நிச்சலன நிருத்தியம்

மின்னியல் வித்தைகள்
_____________________
வண்ணங்களையும் வடிவங்களையும்
மழையாய்ப் பொழிகிறது
கணிணிகளால் இயக்கப்படும்
படக்கருவி.

ஜொலிக்குமொரு அமீபா
கூரையில் உருவாகிக் கீழே
இறங்கிச் சூழ்கிறது உங்களைச்
சிகரெட் புகையாய்……
மறைந்து போகிறது பின்னர் .

மானுட வெள்ளிப் படிவமாய்
உயிர் கொண்ட திரையாய்
மின்னியல் கலீடாஸ்கோப்பில்
தொழில் நுட்பமெனும் முப்பட்டை ஆடியில்
வானவில்லின் துண்டுகளாய் நீங்கள்.

மிதமிஞ்சிக் கதறுகிறது முனகுகின்றது குரல்
கூக்குரல் இடுகிறது கொம்மாளக் கும்பல்
உருப்பெருக்கெடுத்த பேய்க் கூச்சல்
கேட்கப்படுவதில்லை_உணரப்படுகிறது.

உராய்ந்து கொண்டு செல்கிறது மானிடத் திரள்
உடையிலும் உடலிலும்
வெப்பமும் வியர்வை நாற்றமுமாய்
ஒரே நெருக்கடி.

மொத்த விளைவோ ஆச்சரியப் படுமளவு
மகிழ்ச்சியோடும், கிளர்ச்சியோடும் , நிறைவோடும்
வீடு திரும்பக் கூடும் நீங்கள்.
போதை மருந்தின் சுகமே போல
இப்படிப் பட்டதோர் கும்பல்.

உணர்வுகள் கிளர்ந்தெழுந்தாலும் கூட
சலிப்பூட்டும் மின்னியல் வித்தைகள்.
மீண்டும் கிளர்ச்சியடையவோ
தூண்டுதல் வேண்டும் மீண்டும்.

மூலம் :HOWARD R LEWIS and
HAROLD S STREITFELD
________________________

சலித்துப் போனீர்களா ?
________________________

தொலைக் காட்சிப் பெட்டகத்தைத் திறந்தால்
உலகமே ஊடுறுவுகிறது உங்கள் வீட்டிற்குள்.
முந்தைய தலைமுறையினர்
கனவிலும் காணாத காட்சிகளைக்
காண்கிறோம் நாமும் குழந்தைகளும்.
நிலவின் வெண் படலத்தில்…………….
விண்கலத்தில்………………………………..
மிதக்கின்றனர் இப்புவியின் மாந்தர் !
நிமிடங்கள் கழியக் கழிய
வருகிறது கொட்டாவி விழுகிறோம் படுக்கையில்
தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்து விட்டு.

அரை மணி¢த் தியாலத்துக்குள்ளேயே –
படைப்பிலிருந்து இது வரை
மனிதன் நிகழ்த்திய மகத்தான சாதனைகள்
மகிழ்விப்பது இல்லை நம்மை.

குண்டு வீச்சுகளும் விமானக் கடத்தல்களும்
சகிக்க முடியாத கொடுமைகள் பலவும்
வண்ண உயிர்ப்புகளாய் ஜொலிக்கிறது
கண் முன்னே……எதிர் வினை புரிகிறோம்
இன்னும் ஒரு சிகரட்டைப் பற்ற வைத்து
இன்றேல் அருந்துகிறோம் பீர்- ஒரு குவளை.

ஒவ்வொரு காட்சியிலும் எப்படி சகிக்க முடியும் ?
அட்டூழியங்களையும் அநியாயங்களையும்.
எப்படி இருக்க முடியும் ?
சலிப்பில் மூழ்காமல் .

ஊர்தி பாதி _ ஓட்டுனர் பாதி
_______________________

இயங்கூர்திகள்……
மனிதனின் நீட்சி என்ற
மெக்லுகானின் கருத்தை எண்ணி
வியக்கத் தொடங்குகையிலேயே
தம்முடைய நீட்சியாக
மாற்றி விட்டனவே
மனிதனை
இயங்கூர்திகள்.

