நீ நேசிக்கும் பசிய தீவினை விடுவிக்க !
மார்த்தியின் புரட்சிக்கனலை
விழிகளிலே தேக்கி வந்து கொண்டிருக்கிறோம் !
‘ வெற்றி அல்லது வீர மரணம் ! ’ என வெஞ்சூளுறைத்து
விரைவாய் வருகின்றோம் !

உன்னுடைய முதல் வேட்டினிலே . . . .
கன்னித்துயில் கலைந்து காடு விழித்தெழும் போதினிலே
அடுக்கடுக்காய் வேட்டோசை எழும் ! . . எங்களை
உன் பக்கத்தில் காண்பாய் !

“ நிலம் . . நீதி . . உரிமை . . உணவு ! ”
உன் அறைகூவல் காற்றில் மோதித் தெறிக்கையில்
கூட்டுக்குரல் எழும்பும் ! . . எங்களை
உன் பக்கத்தில் காண்பாய் !

வேட்டையின் முடிவினிலே
கொடுங்கோன்மையின் புரையோடிய அவயங்களை
அறுவைச்சிகிச்சையால் அறுத்தெறியும்போது
பஞ்சுடன் நிற்கும் தாதியாய் – எங்களை
உன் பக்கத்தில் காண்பாய் !

விடுதலை ஈட்டிகள் விளைவித்த காயத்தை _ அந்த
ராட்சத மிருகம் நக்கியழும்போது
கனவுகள் நிறைவடைந்த இதயத்தோடு _ எங்களை
உன் பக்கத்தில் காண்பாய் !

மெடல்களும் ஆயுதங்களும் மேனியெங்கும் ஜொலித்தாலும்
ஈக்களின் கூட்டமே அந்த ஈனர்கள் கூட்டம்
வாளை மழுங்க வைக்கும் எங்கள் வைரநெஞ்சங்கள்
ஊளை ஈக்கள் முன்னே உரம் குன்றிப் போய்விடுமோ ?

நாங்கள்

அவர்களது துவக்குகளை ரவைகளைக்
குன்றுகளைக் கைப்பற்றுவோம். . . அவ்வளவே !

ஒருகால். . . . முன்னணியில்
எதிரியின் குண்டுகள் எங்களைச் சில்லிட்டுப் போக வைத்தால்
உன்னுடைய ‘ கியூபன் ’ கண்ணீர்த் துளிகளால்
எங்கள் எலும்புகளை மூடு . . .
அது போதும். ஏனெனில்
அமெரிக்க சரித்திரமே
எலும்புகளால் நிணத்தால்
கண்ணீர்ச்சுதை கொண்டு
கட்டப்பட்டது தான் !

மூலம் : Che-guevera 1956 Mexico
speeches and writings of Che.தமிழாக்கம் : புதுவை ஞானம்

Advertisements