போரில்லா உலகுக்காய்ப் போரிடும் கவிஞர்கள்
——————————————————————————————
War Poem By William Ashworth.
——————————————————————————————

நம்மால் முடியும் . . .
ஆனாலும் நாம் ஒன்றும் செய்யவில்லை .
நாம் இருந்து என்ன பயன் ?
நம்மால் பெயர் சொல்லமுடியாத
நாடுகளின் குழந்தைகள்
கதறின கண்களில் நீர் வழிய
ஆனாலும் நாம் ஒன்றும் செய்யவில்லை .
நாம் இருந்து என்ன பயன் ?

அந்தக் குழந்தைகளின் கண்கள் கருப்பாயிருக்கின்றன
கருப்பு என்பதோ துக்கத்தின் நிறம்
கருகிப்போன மரத்தின் நிறம், அல்லது
தாரகைகளுக்கு இடையிலான விண்ணின் நிறம்
எங்கு விடியல் திரள்கிறதென்று இன்னமும்
நாம் காண இயலாத இடத்தின் நிறம்.

பிறக்கும் போதே இந்த ஆண்டு
வெடி குண்டுகளின் நாற்றத்துடன் பிறக்கிறது.
நம்மால் ஏதாவது செய்ய முடியும்
ஆனாலும் செய்யவில்லை.
நாம் இருந்து என்ன பயன் ?

வெடித்துப் போன குண்டுகளின் வெற்றுக் கவசம் போல
வெறுமை தவழும் கண்கள்
பார்க்கின்றன பார்க்கின்றன
பார்த்துக்கொண்டே இருக்கின்றன !
தளும்புகிறது கண்ணீர் ஆனாலும்
சிந்தத் தொடங்கவில்லை !

– II –

“ஒருவரை ஒருவர் நேசியுங்கள் !”
இரு திருடர்களுக்கு இடையில் நின்ற
அந்த மாமனிதர் சொன்னார்
ஆனால். . . .
கிருத்துவர்களுக்கோ
நினைத்துப் பார்க்க நேரம் இல்லை.
கரையேற்றப்பட வேண்டிய ஆன்மாக்கள்
ஏராளம் இருக்கின்றன , இருந்த போதிலும்
அவரைப் பின்பற்றி தானே
நுழைந்தோம் நகரத்துக்குள்?

பன்னிரண்டு கந்தலுடுத்த ஹிப்பிகள்
அவர்களுள் ஒருவன் F B I -யின் கையாள்.
அவர்கள் சென்ற பின் தேவாலயத்தின்
சாய்மான இருக்கைகளில்
பேன் பார்த்தோம் நாங்கள்.
மேலதிகக் குருதி – தந்தையே!
முதன் முறையாக முற்றிலும் போதவில்லை.

– III –

அந்தக் கோடையில் பனி பொழிந்தது
டோக்கியோவில் , சலசலத்தன பனித்துகள்கள்.
ஹிரோஷிமாவிலிருந்து வீசிய காற்றில்
சிரித்தான் ஒரு சின்னப்பயல், தனது
சகோதரனின் உடலிலிருந்து எழும் ஒளி கண்டு
அங்கிருந்து அன்றோ அவ்வுடல் திரும்புகிறது
வீடு நோக்கி.

– IV –

துக்கப்பட முடியாதவர்களுக்காக
துக்கப்படுகிறோம் நாம் .
நடக்க முடியாதவர்களுக்காக
நடக்கிறோம் நாம் .
விடியலின் விளிம்பில்
நிற்கிறது பகல் – ஆனாலும்
நழுவுகிறது பின்னோக்கி
இருளில்.

எந்தத் துவக்காலும் இயலாது பாதுகாக்க
இந்த விதமான அச்சத்தில் இருந்து

துயர் உருகிறது அன்பு மாறுவேடத்தில்
எதிரியின் வேடத்தில் படுகளத்திலும்
கரிய கண்ணுடைய குழவியாய்
அது மரிக்கும் போதும்.