கார்கள் எனப் பரவலாக
நாம் அழைக்கும் கனத்த ஓடுகள்
நமது கால்களின் – ஆத்மாவின்
நீட்சியாகி விட்டன .
வாழுகின்றன நம்முடன் அவை
வாழ்கிறோம் நாமும் கூடவே
சக உயிரிகளாக.

ஊர்திகளுக்கும் ஓட்டுனர்களுக்கும்
இடையிலான உறவு – இரு
இனங்களின் இசைவு என்பது
யதார்த்தம் ஆகி விட்டது .

பாதி மனிதன் பாதி இயந்திரம்
ஹ்யக்கிரீவனாக
குதிரை முகமும் மனித உடலுமாய்
ஊர்தி ஓட்டுனர் .

JEFFREY SCHRANK
AUTO MAN –CYBORG
****************************************

ஆனால்….எங்கே …..?
shannon Dickson,15 year old Texan Boy.
____________________

இயந்திரமாகப் பயன் படுத்தப் படுகிறது
எனது தலைமுறை.
எப்படி மாற்ற முடியும் ?

கணிணிகள் கைப்பற்றுகின்றன
மூளையின் பாத்திரத்தை
மேலும் மேலும் குழப்புகிறது
மின்னணுவியல்.
விடை எங்கோ வெளியில் தான் !

MARGARET MEAD

*******************************************
என்னைப் பார் !
______________

என்னைப் பார் ! என்னைப் பார் !
உயிருடன் இருக்கும் போதே
என்னைப் பார் !
கதறுகிறது மனம் -உள்ளீடற்ற
வெற்றுச் சுவர்களின் பின்னேயிருந்து.
பிரதிபலிப்பைக் கடக்க விடாத படி
எண்ணிக்கை இடப்பட்டு விட்டேனா ?
சூனியமாக…….அப்படியாயின்
கடவுளின் பேரால் கேட்கிறேன்
விலகி நில்லுங்கள்…………!
எனது நிழல் என்னைத் தொடரும் அளவும்
நிச்சயிக்கப்பட்ட வெற்று வெளியைச்
சென்றடையும் அளவும் !.

******************************************************
உலகே.!….நான் இளைஞன்.
_______________________

உலகே ! நான் இளைஞன்
தங்காத ஓர் தேடலில்
பீட பூமிகளிலும் சம வெளிகளிலும்
தகித்து வெளுத்த பாலை வெளியிலும்
திரிந்து அலைகிறேன்.

கதறி அழுகிறேன் கொட்டும் மழையில்
ஏறுகிறேன் சிகரங்களில் ஆர்வமுடன்
பசியோடும் இலட்சிய வெறியோடும்.
விழுந்து இடருகிறது எனது ஆன்மா
கிழிக்கும் முள்வேலிகளிலும்
தவறான பாதைகளிலும்.
மாலையின் நீண்ட நிழல்களில்
அச்சுறுத்துகின்றன சாவும் வாழ்வும்
வாய்விட்டுச் சிரிப்பேன்
நாளை எனது நம்பிக்கை வளருகையில்.
உலகே…நான் இளைஞன்
உனது நம்பிக்கை எனும் பகல் பொழுது.
உண்மையான ஞானத்தைத் தேடுகிறேன்
உன் வழியில்….ஒரு கை கொடுப்பாயா ?

*******************************************************

குழப்பம்
_______

இப்போது இவ்வளவு
விரைவாக எதையும்
அவதானிக்க இயலாது
உலகம் தோன்றுவதற்கு
முன்னரும் அப்பாலும்
எங்கிருக்க முடியும் நான்.

