ஓசை நயங்கள் / நியாயங்கள்
______________________________

” தொல்லையாய் இரைகின்றன
ஆலை இயந்திரங்கள் –
அந்நியமாய் இசைக்கின்றன
ஆலய மணிகள் –
மிரட்டலாய் முழங்குகின்றன
சிறைச் சாலைச் சேகண்டிகள் –
வாழ்க்கையின் பொருள்
மூன்றே ஓசைகளில் !

ஒவ்வொரு ஓசையும்
அதனதன் நயத்தில்
ஒவ்வொரு நியாயமும்
அதனதன் சொற்களில் !

ஆணையிடுகின்றன ஆலை இயந்திரங்கள்
இரத்த வியர்வை சிந்து இன்றேல்
கொப்பரையாய்க் கொப்பளிக்கும்
உன் கண்ணீர்த் துளிகள் !
ஓய்ந்து போகும் உன் கால் கைகள்
ஓய்ந்து போனால் எனக்கென்ன ?
உழை…உழை…உழைத்துக் கொண்டே இரு !

இசைக்கிறது ஆலய மணி தேன் கலந்த வாசகத்தால்
குழந்தாய் ஏற்றுக்கொள் சுளிப்பின்றி
வாழ்வின் துயரங்களை ! அதனால் உன்
ஆத்மா விடு படும் சாந்தி அடையும் !
பற்றறுத்தலில் தான் சொர்க்கம் இருக்கிறது !
இன்றேல் நரகம் செல்வாய் ! அந்தத்
தொடுவானம் நோக்கித் தொழுது கொண்டேயிரு !

மிரட்டி முழங்குகிறது சிறைச்சாலைச் சேகண்டி
பணிந்து கிட ! தலை தாழ்த்திச் சரணடை !
பார் இந்தச் சிறையின் பலத்த கதவுகளை
உயர்ந்த மதிற்சுவரை — விலங்குகளைத் தளையை
துப்பாக்கி முனையை – வாட்களின் கூர்மையை
வாழ்வதற்கு உரிமை கேட்டால் சாகடிக்கப் படுவாய் !

மிரட்டி முழங்குகிறது சிறைச்சாலைச் சேகண்டி
தொல்லையாய் இரைகின்றன ஆலை இயந்திரங்கள்
அந்நியமாய் இசைக்கின்றன ஆலய மனிகள்
வாழ்க்கையின் பொருள் மூன்றே ஓசைகளில் ! ”

மூலம் : TOO HUU _ VIETNAM
தமிழாக்கம் : புதுவை ஞானம்.

Advertisements