வெறுப்பெனும் கரிய குதிரையேறி
சவாரி செய்யும் அவனுக்கு
கடிவாளம் பிடிக்கத் தேவை
ஒரு அறிவுக் கரம்.
முரட்டுக் குதிரையை அடக்கவும்
வேகத்தைக் கட்டுப் படுத்தவும்
காலை திரும்ப வருவதைக்
கண்காணிக்கவும் .

After the Attack
By Florence Dacy .

தாக்குதலுக்குப் பின்னர்
•ப்ளோரன்ஸ் டேசி.

ரூ•பினா அமாயா எப்போதுமே அலைந்து கொண்டிருப்பாள்
பிணங்கள் இறைந்து கிடக்கும் அக்கானகத்துக்குள் தனது
நான்கு இளம் குழந்தைகளைத் தேடியவாறு.
மரணம் திணிக்கப்பட்ட அவளது வாய்
உருக்குலைந்து மூடப்பட்டிருக்கிறது.

ரூ•பினா அமாயா எப்பொதுமே கனவு காண்பாள்
மார்பகத்தில் திணிக்கப்பட்டிருக்கும் தனது
கடைசிக் குழந்தையின் பிஞ்சு உதடுகள் பற்றி.

பசி கொண்ட நாயினைப் போல்
ஏதோ ஒன்று அரிக்கிறது வயிற்றினுள்ளே.
ரூ•பினா அமாயா எப்போதுமே
தோண்டிக் கொண்டிருப்பாள்
யாரும் உரிமை கொண்டாடாத
ஆண்களின் கருப்பைக்குள்
யாரும் உரிமை கொண்டாடாத
பெண்மையின் சக்தியினால்
கண்கள் குருடாகிப் போனது போல்.

எங்கே தொலைத்தாள் தன் குழந்தைகளின்
நிழல் படிந்த மணிக்கட்டுகளையும்
துணிவு மிக்க கணுக்கால்களையும் ?

சிறகு முளைத்த பழுப்பு நிறத் தோள்கள் எங்கே ?
விழிகளின் ஈரமிக்க முதற் பணித்துளிகள் எங்கே ?
இசை பரவுவது போல் உள்ளங்கை நோக்கிப் பாய்ந்த
ஊதா நிறக் குருதி நாளங்கள் எங்கே ?

அவர்களது மூச்சின் மென் தோல்
சிறு குட்டி முயல்கள் எங்கே ?
பாய்ந்து பாய்ந்து பாய்ந்து போனதுவே ?

—————————————-

Citizen of a Super power sits at Abd El-Hadi’s table
By : ZANET AALFS
அபு எல்ஹாதியின் சாப்பாட்டு மேசையில் ஒரு வல்லரசியக் குடிமகன்

——————————————————————————————

அப்துல் ஹாதி அவர்களே !
நான் எங்கிருந்து வருகிறேனோ அங்கு
நாங்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை
செவி மடுத்துக் கேட்பதற்கு.

உங்கள் பாதை அருகே இன்னும்
நிலைத்து நில்லாத ஒற்றை மரத்திலிருந்து
உதிரும் சருகின் சலசலப்பை, அல்லது
கசாப்புக் கடைக்கு இழுத்துச் செல்லப்படும்
ஒற்றைக் கன்றுக்குட்டியின் ஊங்காரப் பெருமூச்சை
உற்றுக் கேட்பதற்கு ஊக்குவிக்கப்படுவதில்லை.

இடைவிடாத மழலைக் குலாவல்
எட்டுவதில்லை புலனுக்கு
ஒரு நாள் முழுதும் என்பதையும்
யாருமே எட்டிக்கூட பார்ப்பதில்லை என்பதையும்
கற்பனை செய்து பாருங்கள்.
காற்று தணிந்தோ பலத்து சுழன்றோ
அடிக்கும் போது குழந்தைகள்
அழுவதைக்கூட நிறுத்தி விடுகின்றன
எனது நாட்டில்.

‘எண்டர்பிரைஸ்’ ஏவுகணை
உங்களது முற்றத்தில் விழுந்த அதிர்ச்சியை-
வட்ட விழிப்பூனை கிடைமட்டமாய்
மல்லாந்து கிடப்பதை
எரியும் குட்டையில் விழும்
நிலவின் பிம்பத்தைவிட
அதிகம் அலை பாயும் கொழுத்த
பெட்டைக்கோழியின் சடசடப்பை
புவிக்கோளம் முழுதும்
கதவுகள் திறக்கப்படும் ஓசையை
தனக்கேயான மெல்லிய இசையில்
உணர முடிகிறது எங்களால்.

