பூவுலகின் நண்பர் – அமரர்.தோழர். நெடுஞ்செழியன் அவர்களின்
பசிய நினைவில் சிறுவனின் அஞ்சலி.
—————————————-

தேசத்தைக் கட்டுவது இல்லை பசித்தவர்கள் !
————————————————————————

அழிந்து போகட்டும் காடுகள்
மலராமல் கருகட்டும் மாம்பூக்கள்
குலவிட வேண்டாம் குருவிகள் கூட்டம்
இசைத்திட வேண்டாம் இன்னிசைக் குயில்கள்
நச்சு நீர் அருந்தி நலிவுற்றுப் போகட்டும்
நந்தி தேவரும் காமதேனுவும்
செத்து மிதக்கட்டும் செம்மீன்கள்
யாருக்கு என்ன பயன் ?
இவைகள் வாழ்வதனால்.

பல உழவர்களும் சில மீனவர்களும்
வேலை இழந்து போவார்கள்
நச்சு வாயு நசிப்பிக்கும்
சில லட்சம் மக்களை – அதில்
சில ஆயிரம் பேர் மாண்டு போவார்கள்
அதனால் என்ன குடி முழுகிப் போய் விடுமா ?
தேசீய நலன் தான் தலையாயது – எந்தத்
தியாகமும் செய்யலாம் அதற்கென -எனவே
பேசாதீர்கள் சுற்றுச் சூழல் பற்றி !

தேசம் என்பது சுற்றுச் சூழல் அல்ல
தேசம் என்பது காடுகள் அல்ல
தேசம் என்பது குயில்கள் அல்ல
தேசம் என்பது ஆறுகள் அல்ல
தேசம் என்பது கால்நடை அல்ல
தேசம் என்பது வேளாண்மை அல்ல.

மக்கள் என்பவரோ……………………..?
நாட்டுக்காகத் தியாகம் செய்வதற்காக
உயிர் பிழைத்திருக்கிறார்கள் அவர்கள்.
சில ஆயிரம் மக்களோ
சில லட்சம் மக்களோ செத்துப் போகலாம்
நச்சு வாயுக் கசிவினாலும் அல்லது
நஞ்சு கலந்த குடி நீராலும்.
தியாகிகள் பட்டம்
சூட்டுவோம் அவர்களுக்கு
எரிக்கவோ புதைக்கவோ செய்வோம்
அவர்தம் சடலங்களோடு.

பசித்த மக்கள் கட்டுவதில்லை தேசத்தை
பலவீனம் ஆகிவிட்டார்கள் இப்போது.
நோய்வாய்ப் படுகிறார்கள் அடிக்கடி
செத்துப் போகிறார்கள் நச்சு வாயுவால் !
இழப்பீடு கேட்டு முழங்குகின்றனர் சிலர்
தலை நிமித்தி நடக்கிறார்கள் இதனால் !

எனவே……

தேசீய வளர்ச்சியில் இயந்திரங்களுக்கு
முன்னுரிமை வழங்கப் படுகிறது.
மனிதர்களாய் இருக்கத் தேவை இல்லை
மக்கள் தொகை என்பது.
இயந்திரங்களை விரும்புவது ஏனெனில்
நோய் வாய்ப் படுவதில்லை இயந்திரங்கள்
செத்துப் போவதில்லை நச்சு வாயுவினால்
கேள்விகள் கேட்பதில்லை இயந்திரங்கள்
வேலை நிறுத்தம் செய்வதில்லை
தலைநிமிர்த்தி நிற்பதில்லை
சிந்திப்பதில்லை மனிதர்கள் போல்
தேடுவதில்லை விடுதலைப் பாதைகளை.

மக்களோ சிந்திக்கிறார்கள் அளவுக்கு மீறி
ஆபத்துக்கு ஆளாகிறது தேசம் அதனால்.

எனவே….
உடையவர்களும் இயந்திரங்களும்
மட்டுமே இனி இருப்பார்கள்
மக்கள் மன மாற்றம் அடையும் வரை
இயந்திரமாக இயங்கும் வரை
துப்பாக்கி சனியன்களின் சொலிப்பு
மெருகூட்டப்படும் மேலும்…மேலும். !

( பாடலைப் பாடியது மத்தியப் பிரதேச உழவுச் செயல் வீரர் -தொகுத்தவர் :ஜயந்தி ஆலம்)

ஆங்கில மூலம் :SHYAM BAHADUR NAMARA —SOURCE : WOMAN’S LINK VOL 2
JAN -MARCH 19996

தமிழாக்கம் :புதுவை ஞானம்.

———————————————————————————————————————————————————————————-

தன் தலையில் தான் விடியும்.
______________________________
தமிழாக்கம் : புதுவை ஞானம்
_____________________________
எல்லாமும்
எல்லவற்றுடனும்
பிணைக்கப்படிருக்கின்றன
நமக்கு இது தெரியவே தெரியும்.

மனிதனுக்கு உரித்தானதல்ல
இந்தப் புவிக்கோளம்
புவிக்கோளத்துக்கு உரித்தானவன் தான்
இந்த மனிதன்
இதுவும்….
நமக்குத் தெரியவே தெரியும்.

எல்லாமும்
எல்லாவற்றுடனும்
பிணைக்கப் பட்டிருக்கின்றன.
குருதியினால்
குடும்பம் பினைக்கப் பட்டிருப்பது போல்
எல்லாமும்
எல்லாவற்றுடனும்
பிணைக்கப் பட்டிருக்கின்றன.

மண்ணுக்கு நேருவதெல்லாம்
மண்ணின் மைந்தருக்கும் நேரிடும்.
வாழ்வெனும் வலைப் பின்னலை
நெசவு செய்யவில்லை மனிதன்
வலைப்பின்னலின்
ஒற்றை இழைதானே மனிதன் ?

வலைப் பின்னலுக்கு இழைக்கப்படும்
எந்தவொரு இடர்ப் பாடும்
தன் தலையில் தான் விடியும்.

___________________________________________________________

நன்றி :மவுன வசந்தம் – பூவுலகின் நண்பர்கள்- நேர் 2003- 2004

Advertisements