****************************************************

எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் ?
_______________________________________

தந்தையர் காத்துக் கொண்டிருக்கின்றனர்
மற்ற கடமைகள் ஓயும் வரை……………..
பிள்ளைகளுடன் அறிமுகம் செய்து கொள்வதற்காய்.
மகள்களின் மேல் உண்மையிலேயே
மேலும் மேலும் கவனம் செலுத்த
காத்துக் கொண்டிருக்கின்றனர் தாய்மார்கள்.
கணவன் மனைவியர் காத்துக் கொண்டிருக்கின்றனர்
ஒருவரை ஒருவர் நெருக்கமாய் அறிந்து கொள்ள.
ஆனால் காலம், அன்னியோன்னியம் ஆவதற்கு
அனுமதிப்பதில்லை மக்களை.
எப்போது வாழத் தொடங்கப் போகிறோம்
இது தான் வாழ்க்கை என்பதாக ?
இது தான் நமது காலம்
இது தான் நமது நாட்கள்
கடந்து கொண்டே போகின்றன அவை.
இன்னும் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் ?.

*******************************************************************

எண்ணிக்கையா ?……….தரமா ?
____________________________
கல்லூரி மாணவன் சொன்னான் _
வேறு படிப்புக்கு மாறப்போகிறேன்.

பரபரத்துப் போகிறேன் தேர்வுக்குப் படிப்பதில்
ஒரு புத்தகத்தையும் புரிந்து கொள்ள நேரமில்லை
மறந்தே போனேன் புத்தகத்தை ரசித்து மகிழ்வதற்கு .

நமக்கும் இதுதான் நிலையா ?
நிலவும் பரபரப்பு வாழ விட வில்லையா ?
அமைதியாக அமர்ந்து அசை போட முடியவில்லையா ?

அளவில் மூழ்கி தரம் மறந்து போனால்
வாழ்வதில் என்ன லாபம் ?
மனிதனுக்கு .

*****************************************************************
வாழ்வா ? சாவா ?
_________________

பிறப்பில் சுறுசுறுப்பாக இல்லாதவன்
இறப்பில் அவசரம் காட்டுகிறான்.

*******************************************************************

தானியங்கி மயமாதலுக்கு எதிராக……
__________________________________

ஒரு வேளை……..நாம்
தானியங்கி மயமாதலுக்கு எதிரான
நிலை எடுக்க வேண்டியதாக மாறக்கூடும்.
ஏதோவொரு வகையில் வறையறுக்கப்பட்ட
கணிணி£யாய் மாறி வருகிறோமோ ?
மாறிவருகிறோம் பழக்க தோஷத்தில்
இயந்திரத்தனமாய் எண்ணவும்
எதிர் வினை புரியவும்.

சக மனிதர்களையும் வாழ்வையும்
பொறுத்தவரை ஒத்திப்போடுவது நல்லது
இயந்திரத்தனமாக எண்ணுவதையும்
எதிர் வினை புரிவதையும்.

அப்படிச் செய்வது உதவும் நமக்கு
இயந்திரமாக்கப்பட்ட உட்பகையை
வெருட்டி ஒட்டும் மந்திர வாதியாக.
தயார்ப்படுத்துமது நம்மை
முற்றிலும் புதிய கோணத்தில்
எல்லாவற்றையும் பார்க்க .
விடுவிக்குமது நம்மை
வறையறுக்கப்பட்ட இயந்திர மயமான
இயக்கத்தில் இருந்து.
இட்டுச்செல்லுமது நம்மை
புதிய மனத்தோடும் புதிய நோக்கோடும்
யதார்த்தத்தை தரிசிக்க.

BOB DYLON

***********************************************
கண்ணோட்டம்
______________
வெளியே பார்த்தனர் இருவர்
சிறைச்சாலையின் கம்பிகளூடே
ஒருவன் பார்வையில்
சேறும் சகதியும்
மற்றவன் பார்வையில்
நிலவும் தாரகையும்.
பார்க்கும் தோரணையில் தான்
அழகும் அசிங்கமும்
உற்சாகமும் சலிப்பும்
அசட்டையும் படைப்பாற்றலும்.

