அவனுடன் இணைந்து ………………..*

எவனொருவன் இடர் பட்டிருக்கின்றானோ
சித்திரவதைக்கு ஆளாகி இருக்கின்றானோ
எவனொருவன் யுத்த களத்தில்
இழப்புகளை ஏற்படுத்தியும்
இழப்புகளை ஏற்றுக்கொண்டும்
அடிகள் கொடுத்தும் அடி வாங்கியும் இருக்கின்றானோ
எவெனொருவன் தனது காலடிகளை
அளந்து வைத்திருக்கின்றானோ
எவனொருவன்
தனது திட்டங்கள்
தவறாகிப்போகும்போது குழம்பாமலும்
தோல்வியுறும்போது கூச்சப்படாமலும் இருக்கின்றானோ
எவனொருவன் ஒரு பெரியமனிதனைப் போல்
தனது தோல்விகளை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டிருக்கின்றானோ
சீறி வரும் ஆயிரக்கணக்கணக்கான ஈட்டிகளை
மார்பிலேந்தி விழுப்புண்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றானோ

தனது கண்ணீரைப் பற்றி அவமானப்படாமல்
நெஞ்சினை நிமிர்த்தி விண்ணுலகத் தாரகைகளை சந்தித்து இருக்கின்றானோ
அவனுடன் இணைந்து நடக்க விரும்புகிறேன் நான்.

இன்று தொடங்கி
அவனுடன் இணைந்து நடப்பதற்காகவே
என்னுடுடையது அனைத்தையும் கொடுப்பேன்
அற்பமானதாயினும் மகத்தானதாயினும்.

நின்று நிமிர்ந்து எரியும்
இடைவெளிகளைக் கடப்பதற்காக
பற்களை நெறித்து முட்டிகளை இறுக்கி
சக தோழர்களின் மீதான நம்பிக்கையை தனது
ஆண்மைமிகு நெஞ்சினில் வரித்துக் கொண்டதனால்

அவனுடன் இணைந்து கைகோர்த்து நடக்க
நீண்டதொரு பயணம் தொடங்க விரும்புகிறேன்.

எந்தவொரு மனிதன்
போராடி சமர் புரிந்து வெற்றிபெற்று
மற்ற மனிதர்களைப் பலவானாய் மாற்றுகின்றானோ
அவனுடன் இணைந்து
நடை பயில விரும்புகின்றேன்.

மூலம் :LIMON ABBOT

தமிழாக்கம் :புதுவை ஞானம்.

_____________________________________________________________

குவேரா வழங்கிய அருங்கொடை
———————————————————

சே _ குவேராவின் படைப்புகளின் மீதான ஒரு
ஆவண ஆய்வு.

——————————————————
THE LEGACY OF CHE GUEVARA
A DOCUMENT STUDY BY
DONALD C .HODGES.
Pulisher :
THAMES AND HUDSON
______________________
குவேராயிசத்தின் பரிணாம வளர்ச்சி பற்றியதொரு கணக்கெடுப்பு என்பது ,எங்கெங்கு சாத்தியமோ
அங்கெல்லாம் அந்த வளர்ச்சி எப்படி ஏற்பட்டது ? ஏன் ஏற்பட்டது ? என்பது பற்றிய அவரது
தன்னிலை விளக்கங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவரது அரசியலும் போர்த்தந்திரமும்
மார்க்சீய லெனினிய வரம்புக்குள் பரினாம வளர்ச்சியுற்றது என்ற போதிலும், அவை ஒரு குறிப்பிட்ட சமூக கட்டமைப்புக்குள் தோன்றி வளர்ந்தன.அவர் ஆரம்பத்தில் அரசியலைத் தனது பணியாகக் கொள்ளவில்லை

1960ஆகஸ்ட், சொற்பொழிவில்தான், முதன்முதலாக, மருத்துவப் பணியை விட்டு ஒரு புரட்சிக்காரனாக மாறியதைப்பற்றிய விசேஷமான சூழ்நிலைகளைப் பற்றிப் பேசுகிறார். ஆரம்பத்தில் மருத்துவத்தின் எதாவது ஒரு துறையில் எதையாவது சாதிக்க வேண்டுமென விரும்பினார். ஆனால் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து பார்த்ததில் மக்களின் துன்ப துயரங்களையும், மருத்துவ வசதி பற்றாக்குறையையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார் . மருத்துவ அறிவியலில் கண்டுபிடிப்புகள் செய்வது போலவே , இந்த துயர் படும் மக்களுக்கு நேரடியாக எதாவது செய்வதும் முக்கியமானது என உணர்ந்தார். கவுதமாலாவில் இருக்கும் போது மருத்துவப் பணியைப் புரட்சிகரமாகச் செய்வது எப்படி என்பது குறித்து குறிப்புகள் எடுக்கத் தொடங்கினார்.

ஐக்கிய பழக்குழுமமும் அமெரிக்க உளவுத்துறையும் இணைந்து , நிலச் சீர்திருத்த்ங்கள் செய்ய முனைந்த
‘ஜாகாபோ ஆர்பென்ஸ் ‘-ன் முற்போக்கு அரசுக்கு எதிராகத் தொடர்ந்த ஆக்கிரமிப்புப் போரினால்
இம்முயற்சிக்குத் தடை ஏற்பட்டது. அப்போதுதான், ‘ஒருவன் புரட்சிகர மருத்துவர் ஆக வேண்டுமானால் அவன்முதலில் புரட்சி செய்ய வேண்டும்’- என தான் கற்றுக் கொண்டதாக செ-குவேரா நமக்குச் சொல்கிறார்.

கவுதமாலா அனுபத்தின் தாக்கம் பற்றிய அவரது கருத்துக்கள், ஏப்ரல் 1958-ல் ஜொர்ஜ் மாசெட்டி என்ற அர்ஜெண்டினா பத்திரிகையாளருக்கு அளித்த நேர் காணலில் வெளிப்படுகிறது .ஜாகாபோ ஆர்பென்சின் ஜனநாயக அரசில் அவருக்குப் பதவி ஏதும் தரப்பட்டதா ? என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில் செகுவேரா சொன்னார் ,”இல்லை.ஆனால் வட அமெரிக்க ( ஆதரவு பெற்ற ) ஆக்கிரமிப்பு நிகழ்ந்த போது நான் என்னைப் போன்ற இலைஞர்களைத் திரட்டி, ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராட ஒரு குழு அமைக்க முயற்சித்தேன். கவுதமாலாவில் எதிர்க்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் யாருமே எதிர்க்க முன் வரவில்லை .” ஏன் கியூபப் புரட்சியாளருடன் சேர்ந்தீர்கள்? என்ற
கேள்விக்குப் பதில் அளிக்கையில் மீண்டும் சொன்னார்: “யதார்த்தத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்குப் பிறகு, கவுதமாலாவுக்கு நேர்ந்த கதியைப் பார்த்ததும், ஒரு சர்வாதிகாரியை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணத்தை உறுதிப் படுத்த வேறெதுவும் தேவைப் படவில்லை.” ஒரு ஆண்டுக்குப் பிறகு கியூபாவின் டெல்முனோடோ தொலைக்காட்சியில் அதே போன்றதொரு கேள்விக்குப் பதில் அளிக்கையில் அவர் சொன்னார், “கவுதமாலாவில் ஜனநாயகம் எப்படி அழித்தொழிக்கப்பட்டது என்பதைக் கண்ணுற்றேன், •பிடலை மெக்சிகோவில் சந்தித்த போது கியூபாவின்
சர்வாதிகாரத்தை அழித்தொழிப்பதில் அவருக்கு உதவ வேண்டியது எனது கடமை என முடிவுக்கு வந்தேன்.”

மிகத் தாமதமாக, டிசம்பர் 1961-ல், மார்க்சீய லெனினியம் பக்கம் திரும்பிய •பிடலைப் போல அல்லாமல் ,செகுவேரா , முன்னரே அதாவது, 1954-லேயே கவுதமாலாவில் அதனை ஏற்றுக்கொண்டார். காஸ்ற்றோயிசம் ,கியூபாவின் பாப்புலர் டெமாக்ரடிக் கட்சியின் இடது சாரிப் போக்காக பரிணமித்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட கம்யூனிச சித்தாந்தங்களை அணுகாத போதும், குவேராயிசம் தொடக்கத்திலேயே மார்க்சீய லெனினிய கட்டமைப்பில் பரிணமித்தது. எர்னஸ்டோவில் ” செகுவேராவின் நினைவுகள் ” – A MEMOIR OF CHE GUVARA -GARDEN CITY-1972
என்ற நூலில் அவரது முதல் மனைவி ஹில்டா காடியே, தாய் நாட்டை விட்டு வெளியேறிய கியூபர்கள் தங்கள் நாட்டின் சர்வாதிகாரியைத் தூக்கி எறிவதற்காக மெக்சிகோவில் துவங்கிய •பிடலின் ஜூலை 26 இயக்கத்தில் குவேரா சேருமுன்பே , ஒரு குறுகிய காலத்துக்கு அர்ஜெண்டினாவின் கம்யூனிச இளைஞர் இயக்கத்தில் சேர்ந்திருந்ததாகவும் , அவருக்கு புரட்சிகர மார்க்சீய லெனினியத்தில் முன்னரே ஆழ்ந்த புலமை இருந்ததாகவும் சொல்கிறார். கவுதமாலாவில் செகுவேரா தனது கம்யூனிச நம்பிக்கைகள் குறித்து எப்படி வெளிப்படையாகப் பேசினார் என்பதையும், மெக்சிகோவுக்கு 1954-ல் வந்தடைந்த போது
ஒவ்வொரு லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரிகளுக்கும் எதிரான ஆயுதப் போராட்டத்திலும் கம்யூனிஸ்டுகள் முன்னணியில் இருக்க வேண்டும் என வற்புறுத்தியதையும் அவர் நினைவு கூறுகிறார்.

