தோணி
———-
இளமைக்காலம் தொட்டே உன்னதமாய்த்
துலங்கியதென் யோக சக்தி.
வாழ்க்கைச் சக்கரத்தின் கரும வினைச் சுழற்சியில்
சிக்காமல் விலகி நிற்க – என் இயல்பைப் பயிற்றுவித்து
கடைப்பிடித்தேன் சத்தியத்தை.

மார்க்கத்தைத் தேடினேன் மனத்தை வெளுப்பித்து
இருதயம் சிரசு என்னும் சிகரத்தில் ஏறித் தேடிப்
பறித்து வந்தேன் பச்சிலை நாற்றுக்களை- சிகரத்தில்
வீற்றிருந்தார் முதியதோர் சிரஞ்சீவி – அகவை
ஆயிரத்தெட்டை அநாயசமாய்க் கடந்திருந்தார்.

மிகப்பெரும் தயையுடன் குரு பீடமேற்று
சிரஞ்சீவித்தன்மையின் சீர்த்தடம் காட்டினார்.
” உந்தன் உடலுக்குள் உறைகின்றன
ஆன்மாவும்ஊற்றுக்குளிகைகளும்,
வெளியே தேடும் வீண் முயற்சி வேண்டாம்! ” என
விளக்கி அருளினார் விண்ணுலக அதிசயத்தை.
அடித்துப் போயிருப்பேன் கால வெள்ளத்தால்
அந்த அடித்தளம் இல்லாவிட்டால்.

அருணனும் அம்புலியும் ஆர்வமாய்ப் புணர
அமைதியாய் வீற்றிருந்தேன் – ஒளிரத் தொடங்கியது
உண்முகச் சோதி ! ஆறறிவும்அடங்கித் துலங்க
அறுந்தன ஆசைகள்… காயம் வலுத்தது காலப் போக்கில்.

எளிமையாய் இருந்தது இளமைக்குத் திரும்புவது
எட்டாத தொலைவு இல்லை தவசிகளை எட்டுவது.
மூன்றாண்டு காலம் நாடியைக் கட்டியதில்
கிட்டியது எளிதாய் தெய்வீக தேகம்.

நிலையற்ற மனிதர்களின் அலைத்துயரம் தாண்டி
அப்பாலுக்கு அப்பால் ஆழ்கடல் நோக்கி
மிதந்தது தோணி…….!

மூலம்: யுவான் சுவாங்.

தமிழாக்கம் : புதுவை ஞானம்.
———————————–

‘இருதய சூத்திரம்’
———————-
பரமிதப் பிரக்ஞை யோகத்தில்
பரவெளியில் ஆழ்ந்திருந்தார்
அவலோகதீஸ்வர போதி சத்துவர்.
( ரஸம்,ரூபம்,ஸ்பரிசம்,ஸ்கந்தம்
ஸ்ப்தம் என வட மொழியில் அறியப்படும்)
சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஒசை அனைத்தும்
மனக் கவலைகளைக் கடத்தும் வெற்றிடமே எனத்
தெள்ளெனத் தெளிவித்தார்.

சாரிபுத்திரா……….!
வடிவம் என்பதோ வெறுமை
வெறுமை என்பதோ
வடிவம் அன்றி மற்றோன்றில்லை.
வடிவம் என்பது உண்மையில் வெறுமை
வெறுமை என்பது உண்மையில் வடிவம்.

உணர்ச்சிகள், சிந்தனைகள், உள்ளுணர்வு, செயலூக்கம்
அனைத்தும் அவ்வாறே !

சாரிபுத்திரா……….!
அடிப்படையில் வெறுமையே
அனைத்துப் பண்டங்களும்.
தோன்றுவதுமில்லை மறைவதுமில்லை.
களங்கமும் இல்லை புனிதமும் இல்லை
பெறுவதும் இல்லை இழப்பதும் இல்லை .

