நசீம் இக்மத் கவிதைகள்

1 .அழுது சிவந்த அபலை .

 
அழுது கொண்டிருக்கிறாள் ஒரு மாது
வெற்றுக் கால்களுடன் கரையினில் நின்று .
வெற்றுத் தோணியொன்று கட்டவிழ்ந்து
தத்தளித்து நீரில் மிதக்கிறது அலையடித்து –
செத்துப்போன பறவைமிதப்பதைப்போல .
நீரடித்துச் செல்லும் திசையினில் செல்கிறது
அது ஏரியின் குறுக்கே
மலைகளின் அடிவாரத்தில்
மோதிச் சிதைவதற்காய் .
மாலைப்பொழுது கவிகிறது
இஸ்னிக் ஏரியின் மீது .
கனத்த குரலுடைய குதிரை வீரர்கள்
சூரியனின் குரல்வளையை வகிர்ந்து
குருதியைக் கொட்டிச் சிந்துகின்றனர்
ஏரியின் நீர்ப்பரப்பில் .
அழுது கொண்டிருக்கிறாள் ஒரு மாது
வெற்றுக் கால்களுடன் கரையில் நின்று
பசியாற ஒரு நண்டு பிடித்ததற்காய்
கோட்டைச்சிறைக்குள் விலங்கிடப் பட்டு வாடும்
ஒரு மீனவனின் அன்புத் துணைவி அவள் !

2. உன்னை நினைப்பது

 
உன்னை நினைப்பது
எவ்வளவு அழகாயிருக்கிறது
சாவுச்செய்திகளுக்கும்
வெற்றிச்செய்திகளுக்கும்
மத்தியில் சிறையிலிருந்து கொண்டு
நாற்பது அகவை கடக்கையில்.
உன்னை நினைப்பது
எவ்வளவு அழகாயிருக்கிறது
உனது கைகள் நீலத்துணியில்
சாய்ந்திருக்க
உனது கேசம் வளமும்
மென்மையுமான வனப்பில்
எனது நேசமிகு இஸ்தான்புல் போலிருக்க
உன்னை நேசிக்கும் இன்பம்
இரண்டாம் மனிதனது போலிருக்கிறது.

3. கரும்பழ உணவைக் கண்டதே இல்லை அவள்.

 

 

தனக்கென ஒரு கைக்கடிகாரம் இருந்து
அதற்கு அவளது கணவன் சாவி கொடுத்தால்
தன்னால் தூங்க முடியும் என
கனவுகூட கண்டதில்லை அவள்.

அவனுக்கு என்னைப் பிடிக்காது.
நான் எதிரியாய் இருக்கிறேன் –
அவன் நம்பிக்கை அற்றவனாய்.
இந்தப் பெரிய மாளிகையின் எசமானன் நான்
வெறும் வன்மத்தின் காரணமாக
துயரத்தைக் கொடுக்கிறேன் – அவனுக்கு
ஒரு மஞ்சள் மாத்திரைக்குப் பதிலாய்..
வட்டார கணக்குப்பிள்ளையும்
நானும் ஒன்றுதான்.
நான் காட்டும் இடத்தில்
கைநாட்டு பதிக்கிறான் அவன்
நம்பிக்கையினால் அல்ல –
நான் உத்தரவிடுகிறேன் என்பதனால்.
அறுவடையைத் தவிர அவன்
எதுவொன்றைப் பற்றியும் சிந்திப்பதில்லை.
தன்னால் முடிந்தது அனைத்தையும்
செய்துவிட்டான்.
அவனது மனைவி இறந்து போனால்
அது எந்தன் குற்றம்.
இந்தப் பெரிய மாளிகையின்
எசமானன் நான்
அவனுக்கு என்னைப் பிடிக்காது
நான் அவனது எதிரி.

அவனது மனைவியைப் பார்த்தீர்களா ?
ஒரு கைப்பிடியளவு
மண்ணாங்கட்டியைப் போல இருக்கிறாள்
ஆண்டுக்கணக்கில் நோயுற்று இருந்ததனால் அல்ல.
ஏற்கனவே
இரண்டு குழந்தைகள் அவளுக்கு.
இன்னும் சமைத்துக் கொண்டிருக்கிறாள் அவள்.
அவள் கருவுற்று இருக்கிறாள் என்பதனால்
இன்னும் புணர முடியும் என்றாகிறது.
அவளது பிறப்புச் சான்றிதழைப் பார்த்தேன்
1903 என்றது அது .
ஒரு வயதோ ஓராயிரம் வயதோ
அவளுக்கு -அவள் வாழவேயில்லை.

கடல் தெரியுமா அவளுக்கு ?
எனக்குத் தெரியாது.
ஒவ்வொரு நாளும் உதயத்தில் அவள்
வியப்போடு பார்க்கப்படுகிறாள் !
நறுமணம் திணிக்கப்பட்ட கரும்பழ உணவைக்
கண்டதே இல்லை அவள் !.

 

 

 

4. On the 20th Century
இருபதாம் நூற்றாண்டு பற்றி.

 பர்சா சிறைச்சாலை, 1941.

 

 

தூங்கவும், எனது அன்பே
நூறு ஆண்டுகள் கழித்து
மீண்டு எழவும் – இல்லை
இந்த நூற்றாண்டு என்னைப்
பயமுறுத்தவில்லை.
நான் ஓடுகாலி இல்லை.
மோசமான அவமானகரமான
நூற்றாண்டு இல்லை – எனது அன்பே
பிரமாதமான வீரம் நிறைந்த
நூற்றாண்டு.
வெகுவிரைவில் பிறந்து விட்டதற்காக
வருந்தவில்லை நான்.
இருபதாம் நூற்றாண்டின் குழந்தை நான்
பெருமைப்படுகிறேன் அதற்காக.
நம்மோடு இருக்கும் அணிகளுடன்
இணைந்து புதியதோர் உலகுக்காய்
போராடுவது போதும்
எந்தனுக்கு.
முன்னதாக இல்லை
எல்லாவற்றுக்கும் அப்பாலும்
எனது சாவுக்குப் பின்னும்
உதயமாகும் நூற்றாண்டு
அப்போது கடைசியாக சிரிப்பவர்கள்
சிறப்பாக சிரிப்பார்கள் _ எனது
துயர்மிகும் இரவுக்கு பிறக்கும்
ஒரு விடியல்.பின்னர்
ஆர்த்தெழும் கூக்குரலுடன்
எங்கெங்கும் சூரிய ஒளிதான்
உமது விழிகளைப்போல.

 

 

5. Today is Sunday

இன்று ஞாயிற்றுக்கிழமை.
______________________

இன்று முதல் முதலாக என்னை
அழைத்துச் சென்றனர் வெளியே
சூரிய வெளிச்சத்தில்.

வாழ்வில் முதன்முறையாக .
திகைத்து நின்றேன்
வானம்
இவ்வளவு உயரம்
இத்தனை நீலம்
எத்தனை விரிவு !

பயபக்தியோடு உட்கார்ந்தேன்
தரையில் சம்மணமிட்டும்
முதுகை சுவற்றில் சாய்த்தும்.

இந்தக் கணத்தில்
வீழ்வதற்கு வலையொன்றும் இல்லை
போராட்டம் எதுவொன்றும் இல்லை
மனைவியும் இல்லை.

பூமியும் சூரியனும் நானும் தான்.

மிக்க மகிழ்வோடிருக்கிறேன் நான்.

மூலம் : Letters from a Man in Solitary, 1938
Nazim Hikmet.
தமிழாக்கம் : புதுவை ஞானம்

j.p.pandit@gmail.com

Advertisements