1954 ஆம் ஆண்டு கோடையில் நடந்த ஆக்கிரமிப்பின் போது “ஜாகோபா ஆர்பென்ஸின் வீழ்ச்சியை நான் கண்டேன் ” என்ற செகுவேராவின் முதல் அரசியல் கட்டுரையின் கருப்பொருளாக, கவுதமாலாவின் தோல்வியுற்ற நிலச் சீர்திருத்தம் மற்றும் சமூக சீர்திருத்தத்தின் படிப்பினைகள் அமைந்திருந்தன. அந்தக் கட்டுரை பற்றி ஹில்காடியே நினைவு கூறுகையில் அது உலகச் சூழ்நிலைகள் பற்றிய பகுப்பாய்வுடன் தொடங்கி முதலாளித்துவ முகாமுக்கும் சோஷலிச முகாமுக்கும் உள்ள
மோதலைப் பற்றிப் பேசியதாகச் சொல்கிறார்.

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒட்டு மொத்தமான போராட்டம் காரணமாக சோஷலிசம் தொடர்ந்து விரிவடையும், சமூக மாற்றத்தை நோக்கிய பெரிய முயற்சிகள் அமெரிக்க பொருளாதார நலன்களுக்கு சவால் விட்டு மோதுவதாக இருக்கும் எனவும் எதிர்பார்த்தார். சீன சோவியத் மோதல்களில் வெளிப்படையாகவே சீனாவின் பக்கம் அனுதாபம் கொண்டிருந்த அவர் முதலாளித்துவத்துடனான சமாதான சக வாழ்வு என்பது ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க தேசீய விடுதலைப்
போராட்டங்களுக்குத் துரோகம் செய்வதாகும் என்றார். அடிப்ப்படை ஆதாரங்களை தேசீய மயமாக்கி உற்பத்தி சாதனங்களை சமூகமயமாக்குவதன் மூலம் தான் சுதந்திரமான சோஷலிச வளர்ச்சி வெற்றி பெறும் என வலியுறுத்தினார். மேலும்,உள்நாட்டு ஆளும் கும்பல் மற்றும் பிரதான எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மோதல் என்பது ஆயுதம் தாங்கியதாகவும் ,மக்களின் ஆதரவு பெற்றதாகவும் இருக்க வேண்டுமென வாதித்தார். ‘ஆர்பென்ஸ்’ மக்களை ஆயுத பாணி
ஆக்கியிருந்தால் ஒருகால் அவரது அரசு பிழைத்திருக்கும் என நம்பினார்.

பின்னர், கியூபப் புரட்சி பற்றிய தனது சிந்தனைகளில், மக்களை ஆயுதம் தாங்கிய பாதுகாப்புக்காக பயிற்றுவிக்க வேண்டிய தேவையை வலியுறுத்தினார். குவேராவின் கிளர்ச்சி மையம் ( போகோ ) என்பது வாழ்வதற்கும் போராடுவதற்குமான புரட்சிகரமான கம்யூன்( கூட்டு வாழ்வு) ஆகும். அதன் முதன்மையான பணி , அவர்களுக்கான அடிப்படை நலன்கள் எவையோ அவற்றைப் பாதுகாக்கும் விதத்தில் சுதந்திரமான நடவடிக்கைகளைத் தாமே எடுப்பதற்குத் தூண்டுவதாகும்.ஒடுக்குமுறைக்கு
மக்கள் அஞ்சுவதற்குக் காரணம் இருப்பதால், ஒரு மக்கள் அரசை எதிர்த்துப் போராடுவதற்குத் தயாராக இருப்பதில்லை.எனவே துவத்திலிருந்தே இத்தகைய ஒரு ஆபத்துக்கு எதிராக அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். அத்தோடு கூட கிளர்ச்சி மையங்களின் சாதனைகளைக் கண்டு, அதனை முன்னுதாரணமாகப் பின்பற்றவும் ஊக்குவிக்க வேண்டும். மக்களின் எதிர்ப்பியக்கங்களுக்கு ஆயுதம் தாங்கிய ஆதரவு அளிக்க வேண்டும்.

அதே சமயம் புரட்சிகர முன்னணிப் படைக்கும் கல்வி புகட்ட வேண்டும். .புரட்சிகர மையத்தின் _போக்கோவின் _ முதல் பொறுப்பு புரட்சிகரப் போராளிகளைப் பயிற்றுவிப்பது என்ற போதிலும் அது ஒரு புதிய மனிதனை அல்லது கம்யூனிச மனிதனை வார்த்தெடுப்பதிலும், தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். மிகவும் இடைஞ்சலான சூழல்களுக்கு எதிரான விடாப்பிடியான புரட்சிகரப் போராட்டத்துக்கு பண்பு மிக்க உறுதியும் கூடவே ராணுவத் திறமைகளும் வேண்டும். இந்த
பண்பு மிக்க மன உறுதி என்பது , சாதாரணமாக பூர்ஷ்வா சமுதாய அமைப்பில் அடைய முடியாத ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்வதைப் பொருத்து இருக்கிறது. கிளர்ச்சி மையம் என்பது புதிய மனிதனை உருவாக்கும் பள்ளியும் ஆகும். ஏனெனில்
கொரில்லாக்கள் மிகவும் உச்சகட்ட உடல் – மன உளைச்சல் நிறைந்த சூழ்நிலைகளில் , ஒருவரோடொருவர் ஒத்துழைக்க வேண்டியிருப்பதால் இந்த சுய ஒழுக்கம் ஒரு காரியார்த்தமான அவசியம் ஆகும்.

புதிய மனிதனை உருவாக்கும் கல்வி என்பது மன உறுதியும் அறிவாற்றலும் ஆன விஷயம் ஆகும் மாறுபட்ட சூழல்களிலும் தொடர்ந்து இருக்கக் கூடிய புரட்சிகர இயக்கத்துக்கு, வரலாற்று ரீதியான சரியான கணிப்பு தவிர்க்க இயலாதது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே சமயம் , வரலாற்றில் மனித இனத்தின் மன உறுதியையும் முனைப்பையும் வலியுறுத்தினார். புரட்சிக்கான எல்லா சூழ்நிலையும் கனிந்து வருவதற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. புரட்சிகர மையம் (போக்கோ )
அவற்றை உருவாக்க முடியும்.கிளர்ச்சிக்குப் பிந்தைய கட்டத்தின் பிரதான கடமைகள் பற்றிய செகுவேராவின் தொகுப்புரையில்கூட ,மனித மன உறுதியின் (முனைப்பின் ) முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடப் படவில்லை. .சோஷலிசம் சாத்தியமாவதற்கு முன் எல்லா சூழ்நிலைகளும் கனிந்து வர வேண்டும் என்பது இல்லை .கட்சியின் முன்னணிப்படை அதனை உருவாக்க முடியும்.முன்னணிப் படையில் கொரில்லாப் போராளிகள் இருந்தாலும் அல்லது கட்சி ஊழியர்கள் இருந்தாலும் ,
மாதிரி மனிதன், புறவயமாகச் சாத்தியமான விளிம்புகள் வரைக்கும் சம்பவங்களின் போக்கை நகர்த்திச் செல்ல முடியும் –
இது தான் செகுவேராவின் புரட்சிகரப் போர்த்தந்திரம் ஆகும்.

கியூபப் புரட்சியின் தாக்கம்.
——————————————

செகுவேராவின் அரசியலையும் புரட்சிக்கான யுத்த தந்திரத்தையும் வடிவமைப்பதில் மிக முக்கியமான காரணியாக இருந்தது கியூபாவின் புரட்சிகர அனுபவமாகும். கொரில்லாப் படையின் ஒவ்வொரு பிரதான வளர்ச்சிக்கட்டமும் , கியுபாவின் சமூக அரசியல் யதார்த்தத்தை கணிப்பதிலும்,போர்த்தந்திரத்தில் அதற்கேற்ற மாற்றங்க¨ள்க் கொண்டு வருவதிலும் இட்டுச் சென்றது. கியூபப் புரட்சியின் தத்துவத்தைப் பயில்வதற்கான குறிப்புகள் ( அக்டோபர் 1960 ) என்ற தனது நூலில்,மெக்ஸிகோவில் இருந்து 1956-ல் காஸ்ற்றோ திரும்பி வருவதற்கு முன், ஒரு அகவயமான மனப்பான்மை நடைமுறையில் இருந்தது.ஒன்று
திரட்டப்பட்ட தொழிலாலர்களின் தன்னிச்சையான புரட்சிகர வேலை நிறுத்தங்களுடன் இணைந்த வெகுஜன எழுச்சி சர்வாதிகாரத்தை விரைவில் வீழ்த்தி விடும் என்ற அறிவார்த்தமற்ற நம்பிக்கை ஆகும் அது. கிரான்மாவில் காஸ்ற்றோ தொடக்கத்தில் இறந்கிய பிறகு, கிளர்ச்சிப்பணிகள் கிட்டத்தட்ட அழிந்த பிறகு, போராட்டம் நீண்டதாக இருக்கும் என்பதனையும்,தன்னிச்சையான ஒரு மக்கள் எழுச்சியை நம்பியிருப்பது உண்மைக்குப் புறம்பானது எனவும், உழவர்கள் இப்போராட்டத்தில் இணைக்கப்
பட வேண்டும் என்பதனையும் கொரில்லாக்கள் தங்களது கவனத்தை ஆளும் கும்பலின் நிர்வாக ஊழல் மற்றும் நேர்மையற்ற போக்கு ( •பிடல் காஸ்ற்றோ சார்ந்திருந்த கியூபன் பழமை வாதக் கட்சியின் அக்கறை இவற்றின் பேரில் இருந்தது )இவற்றில் இருந்து கவனத்தைத் திருப்பி , உழவர்களை எதிர் நோக்கும் பிரச்சனைகள் ,அவர்கள் நிலமற்றவர்கள் ஆக நீடிப்பதின் கொடுமை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியதுடன், நிலச்சீர்திருத்தம் கொண்டு வருவதன் மூலம் உழவர்களின் ஆதரவைப் பெற முடியும் என நம்பினார்கள்.