அப்துல் ஹாதி அவர்கள்
விமானப்படை வீரருக்காய்
ஒவ்வொரு முட்டையாய்
உடைத்து ஊற்றும் போதும்
கடைசி முட்டையைக் கல்லில் ஊற்றும்
‘சுரீர்’ ஓசையைக் கேட்கிறோம் நாங்கள்.

( குறிப்பு : இந்தக் கவிதை Taha Ali அவர்களின்
‘Abd El-Hadi fights a super power’ என்ற கவிதைக்கு
பதில் கவிதை ஆகும். Abd El-Hadi புராணக்கதையில்
வரும் ஒரு முட்டாள் பாத்திரம் ஆகும்)

—————————————————–
What to count
Alise Alousi
எதனைக் கணக்கிடுவது ?
அலைஸ் அலவ்சி
—————————————————

மற்றவர்களின் காதோடு காதாக
நீங்கள் முனுமுனுப்பதற்கு என்ன பொருள் ?
மற்றவர் ஒருவரைத் திருட்டுத் தனமாகக்
காணாமலடிப்பதற்கு என்ன பொருள் ?
அதுவும் ஓடும் ரயிலில் நிகழ்கிறது எனில் ?

தானே விழுகிறது ஒரு கூரை.
உங்களுக்கு உதவக்கூடிய
ஒரு மருத்துவ மனை
மைக்கூர் அற்ற எழுதுகோலாய் ஆகும்போது
நீங்கள் பயன் படுத்த ஏதுவாய் ஏதாவது இருக்கிறதா ?

ஒரு கிசுகிசுப்பு உங்களுள் எதனைத் தூண்டி விடுகிறது ?
ஒரு மூலையில் நின்று கொண்டு
‘நான் ஏதாவது உதவ முடியுமா?’
என்றொரு சைகை செய்தாள் அவள்.

மென்மையான காற்றில் கீழிறங்கும்
ஏதோவொரு உரை மாத்திரை
ரணமாக்கி விடும் உங்கள் சருமத்தை
மறைந்துவிடும் கண்ணுக்குப் புலப்படாமல்
எல்லாக் காலத்தையும் தின்றொழிக்க
இது நல்ல வழிதான்.

பையில் இருக்கும் எண்ணிக்கை
தேவையில்லை அவனுக்கு
100, 150, 200, 250, 300
பெண்கள்,குழந்தைகள்,கிழங்கள்
இப்படி மரணிக்கும் போது.

எதனைக் கவனிக்க வேண்டுமெனில்
இப்படி நீங்கள் சாகும் போது
அப்பாவியாக இருந்தீர்கள்
என்பதைத்தான்.

காலெடுத்து வையுங்கள் வெளிச்சத்தில்
நினைவு கூறுங்கள் இந்த நாளினை
தானியங்களை இறைக்காதீர்கள்
பறவைகளுக்காக.

பற்களில் தோய்கிறது நுரை
சிரிப்பது நல்லதல்ல.
காதுகளின் பின் பரவும் நறுமணம்
தலைக் குடைச்சல் உண்டாக்குகிறது
அவனுக்கு.

கால்சட்டையின் பைகளுக்குள் கைகள்
வாயில் குதப்பும் சூயிங்கம்
கையில் எழுதுகோல்
பெனிசிலின் ஊசிகள்
குறிப்பெடுத்து அனுப்பினார்கள்
அல்லவா ஊருக்கு
குண்டுகள் வீசப்பட்டபோது.

பள்ளி வளாகத்தில்
இருவகைப் பயன் தரும்
ஷ¥க்கள் எங்கே ?

இப்படியாக நீங்கள்
நடனமாடும் போது
எண்ணப்படுவது
வட்டங்கள் தான்.

கொல்லையில் உள்ள
குட்டையின் நீரில் குளோரின்
அளவுக்கு அதிகமாக.