OSKAR WILD

**************************************************

மாற்றியது யார் ?
________________

மனோநிலை சிதறிய ஒரு மாது
படபடத்தாள் விடுதி மேளாளரிடம்
” மயக்கம் வருகிறது மார்பு அடைக்கிறது
பக்கத்து அறையில் நாள் முழுதும் ஒருவன்
படாத பாடு படுத்துகிறான் – பியானோவை.
உடனடியாக நிறுத்தாவிட்டால் செத்துப்போவேன்
பிறகு நீர் தான் பொறுப்பேற்க வேண்டும் ! ”

“உங்களுக்கு உதவத்தான் நினைக்கிறேன் சீமாட்டி
ஆனாலும் எனக்கு அச்சமாய் இருக்கிறது.
சிம்பொனி அர்ங்கின் மாலை நிகழ்ச்சிக்கு
சாதகம் செய்பவர் ‘ பெற்றோவ்ஸ்கி ‘ என்றான்.”

“அப்படியா ஆஹா ! ” என்றாள்,புகார் செய்தவள் –
எல்லா நண்பர்களையும் வரச்சொன்னாள்
தொலை பேசியில் தொடர்பு கொண்டு.

FULTON OURSLER
*******************************************************

இக்கணம்
_________

இக்கணம் மட்டுமே இருக்கிறது.
நிகழும் இக்கணத்தின்
நொடிப்பொழுதில் தான்
உறைகிறது யதார்த்தம் .
கடந்து விட்டது கடந்தகாலம்
இன்னும் பிறக்கவில்லை
எதிர்காலம்.
இக்கணத்தில் நிகழ்வதைத்தான்
பார்க்கவும் கேட்கவும் முடியும்.
இக்கணத்தை அனுபவித்தால் தான்
விழித்தெழும் உன் புலன்கள்.
காதங்களுக்கு அப்பால் சஞ்சரிக்கும் மனத்தை
இக்கணத்தின் செயலுக்கு இழுத்தால் தான்
படிப்படியாக அனுபவிக்க முடியும்
வியக்கத் தக்க மன நலத்தை .
நித்தியத்தை உய்த்துணரத்
தோரனவாயிலே இக்கணம் தான்.
காலம் என்பது இரு வேறு
சம்பவங்களின் இடைவெளி
இக்கணத்தில் சஞ்சரித்தால்
இடைவெளி இல்லை – இருப்பது
சம்பவம் மட்டுமே !

HARWARD R. LEWIS and
HAROLD S. STREITFELD

******************************************************
கைப்பற்று உண்மையை.
_______________________

எது சரியோ அதைத் துணிந்து செய்
அடித்துச் செல்லப்படாதே
இக்கணத்தின் க்ஷணப் பித்தத்தில்
பற்றிக்கொள் உண்மையைத் துணிவோடு
என்னவாகுமோ ஏதாகுமோ என்ற
சஞ்சலத்தில் சிக்காமல்.

DEITRICH BONHOEFFER

**************************************************

எனது தவறு
_____________

எதனாலும் கேடு விளைவதில்லை
என்னால் தவிர.
துன்பத்தில் உழல்பவன் யான்
எந்தன் சொந்தத் தவறுகளால்.

St.BERNARD

*************************************************
விரைந்து எழு !
______________
முடியுமாயின் விரைந்து எழுந்து விடு
நீண்ட நேரம் தேங்கியிருந்து விட்டாய்
உன்னையே நீ இழந்து விட்டாய்
மானுடத்தின் அனைத்துக் கூறுகளிலிருந்தும்
துண்டாகிப் பிளவு பட்டாய்
புலன்களுக்கும் அப்பாலும்
நாகரிகமடைந்து விட்டாய்
தொடர்பற்று போதையில் வீழ்ந்து
இயந்திரமாய் மேற்குச் சாயலாக
வெளிரிய விழிகள் இயற்கை ஒளிக்கு
கொட்டாவி விடும் நிலைக்கு.