ஜூலை-26, இயக்கத்தின் தலைவரான பிரான்கி பாய்ஸ் மார்ஷ் 1958-ல்,சந்தியாகோவில் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து அந்நகர மக்கள் தெருக்களில் திரண்டனர்.அங்கே சர்வாதிகாரத்துக்கு எதிரான முதல் அரசியல் வேலை நிறுத்தம் தொடர்ந்தது,அதற்கு அரசியல் வழிகாட்டல் இல்லாதபோது கூட அது ஒரியண்ட் மாநிலத்தின் செயல்பாட்டை முற்றிலும் முடக்கியது. அண்டை மாநிலமான ‘காமா குயி ‘- இலும் விளைவுகளை ஏற்படுத்தியது. இந்த தன்னிச்சையான வெகுஜன எழுச்சி சுலபமாக அடக்கப்பட்டது.ஆனால் தனது “புரட்சி ராணுவத்தின் சமூகத்திட்டங்கள்”- (ஜனவரி,1959) என்ற கட்டுரையில் அது விடுதலைக்கான ஒட்டு மொத்தமான போராட்டத்தில் உழவர்களை மட்டுமல்ல பாட்டாளி வர்க்கத்தையும் இணைக்க வேண்டிய தேவையை கொரில்லாக்களுக்குப் புரிய வைத்தது என நினைவு கூறுகிறார்.

இப்படி முதல் முறையாக தொழிலாளர்களை அவர்களது உற்பத்தி மையங்களில் கிளர்ச்சிப்படைக்கு ஆதரவாகவும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவும் மறைமுகமாகத் திட்டமிடுவது துவங்கியது.அதே சமயம், இந்தப் போர்த்தந்திரம் ஜுலை 26 இயக்கத்தைச் சார்ந்த சட்ட பூர்வமாகச் செயல்படும் ( ராணுவ நடவடிக்கை சாராத ) தலவர்களால், தங்கள் தலைமையின் கீழ் நடைபெறும் பொது வேலை நிறுத்தங்களைத் தூண்டி விடும் அல்லது முன்னுக்கு எடுத்துச் செல்லும் இயந்திரம் போன்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டது. ஏப்ரல்,9, 1958-ல் போதுமான தயாரிப்புகளின்றி அழைப்பு விடுக்கப்பட்டு
தோற்றுப்போன பொது வேலை நிறுத்தத்துக்குப் பின்னர் தான் ,புரட்சிகர இயக்கத்திற்குள் மற்றொரு குண மாற்றம் ஏற்பட்டது. அது கிளர்ச்சிப் போராட்டத்தின் இறுதி விளைவுக்கு முக்கியமானதாக அமைந்தது. கியூப சர்வாதிகாரி பாடிஸ்டாவை தோற்கடிக்க வேண்டுமானால் கொரில்லாப் படைகளின் தொடர்ந்த வளர்ச்சியும் அதற்கு ஆதரவாக அரசியல் பொது வேலை நிறுத்தங்கள் அமைய வேண்டும் என்பதும் அந்த நம்பிக்கை.

இருந்த போதிலும், இந்த காலகட்டத்தில் செகுவெராவின் சொந்த அரசியல் வளர்ச்சி கொரிலாப் படைகளில் ஏற்பட்ட மாற்றங்களோடு ஒத்திசைந்ததாக இருந்தது என்று கொள்வது தவறாகிவிடும். எடுத்துக்காட்டாக, 1957,நவம்பரிலேயே புரட்சி ராணுவத்தின் ‘எல்க்யூபானோ லிப்ரே’ (Elcubano librore) என்ற தட்டச்சுப் பத்திரிக்கையின் தலையங்கத்தில் அவர் புரட்சிகர ஆயுதங்களில், பொது வேலை நிறுத்தம் முடிவு ஏற்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்தது என தனித்துவப்படுத்திக் காட்டினார்.ஒரு மார்க்சீய லெனினியவாதி என்ற முறையில் கியூபாவின் பழமைவாதக் கட்சியிலிருந்து வந்த,மீண்டும் அரசியல் அமைப்புச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்து புதிய தேர்தல்களை நடத்த வேண்டும் என்று நம்பிய கொரில்லாக்களைவிட , திரட்டபட்ட தொழிலாளர்களுக்கு புரட்சியில் மிக முக்கிய பாத்திரம் ஒதுக்கினார். அதற்கு மேலாக “ஒரு வருடமோதல்” என்ற (அதே பத்திரிக்கையில் 1958-ல் வெளியிடப்பட்ட) கட்டுரையில் பாடிஸ்டாவை தோற்கடிப்பதோடு நின்றுவிடாமல் பழைய ஆட்சி முறையைத் திரும்ப வர வொட்டாத படிக்குப் புரட்சியைத் தொடர வேண்டுமென்ற நம்பிக்கையோடு
உறுதியோடு எழுதினார் .இந்த நம்பிக்கையை கிளர்ச்சிப் படையில் இருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய கொரில்லாக்கள் மட்டுமே பகிர்ந்து கொண்டார்கள்.

கியூப அனுபவம் ஒரு மக்கள் மருத்துவராக இருந்த செகுவேராவை கொரில்லா போராளியாகவும் கமாண்டராகவம் மாற்றியதோடல்லாமல்,கியூபப் பொருளாதார நிபுனராகவும் மாற்றியது. தேசீய வங்கியின் தலைவராகத் தொடங்கி கியூபாவைத் தொழில் மயமாக்கும் பொறுப்புடன் தொழில் துறை அமைச்சராகவும் பதவி உயர்த்தப்பட்டார். “கியூபப்புரட்சி பற்றிய தத்துவார்த்த ஆய்வுக் குறிப்பு”- களில் அவரே ,கியூபப் புரட்சியின் – கிளர்ச்சிக்கு முந்தைய கட்டம் கிளர்ச்சிக்குப் பிந்தைய கட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை – முதற்கட்டம் 1959 வரையிலான ஆயுதம்
தாங்கிய நடவடிக்கை, பின்னர் அடுத்த கட்டமான அரசியல் பொருளாதார சமூக மாற்றங்கள் என்பதாக வலியுறுத்துகிறார்.

இருந்த போதிலும் ,கிளர்ச்சிக்குப் பிந்தைய கட்டத்திலும் ஆயுதப் போர்த்தந்திரம் பற்றிய அக்கறையைத் தொடர்ந்தார்.1965-ல் கியுபாவின் தொழில் துறைத் தலைவர் என்ற ( பதவி ) பாத்திரத்தை உதறித் தள்ளி விட்டு மீண்டும் கொரில்லா கமாண்டர் என்ற பாத்திரத்துக்குத் திரும்பினார். அப்படி அவர் பதவியை விட்டதற்கான காரணங்களுள் கியூபாவில் சோஷலிசமும் கம்யூனிசமும் கட்டமைக்கப் படுவது- அதன் வெற்றி என்பது மூன்ராவது உலக நாடுகளில் புதிய புரட்சிகர முனைகள் தோற்றுவிக்கப் படுவதை, அதிலும் குறிப்பாக , லத்தீன் அமெரிக்க நாடுகளில் அவ்வாறு தோற்றுவிக்கப்படுவதைப் பொறுத்து இருக்கிறது என்பது அவரது நம்பிக்கையாகும். இவ்வாறாக செகுவேராவின் சிந்தனை
வளர்ச்ச்சியானது கியூபப் புரட்சியின் இரு கட்ட வளர்ச்சி பற்றிய அவரது சொந்தப் பகுப்பாய்வு சொல்வதைப் போல மேலும் செழுமை ஆனது. உண்மையில் புரட்சியின் தோற்றம் பற்றிய அவரது தத்துவமும் அப்புரட்சியைத் தோற்றுவிப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றிய விவாதங்களும் ,
ஜனவரி,1959-க்குப் பின்னரான காலகட்டத்தை, லத்தீன் அமெரிக்கா முழுவதும் ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்த வாய்ப்பான சூழ்நிலையை எப்போது கிளர்ச்சிக்குப் பிந்தைய காலகட்டம்
வழங்கியதோ அந்த கால கட்டத்தைச் சார்ந்ததாக இருந்தது.