சூரியனைப் பார்க்கிறார்கள் குழந்தைகள்
கண்கள் கரித்து எரிய…
மறுபுரத்தில் இருப்பது
என்னவென்று ?

ஏலாது நம்மால் ஆணையைப் பூர்த்தி செய்ய
ஒரு துளி கூட விழாது சூடான கல்லின் மீது.
வெண்மையாகவோ சுத்தமாகவோ
இருக்காது எதுவும் இனி.
மனிதர்களால் செய்யப்பட்ட
உங்களது கைகள் மார்பகம் நுரையீரலின் படங்கள்
திரும்பி வரும் ஏழு மணி நேரத்தில்.

பொதுவான குரோதத்தால் நடுத்தெருவில் மாண்டு விழும்
ஏராளமான இளைஞர்கள் இருக்கின்றனர் ஆனால்
நகரத்தில் இருப்பதோ ஒரே ஒரு ஆம்புலன்ஸ் தான்.

அதிலும் கூட, எடுத்துச் செல்வது எங்கே
இப்படியாக நீங்கள் இறந்து விழும் போது
என்னத்தைக் கணக்கிட மண்டியிட்டுக் குனிந்து
உங்களைத் தூக்கிச் செல்லும்போது ?

______________________________________

சமாதானத்துக்கான கவிதை
Karen Auvinen

இதை விட. . . .
நான் எழுதிக்கொண்டிருப்பேன்
மென்மையான சருமத்தைப் பற்றி
இறுகத்தழுவலின் மெல்லிய மூச்சினைப் பற்றி
முயற்சியற்ற பட்டும்படாத இலேசானமுத்தத்தைப் பற்றி
அல்லது,
இந்தக் கடும் பனியைப் பற்றி
உச்சத்தை எட்டிய பனிக்கால ஊசல் குண்டு
பின்னோக்கித் திரும்புவது பற்றி.

வரண்ட பூமியைத் கொத்திக்கொண்டிருக்கின்றன
பறவைகள் தானிய மணிகள் தேடி
தானியக்கிடங்கின் கதவைத்
துளைத்துக் கொண்டிருக்கிறது
மரங்கொத்தி ஒன்று.

இந்த இருண்டு நீண்ட நாட்களில்
விறகு சுமந்து செல்வது எவ்வளவு
நன்மை பயக்குமென
யோசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.

இதைவிட,
பனிக்காலம் மெல்லமெல்ல விலகுவது பற்றியும்
கூரையிலிருந்து பாளம் பாளமாய் வெடித்து இழியும்
பனிப்படலம் பற்றியும்
தரையைத் தழுவி சீழ்க்கையடித்துச் செல்லும்
பனிப்புயல் பற்றியும்
அத்துடன் சேர்ந்தே நான் இளகுவது பற்றியும்
இறுதியாக
இப்போது நான் இங்கே இருப்பதன்
மகிழ்ச்சியைப் பற்றியும்
இவற்றுக்கெல்லாம் நான் எவ்வளவு
பரிச்சயப் பட்டிருக்கிறேன்
என்பது பற்றியும் எழுதலாம் நான்.

இதை விடுத்து
குண்டுகள், இனப்படுகொலை,
கொடியவர்களின் கூட்டு,
பேரழிவு ஆயுதங்கள், அழித்தொழிப்பு,
சுதந்திரம் போன்ற சொற்களின் பொருள் தேடி
போக்குகிறேன் பொழுது.

அழகியல் நயத்தின் ஈர்ப்பையும், குருதியையும்
ஏராளமான இடைகளையும் தொடைகளையும்
யுத்தத்தின் இரத்தவெள்ளத்தால்
பிரிக்கப்பட்ட இணைகளின் இரகசியத்தையும்
பாழ்களின் வழிபாட்டையும்,துயரத்தையும்
யாருமே பாட விரும்பாதவற்றையும்
பஞ்சாமிருத அவியல் செய்து பாட விரும்பவில்லை நான்.

ஆனாலும்,
உங்களுக்குத் தெரிந்த
தெய்வீகமான காதல்கதைகளை விட
மோசமான கதைகள் இருக்கவே இருக்கின்றன.
கொலைகள்,சித்திரவதைகள் பற்றிய நினைவுகளுக்கு
எதிராக உயர்த்தப்பட்ட இறுகிய முஷ்டிகள்
நொறுக்கப்பட்டிருக்கின்றன நம்மாலேயே.
இனி ஒரு ஆக்கிரமிப்பைச்
சகித்துக் கொள்ள முடியாது என்னால்.