பய பக்தியுடன் தேடிய நல்ல வாழ்க்கை
குருடாகி ,ஊமையாகி ,தொள தொளத்து
சீரழிந்து விட்டது _எழுந்திருக்கவும்
போகவும் ,ஓடவும் வேண்டிய நேரமிது.

ஜன்னலைத் திற ,சூடேற்று குருதியை
துள்ளிக் குதி – ஈரப் புல் வெளியில் .
கூச்சலிடு , உணர்வு கொள் , தேடத்தோடங்கு
அன்னை பூமியின் புதிய வேர்களை .
அப்பால் செல் – அறிந்ததில் இருந்து !

WILLIAM HEDGE PETH

********************************************************
கழற்று மழைக் கோட்டை !
———————————–
சாரணன் ஆக நான் இருந்த போது
ஒரு தலைவன் இருந்தான்
சுற்றுலா அழைத்துப் போக .
ஒரு வார்த்தை கூட பேச மாட்டான்
முடிவில் கேள்வி மேல் கேள்வி கேட்பான்.
என்ன பார்த்தாய் ?
மரங்கள் , செடி கொடிகள் ,பறவைகள்
விலங்குகள் அத்தனையும் சொல்ல வேண்டும்.
அவன் அவதானித்ததில் கால் பங்கு கூட
நான் கவனித்ததில்லை_ திருப்திப் படுத்த முடியாது
அவனை — பாதி அளவு கூட.
“உன்னைச் சுற்றிலும் படைப்பு இருக்கிறது ! ”
கதறுவான் அவன் கைகளைப் பரப்பி .
ஒன்றிப்பது இல்லை நீங்கள்
மழைக் கோட்டு அனிவதைக் கை விடுங்கள்
மழை கொட்டும் போது ! .

ARTHUR GORDON

*************************
பிரபஞ்ச வித்தை

MICHAEL NOVAK
————————
நிச்சலனமாய் இருந்தது இரவு
காடுகளையும் ஏரிகளையும்
கவிந்த்திருந்தது காரிருள்.

ஒன்றினை ஒன்று கூவியழைக்கும்
கடல் நாரைகளின் கீச்சொலியும்
பிடிபட்ட மீன்களின் கவுச்சி நாற்றமும்
என்னை வந்தடையுமளவு நிலவும் அமைதி .

மென்மையான அலைகளின்
சலசலப்பும் கேட்கிறது
அண்ணார்ந்து பார்க்கையில்
அலங்கரிக்கும் இருளை
தாரகைக் கூட்டங்கள் .

****************************

திகைக்க வைக்கும் பேரழகு

MICHAEL NOVAK
————————————
ஒரு குச்சியைக் கையிலேந்தி -அல்லது
ஒரு மலரினைக் கையிலெந்தி -அதன்
வியாபகத்திலும் லாவகத்திலும்
லயித்திருக்கிறான் ஒருவன்.

திடீரென உலகம் மாறியது அற்புதமாய்
பரிமானத்தின் மேல் பரிமானமாய்
பரிமளிக்கிறது பேரழகாய் .

எதுவுமே எளிமையானதல்ல
சாதாரணமல்ல வழக்கமானதல்ல
ஒருவனின் வியப்பிலிருந்து
தப்பிக்கும் அளவு.

***********************************
அடி எடுத்து வை !.மெல்ல மெல்ல !!

Gilbert K.Chesterton
————————————————
பனிப் பொழிவின் போதும்
மழை தூரும் போதும்
அடி எடுத்து வை ! மெல்ல மெல்ல !!
மனிதன் தொழுகை செய்ய
ஓர் இடம் கண்டு பிடிப்பதற்காய்.
வெகு எளியது தான் இந்தப் பணி
ஆனாலும்….வழி தவறக் கூடும் நாம்.