செகுவேராவின் சிந்தனைகளைப் பற்றியஆய்வு என்பது,கிளர்ச்சி மையங்களுக்காக(foco)அவர் வளர்த்தெடுத்த போர்த்தந்திரங்களையும் -புரட்சிக்கான கிளர்ச்சிக் கட்டத்தில் உண்மையில் அவர் பின் பற்றிய போர்த்தந்திரங்களையும் ஒன்றாகக்காணும் தவற்றில் இருந்து விடுபட உதவுவதாக இருக்க வேண்டும். நாம் பார்த்ததைப் போல் ஆரம்பத்தில் அவரது ஆயுதம் தாங்கிய போராட்டம் பாடிஸ்டா அரசைத் தூக்கி எறிவதற்கான பொது வேலை நிறுத்தத்தை நம்பி இருந்தது.ஏப்ரல் 1958-ல் தோல்வி அடைந்த அரசியல் பொது வேலை நிறுத்தத்துக்குப் பின்னர் தான் ,பாடிஸ்டாவுடனான ஒரு ராணுவ மோதலை அவர் வலியுறுத்தத் தொடங்கினார் .இருந்த போதிலும் அத்தகைய வேலை
நிறுத்தத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஜனவரி 1959-ன் தொடக்கத்தில் நடத்தப் பட்ட பொதுவேலை நிறுத்தம் பொருளாதாரத்தை முடக்கி, கிளர்ச்சிப் படையானது அரசுப் படைகளுடன் எந்தப் பேச்சு வார்த்தையும் நடத்தாமல், ஒப்பந்தம் எதுவும் போடாமல் நேரடியாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற அனுமதித்தது.

கிளர்ச்சிக் கட்டத்தின் இறுதியில் தான் கியூபப் புரட்சியில் ஏற்பட்ட கடுமையான தத்துவார்த்த பிரச்சினைகள் பற்றி செகுவேரா கவனம் செலுத்துகிறார். அப்படிப்பட்ட ஒரு பிரச்சினை லெனினின் வரையறையான ‘ புரட்சிகரத் தத்துவம் இல்லாமல் ஒரு புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது ‘ என்பதற்கு எதிர் மறையான எடுத்துக் காட்டாக இருந்தது செகுவேராவின் “கியூபப் புரட்சியின் தத்துவார்த்த ஆய்வு பற்றிய குறிப்புகள்”- மார்க்சீய லெனினியம் பற்றிய மேலோட்டமான
அறிமுகத்துக்கு மேல் எதுவுமற்ற , முதலாளித்துவ வளர்ச்சி விதிகள் பற்றிய பொது விதிகள் பற்றி அறியாத, தலைவர்களால் கியூபப் புரட்சி சாத்தியமானதைக் குறிப்பிடுகிறது.புரட்சி நடத்தத் தேவையான சமூக நிலைமைகள் பற்றிய தத்துவத்தை நடைமுறை முந்திவிட்டதாகத் தோன்றுகிறது, கியூபாவில். மற்றொரு பிரச்சினை புரட்சிகரத் தத்துவத்தின் பொருளை எப்படிப் புரிந்து கொண்டு வியாக்கியானம் செய்வது என்பதாகும்.ஒரு புரட்சியைத் தொடங்குவதற்கும் மக்களை வெற்றிக்கு இட்டுச்
செல்வதற்கும் ஒருவருக்கு அப்போதைய யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட தத்துவம் தேவை. முந்தைய புரட்சியின் போராட்ட அனுபவங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களின் வரிசை மட்டும் போதாது.ஒரு புரட்சியைஉருவாக்குவதற்கான நடைமுறைத் தத்துவத்தில் முக்கியமானது ஸ்தூலமான வரலாற்று அனுபவங்களின் சரியான புரிதலும் சமூக சக்திகளின் தற்போதைய பலாபலம் பற்றிய சரியான கணிப்புமாகும் என செகுவேரா வாதிட்டார்.சுருக்கமாகச் சொல்வதானால் புரட்சிகரத் தத்துவம் என்பது அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு , ஒவ்வொரு புதிய புரட்சிகர சூழ்நிலைக்கும்
ஏற்ப பின்பற்றப்பட வேண்டும்.

மறுபுறம், இது ஒரு புரட்சிகரப் போராட்டம் வெற்றி பெறுவதற்கான புறவயமான சூழ்நிலைகள் என்னவாக இருக்க வேண்டும் என்ற அறிவை / புரிதலைக் கோருகிறது என செகுவேரா முதலில் வரையறுத்தார். “கியூபா : வரலாற்று விதி விலக்கு அல்லது காலனியாதிக்க எதிர்ப்புப் பொராட்டத்தின் முன்னணிப்படை (ஏப்ரல் 1961) ” என்ற அந்தக் கட்டுரையில் புரட்சியின்
புறவயமான துவக்கம், நாசூக்காகச் சொல்லப்படும் “வளர்ச்சி குன்றிய / வளர்ச்சியற்ற நிலை” யிலிருந்து தோன்றுவதாகக் கணிக்கப்பட்டது.எந்த நாடுகளில் சில ஆரம்ப நிலையிலுள்ள பொருட்கள் ஏற்றுமதிக்காக பயிரிடப்படுவதால்,வளர்ச்சி ஏறுமாறாக இருக்கிறதோ ,எந்த நாடுகளில் நில உடைமை வர்க்கம் அன்னிய நலன்களுக்கு ஒத்துப் போகிறதோ அவை வளர்ச்சி குன்றிய நாடுகளாகும்.வெகு ஜனங்களைப் பொறுத்தவரை வளர்ச்சியற்ற நிலையைச் சுட்டிக்காட்டும் பொதுவான அடையாளங்கள் : குறைந்த சம்பளம், வேலை இன்மை, அறை குறை வேலை நிலை ஆகியவை ஆகும். செகுவேரா இந்த
நிலையை ‘மக்களின் பசி ‘ எனச் சொல்கிறார்.புரட்சிக்கான புறவயமான சூழல்களில் மக்களின் பசி, பசியால் ஏற்படும் பரவலான குமுறல்,மக்கள் மீதான அடக்கு முறை, இந்த பசிக்குமுறலாலும் ஒடுக்குமுறையாலும் ஏற்படும் கோபம் வெறுப்பு அலைகளாகியவைகளும் இந்தச் சூழலுக்குள் அடங்கும். இப்படிப் பட்ட சூழ்நிலைகள் ஒவ்வொரு லத்தீன் அமெரிக்க நாட்டிலும் நிலவுவதாக செகுவேரா நம்பினார். இல்லாதது என்னவென்றால், புரட்சிக்கான அகவயமான நிலைகளும்,பிரதானமாக ஆயுதப் போராட்டத்தின் மூலமாகத்தான் வெற்றி கிட்டும் என்ற புரிதலும் மட்டும் தான்.

புறவயமான சூழல் என்பது ‘ஒரு தேசந்தழுவிய அரசியல் நெருக்கடி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேவை ‘ என லெனின் கருதியது போல் அல்லாமல், செகுவேரா அத்தகைய நெருக்கடி தோன்றுவதற்கு முன் கிளர்ச்சிகள் நடத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். மரபு ரீதியான லெனினியத்திலிருந்து மீறுவதான இந்த நோக்கம் என்னவெனில், அதிகாரத்துக்கான போராட்டத்திற்காக அகவயமான சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் லத்தீன் அமெரிக்காவில் இருந்ததுதான்.
இலத்தீன் அமெரிக்காவில் ஒரு சர்வதேச யுத்தத்துக்கான சாத்தியம் சிறிதும் இல்லை,அதைத் தொடர்ந்து 1917-ல் ரஷ்யாவில் ஜார் மன்னனைத் தோற்கடித்தது போல் சில நாட்களில் அல்லது வாரத்துக்குள் அரசைக் கவிழ்க்கும் சூழ்நிலைகளும் இல்லை.பிற்காலத்தில், தனது வளர்ச்சியின் பின்னொரு காலகட்டத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக முடியும் நீண்ட நடைமுறையில் இருந்து பிரித்து கிளர்ச்சிகளைத் தொடங்க வேண்டியிருந்தது. செகுவேராவைப் பொறுத்தவரை , ஒரு புரட்சிகரப் போராட்டம் துண்டு துண்டாக உருவாக்கப்பட வேண்டியது என்பது மட்டுமல்ல,ஒரு புரட்சிகர இயக்கத்தைக் கட்டுவதற்கே கூட ,ஒரு கிளர்ச்சி தொடங்க வேண்டியதாக இருந்தது.

FOCO_ புரட்சிகர மையங்களின் பரிணாம வளர்ச்சி.
_________________________________________________

FOCO – புரட்சிகர மையம் பற்றிய ஆரம்ப திட்டம் / வரை படம் ஆன “கிளர்ச்சிப்படையின் சமூகத்திட்டங்கள்” ( ஜனவரி-1959), ஒரு வருடம் கழித்து, “கொரில்லா யுத்தம் ” (ஹவானா 1960)-ல் பூர்த்தி செய்யப்பட்டது. முதலாவதாக மக்கள் படை ஒரு முறையான ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும். இரண்டாவதாக,புரட்சிகரமான சூழ்நிலைகள் கனிய வேண்டுமென்று காத்திருக்கத் தேவை இல்லை.ஏனெனில் புரட்சிகர மையங்கள் அவற்றை
உருவாக்க முடியும். மூன்றாவதாக,ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு சாதகமான நிலப்பரப்பு, நாட்டுப்புறம் ஆகும்.