எனவே…..
வெறுமையுள் வடிவமில்லை
உணர்ச்சியில் உள்ளுணர்வு இல்லை
சிந்தனை இல்லை செயலூக்கமும் இல்லை.

கண்ணில்லை காதுமில்லை
மூக்கில்லை நாக்குமில்லை
உடலில்லை மனமுமில்லை
நிறமில்லை ஒலியுமில்லை
மணமில்லை ருசியுமில்லை.
தொடு உணர்வுமில்லை
சிந்தனைப் பொருளுமில்லை
பார்த்தல் இல்லை கெட்டல் இல்லை
சிந்தனை உட்பட அனைத்துமே இல்லை.

அறியாமை இல்லை
அறியாமையின் முடிவும் இல்லை.
அவ்வாறே
மூப்புமில்லை சாவுமில்லை.

துயரமும் இல்லை
துயர்க் காரணியுமில்லை
துயர் அறுக்கும் பாதையும் இல்லை.

ஞானமொன்றில்லை – அதை
நாடுவதும் இல்லை – ஏனெனில்
அடைவதற்கென்று
எதுவுமே இல்லை.

பரமிதப் பிரக்ஞை நிலையில்
சஞ்சரிக்கின்றார் போதி சத்துவர்
அறிவில் தடங்கலின்றி .

தடங்கல் ஏதும் இல்லாததால்
அஞ்சுவதற்கும் ஏதுமில்லை.
திசை திருப்பும் சிந்தனைகளுக்கு அப்பால்
நிர்வாணம் !

நேற்றைய, இன்றைய, நாளைய,
எல்லாப் புத்தர்களும் சஞ்சரிக்கின்றனர்
பரமிதப் பிரக்ஞையில்
அனுத்ரா,சம்யகா, சம்போதி நிலையில்.

எனவே,
பரமிதப் பிரக்ஞையானது
மாமந்திரம் , ஞான மந்திரம்,
கடத்தற்கரிய மந்திரம்
உன்னதத் திருமந்திரம்
எல்லாத் துயரங்களையும்
போக்கும் மந்திரம் _ என்பதை
உணர்ந்து கொள்.
இதுவே உண்மை ஏமாற்று வித்தை இல்லை.

எனவே……..
பரமித மந்திரத்தை ஓங்கி உச்சரி !
தோரண வாயில் தோரண வாயில்
பர வாயில் பர சம வாயில்
போதி ஸ்வாஹா !

மூலம்: ZEN
தமிழாக்கம் : புதுவை ஞானம்.

———————————————
யோகத்துக்கு அப்பால்………..
__________________________
சுழலும் இவ்வுலகத்தை நான் சுற்றிச் சுற்றி வரும்போதெல்லாம்
தனி நபர்கள்,கட்சிகள்,அரசுகள்,அல்லது;
ஜன ரஞ்சகமான கொவில்களால் வசியப்படுத்தப்பட்டும்,
பாரம்பரியமான கட்டுக்கதைகளால் மயக்கடிக்கப்பட்டும்
இருக்கின்ற மக்கள் திரள் ஆகியவை மட்டும்
மனித இனத்தின் துயர்நிலக்குக் காரணமல்ல
என்பதோடு – சில அடிப்படையான கேள்விகளும் எழுகின்றன.அவையாவன :
உலகம் மற்றும் அனுபவம் என்பதன் பொருள் என்ன ?
நான் யார் ? உயிர் வாழ்தலின் நோக்கம் என்ன ?
என்பன பற்றிய அறியாமை ஆகும்
.பழமையான இந்த அறியாமைத் தடையை வெட்டி வீழ்த்தித்
தகர்ப்பது
துயறுற்று உழலும் இப்பூமியின் மீது நீடித்த அமைதியைக் கவிய வைக்கும் என நான் நம்புகிறேன்.