————————————————-

பசித்திருப்பதில்லை இந்த உலகம்
விந்தைகளுக்காக. ஆனாலும்
பசித்திருக்கும் ……………….
விந்தைகளின் தேவைக்காக.
————————————————
வீழும் தாரகை.
———————-
அரை வட்ட வடிவாய் வானில்
ஒளிசிந்திப் போயிற்று ஓர் தாரகை
நிர்ணயிக்கப் பட்டதோர் வடிவில்
கண் சிமிட்டியது ஒளிச் சிதறல் _
அற்புதமானதோர் ஒழுங்கிலும்
எண்ணற்றதோர் கோர்வையிலும் –
அமைதி தவழும் அந்த இரவில்
மழலைத் தனமான அந்தச் சிதறலை
எண்ணிப் பார்க்கையில் வியப்போ வியப்பு.

நட்பு நெகிழும் இந்த ஒவ்வொரு தாரகையும்
ஒவ்வொரு ஆதவன்_, ஒவ்வொரு ஆதவனும்
ஆயிரக் கணக்கான பால் வெளி£களின்
ஒரு அங்கம் என்பது மட்டுமல்ல
அவற்றின் மிகச் சிறிய பகுதி தான்.
***********************************************
மகிழ் நிதியம்.
Douglas jerrold
__________________
மகிழ்ச்சி என்பது வளருகிறது
நமது சன்னலுக்கு அருகே.
பறிக்க வேண்டுவதில்லை
மாற்றான் தோட்டத்திலிருந்து !

***********************************************

புதுமையும் வியப்பும்.

Mathew
___________________

விலங்கியல் பூங்காவுக்கோ
சர்க்கசுக்கோ செல்வதற்கு
உகந்த வழி ஒன்றுதான் – அது
குழந்தையுடன் அங்கு செல்வதாகும் .

புறப்படுவதற்கு முன்னரே
பசுமையாகவும் கிளர்ச்சியுடனும்
குழந்தைக்கு உள்ளிருக்கும்
வியப்புலகைக் காண்பீர்கள் .
வழித்துணையாய்க் கொள்வீர்கள்
குழந்தையை – நீங்கள்
புத்திசாலியாய் இருந்தால்.

பூங்காவிலோ கானகத்திலோ
உற்றுக்கவனியுங்கள் குழந்தையை
தட்டாம் பூச்சிகளையும் வெட்டுக்கிளிகளையும்
விரைவாய் எப்படிக் கண்டு பிடிக்கிறார்கள் ?
திடுக்கிடுவீர்கள் எவ்வளவு இழந்திருக்கிறோம்
நாம் என்பதை நினைத்து !.

அசட்டையாக நாம் பார்க்கும் உலகைக்
கரிசனத்தோடு தரிசனம் செய்கிறது குழந்தை .
அலட்சியமாக நாம் செவி மடுக்கும் ஒலிகளில்
அற்புமன்பதையில்த இசையைக் கேட்கிறது குழந்தை .

உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டு
அப்பாவிக் குழந்தைகளாக ஆனால் ஒழிய
அடி எடுத்து வைக்க முடியாது
சொர்க்கத்தின் நுழை வாயிலில் !.

******************************************************
தரிசிக்கத் தெரிந்தவருக்கு…..
John ruskin.
_______________________
மனித ஆத்மா மன்பதையில்
ஆற்றும் மிகப் பெரிய பணி
எதையாவது கண்டு பிடிப்பதும்
கண்டதைத் தெளிவாகச் சொல்வதும்.
சிந்திக்க முடிந்த ஒருவனால்
நூற்றுக் கணக்கானவர்களைப்
பேச வைக்க முடியும் .
தரிசிக்கத் தெரிந்த ஒருவனால்
ஆயிரக் கணக்கானவர்களைச்
சிந்திக்க வைக்க முடியும் .

தரிசிப்பதென்பது
கவிதையாய்
வரும் பொருளுறைப்பதாய்
மற்றும் சமயமாய்
அனைத்துமாய் .
*******************
வியப்பில் வாழ்தல்

Whittaker chambers
___________________
பண்ணைதான் உங்களது அரசாங்கம் -ஆனாலும்
அன்பினாலும் அரிய உழைப்பினாலும்
எழுப்பப்பட்ட மதிற்சுவருக்கப்பால் உலகம் .

