சுடுவது சுலபம் !
————————–

சுடுவது சுலபம்……..
இதயத்தைக் குறி பார்த்து
சுடுவது சுலபம் .
துளைப்பது சுலபம் இதயத்தைத்
தோட்டாவால் ,வார்த்தைகளால்
ஆழமான அன்பினால் அல்லது
கண்ணீர்த் துளிகளால் …..

இதயம் நசித்துப் போகும்
இருபத்து நான்கு மணி நேரத்துக்கோ
நிரந்தரமாகவோ .

தாக்குவதற்கென்று விதிகள் உண்டு
விதிகள் பற்றி நூல்கள் உண்டு
ஆனால்……
அறிவைக் குறி பார்த்து சுடுவது கடினம்
தீர்க்கதரிசிகளின் அறிவைக்
குறி பார்த்து சுடுவது கடினம்.
ஏனெனில்……அது….
மேகங்களுக்கு மேலாகப் பறந்து செல்லும்
நிலவுடனும் தாரகைகளுடனும்.

அதற்கென்று ஒரு …….
சுழற்சிப் பாதை இல்லை
ஏமாற்றப் பாதை இல்லை
டாம்பீகப் பாதை இல்லை -அது

பாதைகள் இன்றியே பறந்து செல்கிறது -எல்லா
ஆர்கிமிடீசுகளின் உற்சாகத்துடன் – எல்லா
ரசவாதிகளின் வெறித்தேடலுடன் -எல்லா
கொலம்பஸ்களின் வெற்றிப் பெருமிதத்துடன்
அல்லது……
மாரிக்கால அரண்மனை
மேல் குண்டுமாரி பொழிந்த
கடற்படைச் சிப்பாய்களின்
உணர்ச்சிப் பெருக்குடன் !

மற்றெல்லா மனிதருக்கும்
கண்டு கொண்ட _காண வேண்டிய
கிரகமாய் ஆகும் வரை ! -.

மூலம் :DIMITRY DOBLEV பல்கேரியா
தமிழாக்கம் : புதுவை ஞானம்.

Advertisements