இந்த ஒவ்வொரு பொதனையும் லத்தீன் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிகளின் கட்டளைப் படியான வழிகாட்டுதல்களுக்கு முரண் ஆனதாக இருந்தன.முதலாவது, ராணுவ-அதிகார வர்க்க அமைப்போடு மோதி வெற்றி பெறுவதற்கு முன், ஒரு முன்னணி தேர்தலில் போடிட்யிட்டு வென்று அரசியல் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையைச் சவாலுக்கு இழுத்தது. இரண்டாவது, ஆயுதப் போராட்டத்துக்கு முன்னதாக ஒரு மார்க்சிய-லெனினிய கட்சியின் தலைமைக்கும்,
புரட்சிக்கான எல்லா சூழ்நிலைகளும் கனிந்து வர வேண்டும் என்பதற்கும் காத்திருக்க வேண்டும் என்ற வரட்டு சூத்திரத்தை சவாலுக்கு இழுத்தது. மூன்றாவது கருதுகோள் பாட்டாளி வர்க்கம் நெருக்கமாக இருக்கும் நகர்ப் புரங்கள்தான் ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கான வாய்ப்பான தளம் என்பதை சவாலுக்கிழுத்தது. புரட்சிகர முன்னணிப்படை கிராமப்புறங்களிலும் பாறைகள் நிறைந்த நிலப்பகுதியிலும் சேதப்படுத்த முடியாதது. நகர்ப்புறத்தோடு ஒப்பிடுகையில் முறையான ராணுவத்தால்
நெருங்க முடியாதது என வாதிட்ட செகுவேரா பாட்டாளி வர்க்கத்தைத் திரட்டுவதற்குப் பதிலாக ஒரு நிலச்சீர்திருத்தத்திட்டத்தை முன் வைத்து உழவர்களைத் திரட்டுவதில் முழுக்கவனம் செலுத்தினார்.

லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரிகளை வன்முறையால் தூக்கி எறிவது என்ற தனது முதல் புரட்சிகர நோக்கத்தை ‘அர்பென்ஸ்’ வீழ்ச்சி அடைந்த போது உருவாக்கினார். மிகவும் வெறுக்கப்பட்ட சர்வாதிகாரிகளுக்கு முன்னுரிமை தரப்பட்டது. கியூபாவில் பாடிஸ்டா ,டொமினிகன் குடியரசில்
ட்ரூஜில்லோ, நிகாரகுவாவில் சோமொசா. “கிளர்ச்சிப் படையின் சமூகத்திட்டங்கள்”
என்ற கட்டுரையில் லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரிகளை சாவின் வரிசையில் நிறுத்தும் நடவடிக்கையில் கியூபப் புரட்சி முதலாவது என்று எச்சரித்தார் .வெர்டி ஒலிவொ ( Verdi Olivo-Havaanna April 1960 ) என்ற சிறிய கட்டுரையில் ,எப்படி கியூபப் புரட்சி லத்தீன் அமெரிக்க சூழலை நஞ்சூட்டி ட்-ரூஜில்லோ மற்றும் சமோசாவின் இனிய ஜனநாயகங்களைப் பயமுறுத்துகிறது என்பதையும் பாடிஸ்டாவின் விழ்ச்சியைத் தொடர்ந்து அடுத்த இலக்காக இருந்தவர்கள் இவர்கள் என்பது பற்றியும் நையாண்டியாக எடுத்துரைத்தார்.

அதன் முதல் வாசிப்பில் புரட்சி மையம் என்பது கரீபியச் சூழல்களால் வகைப் படுத்தப்பட்ட லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரிகள் மற்றும் மத்திய அமெரிக்காவின் வாழைப்பழக் குடியரசுகள் இவற்றுக்கெதிரான திறமையான போர்த்தந்திரம் எனக்கருதப்பட்டது .திருட்டுத்தனமாகவோ வேறு எப்படியோ ஒரு அரசானது ஏதோ ஒரு வகையில் மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கும்
வரையில் புரட்சிகர மையத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்டுவதில் சிரமங்கள் இருக்கும் என வாதிட்டார். சட்ட பூர்வமான போராட்டங்கள் சலித்துப் போக வேண்டும் அல்லது சட்ட விரோதமாக அதிகாரத்தைச் செலுத்தும் அரசால் ஒடுக்கப்பட வேண்டும்.லத்தீன் அமெரிக்காவின் பெரும்பாலான, ஜனநாயக நாடாகத் தம்மை அறிவித்துக் கொண்டவை, சமூக மாற்றத்துக்கான சட்டப் பூர்வமான போராட்டங்களுக்கான வழிமுறைகளை மூடிவிட்டது என்ற துணிவின் பேரில் இந்த முன்
நிபந்தனை திருத்தப் பட்டது.

“கியூபா : சரித்திர விதி விலக்கா அல்லது முன்னணியா?” என்ற கட்டுரையில் தான், போலி ஜனநாயக அரசுகளுக்கு எதிராக FOCO – புரட்சிகர மையங்களை விரிவாக்குவது என்ற நடைமுறை முன் வைக்கப் பட்டது. இந்தக் கட்டுரை, எல்லா லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வளர்ச்சியின்மை என்பது பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது. ஆயுதம் தாங்கிய போராட்டங்களினூடாக அகவயமான சூழல்கள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. இப்படியாக சட்ட பூர்வமான மாற்றத்துக்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் போனதாக முடிவு செய்தது லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரிகளுக்கு
விஷேசமாகப் பொருந்துவதாகக் கருதப் பட்டது.

செகுவேரா தனது ஆரம்ப உதாரணத்தை மறுவார்ப்பு செய்து ,ஜனவரி 1962-ல் அமெரிக்க நாடுகளின் அமைப்பிலிருந்து ( OAS ) கியூபா விலக்கி வைக்கப் பட்ட சம்பவத்தாலும், கியூபா மேற்கொண்ட எதிர் நடவடிக்கையாலும் சரியானது என நிரூபிக்கப் பட்டது. மெக்ஸிகோ மட்டும் தான் அமெரிக்கா முன் மொழிந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது.அர்ஜண்டினா பிரேசில், சிலி, பொலிவியா, மற்றும் ஈ•க்விடார் ஜனநாயக அரசுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.அதற்கும் மேலாக இந்த அரசுகள், கியூபா ரஷ்யாவுடன் இணக்கமாய் இருப்பதைக் கண்டிப்பதில் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டன. பிப்ரவரியில் கியூப அரசு தனது “ஹவானா- இரண்டாவது அறிக்கை ” மூலம் பதிலடி கொடுத்தது. இதனைச் செகுவேரா ‘லத்தீன் அமெரிக்கப் புரட்சியின் அறிக்கை’ என்று அழைத்தார்.அமெரிக்கா முன் மொழிந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பது லத்தீன் அமெரிக்க மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு உலை வைத்து அவற்றின் உள் விவகாரங்களில் அமெரிக்கத் தலையீட்டை அங்கீகரித்து அமெரிக்க நாடுகளின் அமைப்பை OAS காலனிகளின் ‘யாங்கி அமைச்சரவை’ (Yankee ministry of colonies ) ஆக உண்மையில் மாற்றிவிடும் என்று அந்த அறிக்கை சொன்னது. இலத்தீன் அமெரிக்க ஜனநாயகங்கள் உள்ளூர் பிற்போக்கு ஆளும் கும்பலின் கருவிகள் எனவும் , தேசீய நலன்களுக்கு துரோகம் செய்பவர்கள் சமூக மாற்றத்துக்கு எதிரிகள் எனவும் அம்பலம் ஆயின. கியூபாவுக்கு எதிராக அமெரிக்காவை ஆதரித்த பின்னர், தங்களது சொந்த நாட்டில் ஏற்படும் எந்தவொரு மக்கள் எழுச்சியையும் அடக்கி ஒடுக்க யாங்கி அமெரிக்க துருப்புகளை வரவழைக்கத் தயங்க மாட்டார்கள். இந்த கண்ணோட்டத்தில், கியூபாவின் எதிரிகள் தங்கள் சொந்த நாட்டின் எதிரிகளாகவும் கருதப்
பட்டார்கள்.

‘ இலத்தீன் அமெரிக்காவில் கியூபாவின் செல்வாக்கு’ ( மே,1962 ) என்ற பாதுகாப்புத் துறையினருக்கான தனது உரையில் ஆயுதப் புரட்சியின் சாத்தியம் பற்றி முற்றிலும் புதிய காரணிகளை அடையாளப் படுத்தினார். ஏகாதிபத்தியம் எந்த அளவு ஊடுருவி உள்ளது, யாங்கி அமெரிக்க நகரங்களில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது,கியூப புரட்சிகர கருத்துகளின் செல்வாக்கு எவ்வளவு ஊடுருவி உள்ளது என்பவை அக்காரணிகள் ஆகும்.அதன்படி புரட்சிக்குக் கனிந்து
இருப்பதாக பராகுவேயை மட்டும் அவர் தனித்துக் காட்ட வில்லை.மாறாக, ஜனநாயக சீர்திருத்த அரசுகளான பெரு, ஈக்விடார்,கொலம்பியா, வெனிசுலா மற்றும் பிரேசில் ஆகியவற்றையும் குறிப்பிட்டார். இவற்றுள் பெரும்பாலானவை கியூபப் புரட்சிக்கு விரோதம் பாராட்டியதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கியூபா இந்நாட்டு மக்களுடன் நேச அணி உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார். கியூபாவின் சுய பாதுகாப்பிற்கான போர்த்தந்திரத்தின் ஒரு பகுதியாக
இந்த நாடுகளில் ஆயுதப் பொராட்டத்துக்கு ஊக்கமும் ஆதரவும் அளிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