நமது சிக்கலான கால கட்டத்தில் ,
உலகப் பிரச்சனையின் மையக்கருவைக் கண்டுணர்வது
மிகவும் எளிதானது.
மனம் எனும் மறைவான ஊற்றிலிருந்துதான் எல்லாச் செயல்களும் சுரக்கின்றன,
மனிதர்கள் எப்போது சரியாகச் சிந்திக்கிறார்களோ
அப்போது தான் சரியாக நடப்பார்களே ஒழிய
அதற்கு முன்பாக சரியாக செயல்பட மாட்டார்கள்.
அவர்களது செயல்கள் அவர்களது சிந்தனையை
விட எப்போதும் உயர்வாக இருக்க முடியாது .ஏனெனில், அவர்களது ஓசை மிக்க காலடிப் பயணங்கள் கேட்க இயலாத மனதின் பிரகடனங்களால் தீர்மானிக்கப் படுகின்றன.

உலகத்தின் கசப்பான துயரங்களும்,
மிருகத்தனமான பாவங்களும் ;
பழைமை அறியாமை எனும் நோயின் அறிகுறிகள்.
அந்த நோய்க்கான ஒரே மருந்து புதிய அறிவு தான். அறைகுறைப் பிரக்ஞையிலும்,
மேம்பட்ட வாழ்வுக்கான பக்குவமற்ற முயற்சிகளிலும்
உழன்று கொண்டிருக்கும் ஒவ்வொரு
பகுத்தறிவாளனுக்கும் மேலே சொல்லப்பட்ட மூன்று கேள்விகளுக்குமான விடையைத் தேடும் முயற்சி
தவிர்க்க இயலாதது.
மனத்தயக்கத்தில் மருண்டு கிடக்காமல் உண்மையின் ஒளியை வெளிக்கொணர்வது
அவர்களது கடமை ஆகும்.

மூலம் : ;
PAUL BRUNTON _ BEYOND YOGA

கற்பதை விட்டொழி -உந்தன்
தொல்லைகளுக்கு முடிவு கட்டு.

ஆம் என்பதற்கும்
இல்லை என்பதற்கும்
வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ?

நல்லது என்பதற்கும்
கெட்டது என்பதற்கும்
வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ?

மற்றவர்கள் அஞ்சுவதைக் கண்டு
நானும் அஞ்ச வேண்டுமா ?
இது என்ன முட்டள் தனம் ?

எருதைப் பலியிட்டு விருந்தைச் சுவைக்கின்றனர் சிலர்
பூங்காவுக்குச் செல்கின்றனர் வசந்தத்தில் சிலர்
சிகரங்களில் ஏறிச் சாதிக்கின்றனர் சிலர்
எங்கிருக்கிறேன் என்பதே புரியாமல்
தடுமாறுகிறேன் நான் மட்டும் !.

இன்னும் சிரிக்கக் கற்றுக் கொள்ளாத
அப்போது தான் பிறந்த பச்சிளம் குழந்தை போல
எங்கும் போவதற்கின்றி தவித்துத்
தடுமாறுகிறேன் நான்.

தேவைக்கு மேலேயே இருக்கிறது மற்றவர்க்கு
எனக்கு என்று எதுவுமே இல்லை.
நான் ஒரு முட்டாள்! ஆம், குழம்பிப் போனவன்.
தெளிவாகவும் பிரகாசமாகவும் இருக்கிறார்கள் மற்றவர்கள்
நான் மட்டும் தான் இருட்டில் தடுமாறுகிறேன்
கூர்மையாகவும் புத்தியாகவும் மற்றவர்கள்
நான் மட்டும் தான் தத்தளிக்கிறேன் கடலலை போல்
போக்கற்றும் ஓய்வற்றும்.

சுறுசுறுப்பாய் மற்றவர்கள்
நோக்கமற்றும் மன இறுக்கத்தோடும்
வித்தியாசமானவனாக
இயற்கை அன்னையால்
சீராட்டப் படுபவன் நான்.
——————————————————————————

Advertisements