எழுத்தறிவு அற்றவர்களின் எண்ணறிவு
——————————————————–
வீட்டுச் சுவற்றில் பால்காரிகள் புள்ளியிட்டு அடையாளம் வைத்து இத்தனை சேர் பால் கொடுத்திருக்கிறேன் எனக் கணக்கிடுவதை மூத்தோர் அறிவர்.

ஒரு மாட்டின் முகத்தைக் கொம்புகளோடு வரைந்து ஏழோ எட்டோ புள்ளிகள் வைத்தால் அவர்களிடம் அத்தனை மாடுகள் இருந்ததாகப் பொருள் படும் என குகைச்சித்ட்திரங்கள் பற்றி ஆய்வு செய்த மாணுடவியல் அறிஞர்கள் சொல்கின்றனர்.

இப்படிப் புள்ளி வைத்து கணக்குப் பார்த்தவர்கள் சொல்லி இருக்கலாம் “ பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது!” என்று.

அந்தக்காலத்தில் பெண்களும் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்திருப்பதும் ஆனாலும் பருவம் வந்ததும் படிப்பு தடுக்கப் பட்டதும் பற்றிய ஒரு தாலாட்டுப் பாடல் ( மெக்கன்சி அவர்கள்தொகுத்தது ) கீழே தரப்படுகிறது :

“அஞ்சு வயசில நான் கண்மணியே
அரிச்சுவடி படித்தேனம்மா.
பத்து வயசுக்குள்ளே நான் கண்மணியே
படிப்பெல்லாம் முடித்தேனம்மா.
பன்னிரண்டு வயசிலே நான் கண் மணியே
பருவமான காலத்திலே
வாலிபப் பிராயத்திலே கண்மணியே
வாழ்க்கப் பட்டேன் ஒங்கப்பாவுக்கு.”

திண்ணைப் பள்ளிக்கூடம் கூட போக முடியாதவர்கள் இட்டுக்கட்டிய கரகாட்டப் பாடல் ஒன்று.

“ஒன்னாங் கரகமடி கன்னி – ஓகோ என் தாயே
ஓடி வந்துப் பூசை வாங்கு இப்போ – தாயே.

ரெண்டாம் கரமடி கன்னி – ஒகோ என் தாயே
ரணகரகம் பொன்னாலே இப்போ – தாயே.

மூணாங்கரகமடி கன்னி – ஓகோ என் தாயே
முத்தாலே பொன் கரகம் இப்போ – தாயே.

நாலாங்கரகம்டி கன்னி – ஓகோ என் தாயே
நாடி வரும் பூங்கரகம் இப்போ – தாயே.

அஞ்சாங்கரகமடி கன்னி – ஓகோ என் தாயே
அசைந்தாடும் பொன்கரகம் இப்போ -தாயே.

ஆறாங்கரமடி கன்னி -ஓகோ என் தாயே
அசைந்தாடும் பூங்கரகம் இப்போ – தாயே.

ஏழாங்கரகமடி கன்னி – ஒகோ என் தாயே
எடுத்தாடும் பொன் கரகம் இப்போ – தாயே

எட்டாங்கரமடி கன்னி – ஓகோ என் தாயே
எடுத்தாரோம் பொன் கரகம் இப்போ – தாயே.

ஒன்போதாங் கரகமடி கன்னி – என் தாயே
ஓடி வந்து பூசை வாங்கு இப்போ – தாயே.

பத்தாங்கரகமடி கன்னி – என் தாயே
பணிந்தாடும் பொன்கரகம் இப்போ -தாயே.

பத்துஞ் சொல்லி முடிந்ததடி கன்னி – என் தாயே
பத்தினி உன் வாசலிலே இப்போ – தாயே! ”

“ ஈரிரண்டைப் போடடா
இறுக்க மாட்டைக் கட்டடா

பருத்திக் கொட்டை வையடா
முக்கட்டு வாணியன் செக்கடா

செக்கும் செக்கும் சேந்தாட
வாணியன் வந்து வழக்காட
வாணிச்சி வந்து கூத்தாட

நாலை வைச்சு நாலு எடு
நாராயணன் பேரையெடு
பேரெத்தபின் பிச்சையெடு

ஐவரளி பசு மஞ்சள்
அரைக்க அரைக்கப் பத்தாது
பத்தாத மஞ்சள் பசு மஞ்சள்

ஆறுகுருத்தலம் குருத்தலம்
அடுப்புத் தண்டலம் தண்டலம்
வேம்பு சுட்டால் வெண்கலம்

ஏழு புத்திர சகாயம்
எங்க புத்திர சகாயம்
மாட்டப் பத்துர சகாயம்

எட்டும் பொட்டும்
எடக்கண்ணு பொட்டை
வலக்கண்ணு சப்பட்டை

ஒன்போது நரி சித்தரத்தை
பேரன் பொறந்த்தது பெரிய கதை
பேரிட வாடி பெரியத்தை

பத்திரா சித்திரா கோலாட்டம்
பங்குனி மாசம் கொண்டாட்டம்
ஆடி வெள்ளிக் கிழமை வந்தால்
அம்மனுக்கல்லோ கொண்டாட்டம்”

புதுவை ஞானம்

j.p.pandit@gmail.com

Advertisements