போலி ஜனநாயக அரசுகளுக்கு எதிரான அரசியல்-இராணுவ போர்த்தந்திரம் பற்றிய செகுவேராவின் சிறப்பான வாசகம்” கொரில்லா யுத்தம் :ஒரு முறை ” (செப்-1963 ) என்ற நூலில் அடங்கியுள்ளது. கியூபாவைத் தவிர மற்ற எல்லா அரசுகளும் ஆளும் கும்பலின் சர்வாதிகாரமாகக் கருதப்படுகிறது. அவை தேர்ந்தெடுக்கப் பட்டவை ஆனாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அவை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சில பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவ கும்பலால் அதிகாரம் செலுத்தப் படுகின்றன.லெனினுடைய பிரயோகத்தைப் பொருத்தி செகுவேரா இந்த ஆட்சிகள் எந்த விதமான அரசு வடிவத்தில் இருந்தாலும்
சமூக ஏகாதிபத்தியங்களாகும் என அடையாளப் படுத்தினார். லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரிகளத் தூக்கி எறிந்து விட்டு ஜனநாயகத்தை மீண்டும் நிலை நாட்டுவது மட்டும் போதாது – அது ஒரு கும்பலின் ஆட்சியின் மறு வடிவமாகத்தான் இருக்கும். ஆளும் கும்பல்கள் ஜனநாயக முகமூடியுடன் ஆட்சி செலுத்த முயல்வதால் புரட்சியாளர்களின் கடமை அந்த ஆட்சியின் முகமூடியைக் கிழித்து எறிவதாக இருந்தது என செகுவேரா வாதித்தார். அணி திரட்டுவதற்கான ஒரு யுத்ததந்திரம், இந்த போலி ஜனநாயக அரசுகளைத் தங்களது உண்மையான முகத்தைக் காட்டவும் வன்முறை மூலம் சட்ட
பூர்வமான நடைமுறைகளை ஒடுக்கவும் நிர்பந்திக்கும் செகுவேராவின் போர்த்தந்திரம் , தீவிர மாற்றங்களுக்கான மக்கள்இயக்கத்திற்கு இந்த அரசுகளை அடி பணிய வைக்கவும் ,இல்லாவிட்டால் மக்கள் இயக்கங்களை ஒடுக்குவதனால் ஆயுதம்தாங்கிய மோதலுக்கான கட்டத்தை துவக்கி வைக்கவும் வற்புறுத்துவதாக இருந்தது.

டிசம்பர்,1963-ல் வியட்நாமுக்கு ஆதரவாக அவர் பேசியபோது செகுவேராவின் போர்த்தந்திரம் ஒரு புதிய திருப்பம் கொண்டது.தேசீய விடுதலை முன்னணிக்கு உதவி செய்வது கட்டயமானது, ஏனெனில் வியட்நாமில் பயிற்சி எடுக்கும் அமெரிக்கத் துருப்புகள் ஒரு நாள் லத்தீன் அமெரிக்க கொரில்லா இயக்கங்களுக்கு எதிராகப் பயன் படுத்தப்படும் என அவர் வாதித்தார்.அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குப் புதிய எதிர்க்கிளர்ச்சி முறைகள் மற்றும் புதிய ஆயுதங்களை சோதித்துப் பார்க்கும் மிகப்
பெரிய ஆய்வுக் கூடமாக வியட்நாம் ஆகி விட்டது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான உலகப் போராட்டத்தில் ஆசியா ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் ஒரே சமயத்தில் புரட்சிகர யுத்த களங்களைத் தோற்றுவித்த காரணத்தால் வியட்நாமிய கொரில்லாக்கள் கியூபப் புரட்சியின் தோழமைச் சக்தியாகக் கொண்டாடப்பட்டனர்.

FOCO புரட்சிகர மையங்களின் போர்த்தந்திரத்துக்கான இந்த வடிவம் பிப்ரவரி 1965-ல் வடக்கு வியட்நாமில் குண்டு வீசி அமெரிக்க துருப்புகளை தென் வியட்நாமுக்கு அனுப்பிய பிறகு வடிவம் பெற்றது. லத்தீன் அமெரிக்கப் புரட்சியின் ‘கண்டம் தழுவிய குணாம்சம் ‘ 1962-லேயே செகுவேராவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அது 1965-ல் ஆசிய ஆப்பிரிக்க மக்களின் தோழமை அமைப்பு ( Afro – Asian peoples solidarity organisation ) அல்ஜியர்ஸ் நகரில் நடத்திய மாநாட்டில்
அவர் உரையாற்றுகையில் தான் , லத்தீன் அமெரிக்க நாடுகளின் புரட்சிகர இயக்கங்களை இத்துடன் இணைத்து, இயக்கத்தை விரிவாக்கப் போவதாக அவர் சொன்ன போது தான், வெளிப்பட்டது. அல்ஜியர்ஸ் சொற்பொழிவில் கோடி காட்டிய இந்தத் திட்டம் அவரது முயற்சியின் பங்காக ஹவானாவில் 1966-ல் TRICONTINENTAL – முக்கண்ட மாநாடு ஆக உருவெடுத்தது. டிசம்பர் 1963-ல் வியட்நாம் பற்றிய உரையில் குறிப்பிட்ட பாட்டாளி வர்க்க சர்வ தேசீயம் பற்றிய அவரது விளக்கம் அல்ஜியர்சில் வெளிப்படையாகச் சொல்லப்பட்டது : ஏகாதிபத்தியத்திற்கு எதிரான யுத்தத்தில், யுத்த முனைகளின்
பூகோள எல்லைகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை,ஒரு பொது எதிரிக்கு எதிரான யுத்தத்தில் எந்த ஒரு நாடு வெற்றி பெற்றாலும் அது எல்லா நாடுகளுக்குமான வெற்றி ஆகும்.

செகுவேராவின் முந்தைய யுத்த தந்திரங்களில், அமெரிக்க ஏகாதிபத்தியம் லத்தீன் அமெரிக்க மக்களின் உடனடி எதிரி என்பதற்குப் பதிலாக பிரதான எதிரி என்று கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் உடனடி எதிரி என்பது லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரிகளுடன் அடையாளப் படுத்தப் பட்டது. பின்னர் போலி ஜனநாயக அரசுகளை உள்ளடக்கியதாக மறு விளக்கம் அளிக்கப் பட்டது.செகுவேராவின் இறுதிப் போர்த்தந்திரத்தின்படி அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் உடனடி மற்றும் பிரதான எதிரி என முடிவு செய்யப்பட்டு உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஏகாதிபத்தியத்துடனான நேரடி மோதலுக்கு
அறைகூவல் விடுக்கப்பட்டது. தெற்கு வியட்நாமின் மீது நேரடி ராணுவ ஆக்கிரமிப்பைக் கட்டவிழ்த்துவிட்டதன் மூலமும் அதைத் தொடர்ந்து ஏப்ரல்,1965-ல் சாந்தோ டோமிங்கோவை ( SANTO DOMINGO ) ஆக்கிரமித்ததன் மூலமும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கௌதமாலாவில் அர்பன்ஸ் ஆட்சிக்கு எதிராகவும், ஏப்ரல்,1961-ல் கியூபாவில் பன்றி வளைகுடா போரின்போதும், ஏற்கனவே தான் நேரடி மோதலில் ஈடுபடுவதைத் தவிர்த்து வந்த கொள்கையை கைவிட்டு விட்டது. தேசீய
எல்லைகளை மீறும் இந்தப் போக்கிற்கு சரியான பதில் புரட்சியை சர்வதேச மயமாக்குவது தான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வியட்நாமிய தலையீட்டை எதிர்க்க செகுவேரா , வியட்நாம் போலவே ஒரு புரட்சிகரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த பெல்ஜியன் காங்கோ( KINSHASA )நாட்டில் கியுபா தலையிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அது முடியாமல் போகவே நவம்பர்,1966-ல் ஒரு புதிய யுத்த முனையைத் தொடங்கும் நோக்கத்துடன் பொலிவியாவுக்குப் பயணமானார்.

செகுவேராவின் யுத்த தந்திரங்களின் இறுதி வடிவம் அவருடைய முக்கண்ட மாநாட்டுக்கு அனுப்பிய செய்தியில் அடங்கி இருக்கிறது.( MESSAGE TO TRI-CONTINENTAL – APRIL 1964 ). இந்த போர்த் தந்திரம் கியூப மாதிரியுடன் தொடர்ந்து அடையாளப் படுத்தப்படவில்லை. ஆனால் வியட்நாமுக்கான பாதையுடன் தெற்கு அமெரிக்காவுக்குப் பொருத்தமான போர்த்தந்திரம் என்பதாக அடையாளப் படுத்தப்பட்டது. முக்கண்ட மாநாட்டு மூலமாக செயல்பட்டு லத்தீன் அமெரிக்க புரட்சியின் கியூப முன்னணிப் படைக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது வியட்நாமை உருவக்குவதற்கான கடமை
விதிக்கப் பட்டது. தேசீய விடுதலைப் போராட்டங்களின் நோக்கம் இன்னமும் லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரிகளையோ அல்லது போலி ஜனநாயகங்களையோ தூக்கி எறிவது என்பதாக இல்லை. ஆனால் ஏகாதிபதியத்தை ஒரு உலக அமைப்பாக செயல்படுவதில் இருந்து ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதாக மாறிவிட்டது. சர்வதேச பாட்டாளி வர்க்க ராணுவங்களையும் புரட்சிகர குழுக்களையும் உருவாக்கி அடுத்தடுத்துள்ள நாடுகளின் ஆயுதம் தாங்கிய போராட்டங்களை ஒருங்கிணைத்து
ஏகாதிபத்தியம் உலக அளவிலான மோதலுக்கு-சவாலுக்கு இழுக்கப்பட வேண்டும். தனது அல்ஜியர்ஸ் சொற்பொழிவின் சாரத்தை விரிவாக்கும் விதத்தில் ; ஒரு உலகளாவிய சோஷலிசப் புரட்சியின் மூலம் தான் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் வெற்றி பெற முடியும் என வாதிட்டார். இதனை ‘கிளர்ச்சி குவேராயிசத்தின் மிக உயர்ந்த நோக்கம்’ எனஅழைக்கலாம்.

