முழுமையின்
அகண்டிதத்தின்
அகண்டாகாசத்தின்
கோட்பாடுகள்.

குவித்துப் பார்க்கையில் குறிப்பிட்ட காலத்தைய
கண்ணோட்டத்தின் விளைவு தான் வீடு.

யதார்த்தம் என நாமழைக்கும் மாயையில்
காரணமும் இல்லை காரியமும் இல்லை
காரியம் என்பது கண்ணோட்டத்தின் விளைவு தான்
கருவி தான்.

அகிலத்தை ஆக்கியது யார்?
உந்தனது அகிலத்துக்கு
ஆண்டவன் நீயேதான்.
ஆக்கியவனும் நீ
ஆக்காதவன் போல்
நடிக்கிறவனும் நீ
விளையாட்டுக் காட்ட.

கோளில் உள்ள அத்தனை மனிதருக்கும்
ஆளுக்கு ஒன்று என
அத்தனை அகிலங்களா?

உனது கண்ணோட்டத்தில்
உண்டான விளைவு அது .

எனது கண்ணோட்டத்தை
உருவாக்கியது யார் ?

நீ…..தான் நீயே…..தான்.

ஒரு ஜென் ஆசானும் இரு சீடர்களும்
கொடி மரம் ஒன்றைக் கடக்க நேரிட்டது.
கொடி அசைகிறதா காற்று அசைக்கிறதா?
குருவானவர் கேட்டார்.

கொடி என்றான் ஒரு சீடன்
காற்று என்றான் மறு சீடன்
இரண்டும் அல்ல
சலனம் உன் மனதில் தான்
என்றார் குருவானவர்.

மூலம் ;ROBERT HARGROVE
தமிழாக்கம்: புதுவை ஞானம்.

Advertisements