கோமளித்தனமான ஆடைகளா
தவிர்க்கப்பட வேண்டும்
சித்திரப்படக்கதைகள் கொண்ட புத்தகங்களா
வீட்டிற்குள் நுழையக் கூடாது
அனுமதி பெற்றே திறக்க முடியும்
தொலைக்காட்சிப் பெட்டகத்தை
அனுமதியோ கேட்டாலும் கிடைப்பதரிது-
இப்படியாகத்தான் சில படங்களைப் பார்த்தீர்கள்.

ஆனாலும் நீங்கள் வளர்ந்ததோ
விந்தைகளின் நித்தியப் பிரசன்னத்தில்
இவ்வாறாக, குழந்தைகளாக இருந்த போது
மனிதர்களுக்குத் தெரிந்திராத
இரண்டு முக்கிய விடயங்களை
அனுபவித்தீர்கள் நீங்கள் அவையோ
வாழ்வெனும் விந்தை பிரபஞ்சமெனும் விந்தை
பிரபஞ்சமெனும் விந்தைக்குள் ஒளிந்திருக்கும்
வாழ்வெனும் விந்தை .

மிகவும் முக்கியமானது என்னவெனில்
நீங்கள்அறியவில்லை அவற்றை
புத்தகங்களிலிருந்தும் – சொற்பொழிவுகளிலிருந்தும்
ஆனாலும் ,
அறிந்தீர்களவற்றை
அவற்றோடு வாழ்ந்து பார்த்து !

அதைவிட முக்கியமானது,
பய பக்தியோடு அறிந்தீர்கள் அவற்றை .
குரங்குத்தனமான மனிதனின் உற்சாகத்தில்
புதியன கண்டு பிடிக்கும் தற்கால அறிவியல் உலகில்
அழிந்தே போயின பயமும் பக்தியும் .
__________________________________

விடை காண முடியா வினா?
Maurice Seehy.
__________________________
பிரஞ்சுக்காரன் ஒருவன் தேர்ந்தெடுத்தான்
தனது கல்லறைக்கான வாசகத்தை :
“இங்கு ஏன் வந்தோம் ? -என்பதை அறியாமலேயே
இந்த உலகை விட்டுப் போனவன் –
இங்கே உறங்குகிறான் ! ”

____________________________________-

உறுதி ஆன அடையாளம்
A.H.Maslow
____________________________________

தேடல் என்பது தீர்த்த யாத்திரை ஆகி விட்டது
இயல்புக்கு மாறான அந்நிய மோகம் கொண்ட
விசித்திர மனிதருக்கு…….
வேறு நாட்டுக்கு அல்லது வேறு மதத்துக்கு
கிழக்கு நோக்கிய பயணம் .

உண்மையான ஞானிகளிடமிருந்தும்
ஜென் துறவிகளிடமிருந்தும் -இப்போதோ
உளவியல் நிபுணர்களிடமிருந்தும்
பெறப்படும் பெரும் படிப்பினை :
“புனிதம் என்பது சாதாரணத்தில் உள்ளது.”
இந்தப் பயணம் ……..
புனிதத்தை எதிர் கொள்ளத் தவறும் போது
எளிதாக மறந்து போக நேரிடும்
அந்தப் பாடத்தை……!

அற்புதங்கள் தேடி அங்கிங்கும் அலைவது
என்னைப் பொறுத்தவரை…….
“அனைத்துமே அற்புதம் தான் !” என
அறியாமையின்…….
உறுதியான அடையாளம் தான் .
_______________________________

ஆழ்ந்து கண்காணித்தல்

H.D.THOREAU
______________________________

என்னை நானே நியமித்துக் கொண்ட
கண்காணிப்பாளனாக இருந்தேன்
பல்லாண்டு காலம் .
உண்மையாகப் பணி செய்தேன்
பனிப் புயல்களுக்கும்
புயல் மழைகளுக்கும் .
_________________________________

Advertisements