மாண்டுபோன நம்மவரின் எலும்புக்குவியலை விடவும்
இந்த வார்த்தைகள் மூலம் நாம் வெளிச்சம் போட்டுக்காட்டும்
துண்டு துண்டான சரித்திரச் சம்பவங்களை விடவும்
அகண்டதொரு பள்ளத்தாக்கு இருக்கிறது, அமெரிக்காவில்.

ஈராக்கோ, வட கொரியாவோ, சோமாலியாவோ
இனப்படுகொலைச் சந்தையை நம்மிடமிருந்து
அபகரித்துக் கொண்டதாக எண்ணுகிறீர்களா நீங்கள் ?
அது ஒன்றுதான் பாலைவன வெப்பத்தின் கீழ்
தோலைக் கருமையாக்குகின்றதா ?

கேளுங்கள் !
சிதறிக்கிடக்கும் இந்த எதிரி நாடுகளுக்குள்
இடி மின்னலைவிட அகன்றதொரு
பாழ்நிலம் பரவிக்கிடக்கிறது.
குளிர் நடுக்கும் பின்னிரவில்
போருக்கு அழைக்கிறது கிசுகிசுப்பாய்.

எந்தவொரு போரிலும்
முதலில் கொல்லப்படுவது
தத்துவவாதிகளும் கவிஞர்களும்
எனச் சொல்கின்றனர் அவர்கள்.
எங்களில் முன்§னையிருந்தவர்கள்
வீழ்ந்து விட்டனர் இப்போது.
பகலை இரவு முத்தமிடுவது போல்
இறுகமூடி அறையப்பட்டன
அவர்தம் சொற்கள்.

எனவே,
சின்னஞ்சிறிய மலைப் புகலிடத்தை
புத்தம்புதிய பணிப் பொழிவைப் பின்னுமோர்
கூடலுக்கான முத்தத்தைப் பின் தள்ளி.
முகத்தைத் திருப்பிக் கொள்கிறேன் நான்
எழும் ஓர் அணுப்புயலுக்கு எதிராக.

அன்பு காட்டுவதற்கு
எனக்குத் தெரிந்த ஒரே வழி
இந்தப் பக்கத்தில் பதிந்திருக்கும்
எனது தாய் மொழியின் சொற்கள்தாம்!

—————————————————

புஷ்ஷ¤க்கு ஒரு வார்த்தை !

Comments to Bush.
By,
Clem Block .
——————————————–
ஜார்ஜ் புஷ் அவர்களே ,

1988 இல் உங்களது தந்தையார் 57 நாடுகளைச் சேர்ந்த 2000 கவிஞர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். “உலகத்தின் கவிஞர்களாகிய நீங்கள் உலகில் அமைதியைக் கொண்டு வருவீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்” என்பதாக அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுத்தார். அக்கடிதம் கிடைக்கப் பெற்ற எங்களில் பலர் வாஷிங்டன் டி.சி யில் நடைபெற்ற கவிஞர்களது மாநாட்டில் கலந்து கொண்டோம். குடியரசுத்தலைவர் புஷ்ஷின் வேண்டுகோளுக்கு இணங்கி கவிதைகள் எழுதி அவற்றை பலூனில் இணைத்து ஒரே சமயத்தில் விண்ணில் பறக்க விட்டோம். அவற்றுள் பெரும்பாலானவை மாசு படுத்தின. ஆனால் சில மேலும் பறந்தன. மூன்று மாதத்தில் பெர்லின் சுவர் இடிக்கப் பட்டது

இந்தக் கவிஞர்கள் ஒரு யுத்தத்தை எதிர்க்க ஒன்று கூடியுள்ளனர்.

அருள் கூர்ந்து உங்களது தந்தை சொன்னதைக் கேட்பீர்களா ?

****************************************************************************
தமிழாக்கம் :புதுவை ஞானம்
Source : Monthly Review.

Advertisements