கிளர்ச்சிக்குப் பிந்தைய கட்டம்
கியூபாவுக்கு வெளியே FOCO கிளர்ச்சிக் குழுக்களைத் துவக்கியதன் மூலம் குவேராயிசம் செல்வாக்கு பெற்றிருந்தது. கியூபாவுக்குள் அது சோஷலிசக் கட்டுமானத்தின் மீது அக்கறை செலுத்தியதன் மூலம் ஒரு மார்க்சீய லெனினியக் கட்சியின் முன் மாதிரியாக இருந்தது. போக்கோ கிளர்ச்சிக் குழுக்களின் வாரிசு என்ற முறையில் கட்சியின் முன்னணிப்போராட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டது. சாராம்சத்தில் குவேராயிசம் இரண்டு கட்டமான ஆனால் தொடர்ச்சியான புரட்சிக்குத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தது. அதில் போக்கொ கிளர்ச்சிக் குழுக்கள் முதல் கட்டத்தில் முன்கையெடுக்கும் செயற்பாட்டுடனும், இரண்டாம் கட்டத்தில் மார்க்சீய லெனினிய கட்சியின் முன்னணி செயற்பாட்டுடனும் இயங்கின.

இருந்த போதிலும், ‘தொடர்ச்சியான புரட்சி ’ என்ற இரட்டைப்பணியை ஒரு ஒற்றை அமைப்பு செய்யக்கூடிய சாத்தியத்தை சே- திறப்பாகவே விட்டிருந்தார். ‘மார்க்சீய லெனினியகட்சி ’ (1963) என்ற கட்டுரையில்,”கட்சியின் முன்னணிப் படை போக்கொ புரட்சி மையங்களுக்கு மாற்று என அவர் கருதவில்லை. ஆனால் அதுவே தன்னளவில் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல்_இராணுவ முன்னணி என்றார். ஒவ்வொரு அரசியல் இராணுவப் புரட்சி மையங்களும் மார்க்சீய லெனினிய கட்சியாகத் தகுதி அடையாது என்ற போதிலும் ஆயுதப் புரட்சி மூலம் தனது தகுதியை வென்றெடுத்தால் ஒழிய எந்தவொரு கட்சியும் முன்னணிப்படை ஆகாது எனவும் கருதினார்.” தேசீய விடுதலை என்கிற கட்டத்தினைக் கடக்கு முன்னரே மக்களின் முன்னணிப்படையாக ஆக முடியும் என்றால், அந்தக் கட்சி சோஷலிசத்தைக்கட்டும் பணியை எதிர்கொள்ளூம்போது அதிக தீவிரத்துடனும் மக்கள் மத்தியில் அதிக மதிப்போடும் இருக்கும் எனச் சொன்னார். அத்தகைய சந்தர்ப்பத்தில் முன்னணிக் கட்சியானது போரின் மூலம் உள்நாட்டு ஆளும் வர்க்கத்திடமிருந்தும் எகாதிபத்தியத்திடமிருந்தும் மக்களை விடுவிக்கும் வரலாற்றுக்.கடமையை நிறைவேற்றி இருக்கும், பழைய சமூக அமைப்பை அடித்து நொறுக்கிவிட்டு புதிய சமூக அமைப்பை உருவாக்கி இருக்கும்” என்றார்.

எப்படி புரட்சிகர மையத்தை மார்க்சீய லெனினிய கட்சியுடன் எவ்வாறு இணைப்பது என்பது குறித்து வாங்குயின் ஜியாப்பின் மக்கள் யுத்தம் – மக்கள் ராணுவம் (Genaral Vonguyen Giap’s _ People’s war- People’s Army) என்ற நூலின் கியூப மொழிப்பதிப்பிற்கான தனது முன்னுரையில் கோடிகாட்டுகிறார். வியத்நாமிய முன்மாதிரியில் கொரில்லாக்களும் மக்கள் படையும் ஆயுதப்போராட்டத்தைத் தொடங்கி வழிகாட்டும் மார்க்சீய லெனினிய கட்சியின் முஷ்டிகளாக இருந்தன. புரட்சிகரப் படையானது ஆயுதந்தாங்கிய மக்கள் திரளை மட்டுமல்ல, ஆயுதந்தாங்கிய கட்சியையும் கொண்டிருந்தது. வியத்நாமிய முன் மாதிரியானது கியூபாவை விட அனைத்தும் உள்ளடக்கியதாக ( All inclusive) இருந்தது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவது கடினமானது.

மார்க்சீய லெனினிய கட்சியின் சரியான வரலாறு பற்றிய அவரது கோட்பாடு ‘கட்சியைக் கட்டுவது பற்றி’ (1963) என்ற அவரது கட்டுரையில் தரப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் அவர் மார்க்சீய லெனினிய கட்சியின் இரண்டு பிரதான கடமைகளாவன , அரசியல் விழிப்புணர்வை ஊட்டுவதும் வளர்த்தெடுப்பதும் என வரையறுத்து உள்ளார். இந்தத் தத்துவம் ‘சோஷலிசமும் கியூப மனிதனும்’ (1963)என்ற கட்டுரையில் மறு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அவர் கம்யூனிசத்தைக் கட்டுவதற்கு பொருளாயத அடிப்படையோடு கூடவே ஒரு புதிய வகையிலான மனிதனும் உருவாக்கப்பட வேண்டும் என்றார். இவை ஒரே சமயத்தில்-இணையானவையாக உருவாக்கப்பட வேண்டுமேயொழிய, கியூபாவின் பொருளாதார கலாச்சாரப் புரட்சியின் பின் விளைவாக அல்ல என்றார். இந்தக் கொள்கையானது கிளர்ச்சி மையங்கள் பற்றிய அவரது முதல் நிலைப்பாட்டுக்கு நெருக்கமான ஒப்புமை கொண்டுள்ளது. இவ்வாறாக ஒரு முறையான ராணுவத்தை முறியடிக்க புரட்சிகரக்கட்சி அவசியம் இல்லையென்றபோதிலும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளைக் கடந்து செல்ல கட்சி அவசியம் என்று ஆகிறது.

அதே சொற்பொழிவில்தான் கம்யூனிசத்துக்கான மாற்றத்தைத் துவக்குவதில் கட்சியின் மூன்னணியானது பொருளாதார நிலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்காக காத்திருக்க அவசியம் இல்லையென்று சொன்னார். போதுமான அளவு குறைந்த பட்ச வளர்ச்சி இருக்கும் போது புறவயமான நிலைகள் தூண்டிவிடப்பட முடியும் எனவும், அவர் ‘கிரியா ஊக்கிகள்’ என அழைத்த செயற்பாட்டினைப் பயன் படுத்துவதன் மூலம் வளர்ச்சிக்கான கால அவகாசம் குறைக்கப்பட முடியும் எனவும் சொன்னார். இந்த வழியில் சோஷலிசத்தை உறுதிப்படுத்துமுன் இடையிடையே வரும் கட்டங்களைத் தவிர்த்து கம்யூனிசத்துக்கான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றார். சோஷலிசமும் கம்யூனிசமும் அடிநாதமாக உறையும் எதிர் நிலைகளின் விளைவு மட்டுமல்ல, கட்சியின் முன்னணி, சமூக மாற்றத்தை வழிகாட்டி ஊக்குவித்தலின் விளைவும் ஆகும் என்றார். ‘மார்க்சீய லெனினியக் கட்சி ’ என்ற நூலின் குறிப்புகளில் சே- குறிப்பிடுவது போல; புறவயமான அகவயமான எல்லா நிலைகளும் கூடிவரும் வரை புதிய சமூக அமைப்பினைக் கட்டுமானம் செய்யக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சியின் முன்னணிப்படை இவற்றை உருவாக்க முடியும் . கிளர்ச்சி மையங்கள் பற்றிய சேயின் பொதுமைப்படுத்தலுக்கும் இதற்கும் ஒரு வெளிப்படையான ஒப்புமை இருக்கிறது. கட்சியின் முன்னணித் தத்துவம் வேண்டுமென்றே பின்னதன் மேல் முன்மாதிரிப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் கிளர்ச்சி மையம் என்பது மார்க்சீய லெனினிய கட்சி அரசியல் கருவின் சிந்தனையும் ஆகும்.

அத்தகையதொரு கட்சியின் கவர்ச்சி / பொருத்தப்பாடு என்பது உழவர்களைவிட திரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கத்துக்கானது. இந்த வெளிச்சத்தில் பார்த்தால் சேயின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய முதற்குறிப்பு ‘கட்சி கட்டுதல்’ என்ற அவரது கட்டுரையில் வெளிவந்தது குறிப்பிடத் தகுந்தது. போக்கோ புரட்சி மையம் புரட்சிக்கான எழுச்சியில் அரசியல் முன்னணிப்படையாகத் தொண்டாற்றியது என்பதுடன் நிலச்சீர்திருத்தத்துக்கும் பிரதான முகவராகச் செயல் பட்டது. சோஷலிசக் கட்டுமானத்தின் போது முன்னணிப்படையாகச் செயல்பட்ட கட்சியானது கியூபாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் முகவராகச் செயல்பட்டது. ‘ பாட்டாளி வர்க்கமும் கியூபாவின் தொழில்மயமாதலும் (1960)’ என்ற கட்டுரையில் சே- குறிப்பிடுவது போல் : முந்தைய புரட்சிகர நோக்கமான நிலச்சீர்திருத்தத்தின் மூலமாக உழவர்களைத் திரட்டுவது என்பது பின்னர் சோஷலிசக் கட்டுமான கட்டத்தில் தொழில்மயமாக்கலின் மூலம் தொழிலாளரைத் திரட்டுவது என மாற்றம் பெற்றது. புரட்சிகர மையம் பற்றிய சே – யின் மூன்றாவது பொதுமைப்படுத்தலுக்கும் இதற்கும் வெளிப்படையான ஒப்புமை இருக்கின்றது. புரட்சிகர மையத்தின் இலட்சியத்தின் உச்சம் கிராமப்புரம் எனின் கட்சியின் பிரதான குவிமையம் நகரத்தில் இருக்கிறது.

சே-யின்பிரதான பொருளாதாரக் கட்டுரைகளில் கட்சியின் முன்னணிப் படையுடைய திட்டவட்டமான கடமைகள் விவரிக்கப்பட்டுள்ளன என்பதுடன் ‘சோஷலிசத்திட்டமிடலும் அதன் முக்கியத்துவமும்’ (ஜூன் 1964) என்ற கட்டுரையில் சுருக்கித் தரப்பட்டுள்ளது .சர்வதேச முதலாளித்துவத்தின் புறவயமான பிணைப்புகள் வளர்ச்சி குன்றிய நாடுகளில் மிகவும் பலவீனமாக உள்ளன. அங்கு நிலவும் ஏகாதிபத்தியத்தின் அகவயமான பவீனமான கன்னிகளை உடைத்தெரிய , பாட்டாளி வர்க்கத்துக்கு உதவுவதாக அமைந்துள்ளன என்கிற லெனினியக் கோட்பாட்டினை இந்தக் கட்டுரை மறு உறுதி செய்கிறது. பொருளாதார சார்பு நிலையைக் கடந்து செல்வதில் சே- பரிந்துரைக்கும் போர்த்தந்திரம் , தொழில் நுட்ப பொருளாதார அடிப்படையை நிர்மானிப்பதும் புதிய மனிதனை உருவாக்குவதும் இணையானதும் உடனடியானதும் எனவாகும் .. சுருக்கமாகச் சொல்லப்போனால் ஏகாதிபத்தியத்தால் காலனியாக்கப்பட்ட, தனக்கென சொந்த தொழில் ஏதுமில்லாத தனிப்பட்டதொரு சந்தையை நம்பியிருக்கும்,. நாட்டில் சோஷலிசத்தைக் கட்டுமானம் செய்வது எப்படி என்ற கேள்விக்கு இது தான் விடையாகும்.

வளர்ச்சி குன்றிய நாடுகளுக்குப் பொருத்தமான சோஷலிசத்திட்டமிடலின் நிதி ஒதுக்கீட்டு மாதிரி அதே தலைப்பிலான அவரது கட்டுரையில் கோடிகாட்டப்பட்டுள்ளது .நிதி ஒதுக்கீட்டுக்கான இந்த மாதிரியானது ஸ்டாலினிய _ ஸ்டாலினிய சித்தாந்தத்துக்குப் பிறகான திட்டங்களப் புறமொதுக்கி மார்க்ஸின் ‘கோதா வேலைத்திட்டம் பற்றி ‘ (மே 1878) என்ற கட்டுரையில் விவரிக்கப்பட்டதும் , லெனினின் ‘அரசும் புரட்சியும்’ என்ற நூலில் மறு உறுதி செய்யப்பட்டதுமான மாதிரியைப் பின் பற்றுகிறது. சோவியத் நாட்டில் முதலாளித்துவ பொருளாதார செயல்பாட்டிற்கு பணிபுரியும் தனிச்சொத்துடைமை, தனிப்பட்ட முறையில் லாபம் சம்பாதித்தல் , டிவிடெண்டுகள் வட்டி வாடகை சம்பாதித்தல் ஆகியவற்றை ஒழித்ததன் மூலம் கடந்து செல்லப்பட்டன என சே- வாதிட்டார். இவை சோஷலிசத்துக்கு ஏற்புடையனவாயினும், சந்தை உறவுகளைக் கடந்து கம்யூனிசத்துக்கு மாறுவதான நிபந்தனை என்பதற்குக் குறைவானவை எனவும் வாதிட்டார். ஏற்கனவே சொல்லப்பட்ட கோதா வேலைத்திட்டம் பற்றிய கட்டுரையில், கம்யூனிசத்தின் அடிமட்ட கட்டத்திலேயே சந்தை உறவுகளையும், தரப்படுத்தப்பட்ட மனித உழைப்புக் காலத்தின் அடிப்படையில் ஊதியத்தை நிர்ணயிப்பதில் ஆதிக்கம் செலுத்தும் சந்தை உறவுகளையும் பணத்தின் பாத்திரத்தையும் இது அகற்றி விடுகிறது.

நிதி ஒதுக்கீட்டில் முன்கூட்டியே திட்டமிடல் (Budgetting) என்பது உற்பத்தி உறவுகளை முதலாளித்துவத்துவ முறையில் இருந்து கம்யூனிச முறைக்கு மாறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது..அதே வேளையில் சே- யின் கோட்பாடான விருப்ப (தன்னார்வ) உழைப்பு என்பதோ முதலாளித்துவ மனித உறவுகளை கம்யூனிச மனித உறவுகளாய் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1964 இல் அவர் ஆற்றிய உறையில் விருப்ப உழைப்பின் நோக்கத்தில் பலவிதமான வெளிப்பாடுகள் உண்டு எனவும், முதலாவதாக சலிப்பான வேலைச்சுமையை -சமூகப்பங்கேற்பான புரட்சிகரமான கடமையாய் மாற்றுவது., இரண்டாவதாக மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்குமான வித்தியாசங்களைக் கடந்து செல்வது, மூன்றாவதாக உற்பத்தி செலவு பற்றிய அக்கறை உள்ள மக்களுக்கு உழைப்பின் மதிப்பு தெரியுமாதலால்- வீண் சேதாரங்களைக் குறைப்பது , விருப்ப உழைப்பு என்பது , கம்யூனிச சமுதாயத்தில் எந்த பொருளாதார ஆதாயத்தையும் (ஊக்கத்தொகை) எதிர்பாராமல் அல்லது பொருளாதார சலுகைகளை மிகையாகப் பெறாமல் செலுத்தப்படும் உழைப்பு எனவும் சொன்னார். ஒன்றிணைந்த பொருளாதார மற்றும் கல்விப்பணிகள் சே-யின் ‘ திட்டமிட்ட வரவு செலவு ( Budgetting ) வாயிலாக நிதி ஒதுக்குதல் மற்றும் விருப்ப(தன்னார்வ) உழைப்பு வழங்குதல் இவற்றின் மூலம் கட்சியின் முன்னணிப்படையால் நிறைவேற்றப்பட வேண்டும்.

கட்சி முன்னணிப்படையின் பொருளாதார மற்றும் கல்வி புகட்டும் பணிகள்,விருப்ப (தன்னார்வ) உழைப்பு மற்றும் நிதி ஒதுக்கலில் வரவு செலவினை முன்கூட்டியே திட்டமிடல் என்ற சே-யின் வழிகாட்டலின்படி நிறைவேற்றப்பட வேண்டும். வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் செலவினங்களைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்குதல் என்றபோதிலும் அது பொருளாயத ஊக்கத்தொகையின் பரப்பு எல்லையைக் குறைத்து புதிய மனிதனுக்கு கல்வி புகட்டுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. விருப்ப (தன்னார்வ) உழைப்புத் திட்டம் புதிய மனிதனுக்குக் கல்வி புகட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த போதிலும் அதன் நோக்கம் உற்பத்தியின் அளவை அதிகரிப்பதாக இருந்தது. வளர்ச்சிக்குறைவை சமாளிக்கும் இந்த இரு எதிர் வினைகளும்,கியூப புரட்சியினுள் குவேராயிசத்தை தெளிவாக வரையறுக்கும் நீரோட்டமாக இருந்ததுடன் ஒருகாலகட்டத்தில் •பிடலின் ஆதரவையும் பெற்றிருந்தது. இருந்த போதிலும் 70- களில், முன் கூட்டியே வரவு செலவைத்திட்டமிடல் கைவிடப்பட்டு பொருளாயத ஊக்கச் சலுகைகளை அதிகரித்ததானது, பிற்காலத்தில் கியூபப்புரட்சி தனக்கென சொந்த வழியை வகுத்துக் கொண்டதைக் காட்டுகிறது.

ஆங்கில மூலம் DONALD C. HEDGES _ LEGACY OF CHE GUEVARA

தமிழாக்கம் : புதுவை ஞானம்.

puthuvai_gnanam@rediffmail.com

Advertisements