பச்சைப்பசுமரம் பட்ட மரம் ஆனது ஏன்?
——————————————————-
Beautiful Tree  history of 18th century indian education
By Dharampal

பதினெட்டாம் நூற்றாண்டில் நிலவிய உள்நாட்டு இந்தியக் கல்வி
.தரம்பால்.
————————————————————————
திரு. ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்களின் நினைவாக ! .
இந்தப் பணியில் தொய்வடையாத அக்கறையுடன் வழிகாட்டிய
அவரது பெருந்தன்மைக்காக.
—————-

“அந்தச் சித்தரிப்பொடு அது முடியவில்லை. எதிர்கால அரசின் கல்வி முறை மனதில் இருக்கிறது. என்னுடைய புள்ளி விவரங்களை நிரூபிக்கும்படி சவால் எழுமே என்ற அச்சமின்றியே இதனைச் சொல்கிறேன். இந்தியா ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட அதிக அறியாமையில் உழல்கிறது. பர்மாவும் அதே நிலையில் தான் இருக்கிறது. ஏனெனில் பிரித்தானியர் இந்தியாவுக்கு வந்தபோது, அப்போது இருந்த நிலையை அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக வேரறுக்கத் தொடங்கினர். வேரைக் கண்டு பிடிப்பதற்காக மண்ணைப் பறித்தனர். பிறகு, அப்படியே விட்டு விட்டுச் சென்றனர். அந்த அழகிய மரம் ஈரமின்றிப் பட்டுப் போனது.

பிரித்தானிய நிர்வாகத்துக்கு அந்த கிராமத்துப் பள்ளிகள் நல்லவையாகத் தோன்றவில்லை. எனவே தனது திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, ஒவ்வொரு பள்ளிக்கும் குறிப்பிட்ட அளவு கட்டிடம், தட்டுமுட்டுச் சாமான்கள் இருந்தாக வேண்டும். அந்த அளவுகோல் கொண்டு பார்க்கப்போனால் இந்தியப்பள்ளிகள் பள்ளிகளே இல்லை. தாங்கள் ஆய்வு செய்த இடங்கள் பற்றிய புள்ளி விவரங்களை பிரித்தானிய நிர்வாகம் விட்டுச் சென்றிருக்கிறது. அந்தப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் இல்லை என்பதனால் பண்டைய பள்ளிகள் (திண்ணைப் பள்ளிக்கூடங்கள்) வாரியத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்டன. ஐரோப்பிய மாதிரியில் உருவாக்கப்பட்ட பள்ளிகள் மக்களுக்கு அதிகச் செலவு பிடிப்பதாக இருப்பதனால் அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை.

ஒரு நூற்றாண்டுக்குள் கட்டாயத் தொடக்கக் கல்வியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை நிறைவேற்றும்படி நான் சவால் விடுகிறேன். இந்த ஏழை நாட்டினால் அத்தகையதொரு செலவு மிக்க கல்வி முறையைத் தாக்குப்பிடிக்க முடியாது. எங்களது அரசு பழைய பள்ளி ஆசிரியரைப் புதுப்பித்து ஒவ்வொரு கிராமத்திலும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரு பள்ளியை நிறுவி சீதனமாக அளிப்போம்.”

மகாத்மா காந்தி.
இலண்டன் சாத்தம் நிலயத்தில் (Chatham HOUSE) அக்டோபர், 20 ,1931 இல் பேசியது.

“பிரித்தானியரின் வருகைக்கு முன் கிராமங்களில் நிலவிய கல்விமுறை பற்றிய எனது தேடல் முயற்சியை நான் இன்னும் கைவிட்டு விடவில்லை. பல கல்வியாளர்களுடன் தொடர்ந்து கடிதமூலம் தொடர்பு வைத்துள்ளேன். எனது நிலைக்கு ஆதரவு தெரிவித்து எழுதியவர்கள் தடையமாக/சாட்சியமாக ஏற்கத்தக்க ஆவணங்களைத் தரவில்லை. முழுமையற்றதோ கேடுபயக்ககூடியதோ அல்ல எனது நிலைப்பாடு. அவை சாத்தம் நிலையத்தில் நான் பேசியவற்றுடன் இன்னும் ஒட்டிக்கொண்டு/பின்னிக்கொண்டுதான் இருக்கின்றன. .ஹரிஜன் பத்திரிக்கையில் விட்டு விட்டு எழுத எனக்கு விருப்பமில்லை. நான் என் மனதில் வைத்திருந்த தடயங்கள் உங்களால் சவாலிக்கிழுக்கப்பட்டன என வெறுமனே நான் சொல்ல விரும்பவில்லை.”

மகாத்மா காந்தி
ஆகஸ்ட்,1939 இல் Sir Philip Hartog அவர்களுக்கு எழுதியது..

.முகவுரை.

இந்தியக் கல்வியின் வரலாறு குறித்து ஏராளமான அறிவார்ந்த பதிப்புகள் , குறிப்பாக 1930 களிலும் 1940 களிலும் வெளிவந்திருக்கின்றன. உண்மையில் இந்த விஷயம் பற்றிய எழுத்துக்கள், துவக்கத்தில் பிரித்தானிய அதிகாரிகளும் அறிஞர்களும் எழுதியவை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே வரத்தொடங்கிவிட்டன. இருந்தபோதிலும் பெரும்பாலான இந்த வரலாறுகள் பண்டைய காலத்துடன் தொடர்புடையவை, சில சமயங்களில் கி.பி. பத்து அல்லது பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை தொட்டுச் சென்றவை. மற்றவை பிரித்தானிய ஆட்சிக்காலத்தின் கல்வி வரலாறு பற்றியும் அதன் பின்னரும் பற்றிப் பேசுபவை. நாளந்தா அல்லது தக்ஷசீலா போன்ற குறிப்பிட்ட அமைப்புகள் பற்றிப் பேசும் அறிவார்ந்த படைப்புகள் மட்டுமின்றி,பண்டைய கல்வி பற்றிப் பொதுவாகப் பேசும் A.S.Altekar போன்றோரின் படைப்புகளும் இருந்தன. அதற்கும் பிந்தைய காலம் பற்றி பல படைப்புகள் இருந்தன. Selections from educational records என்ற இரு தொகுதிகள் கொண்ட பதிப்பு சமீபத்தில் இந்திய அரசாலேயே வெளியிடப்பட்டுள்ளது. இவையன்றி S.Nurullaah மற்றும் J.P.Naik ஆகியோரின் படைப்புகளும் குறிப்பிடத் தகுந்தவை ஆகும். பின்னது இந்த இரு ஆசிரியர்களாலும் (அதன் காலம் மற்றும் மனோநிலையைச் சுட்டிக் காட்டும் விதத்தில்) “கடந்த 160 ஆண்டுகளில் வெளிவந்த விரிவானதும் ஆதாரபூர்வமானதுமான இந்தியக் கல்வி வரலாறு என்பதோடல்லாமல் இந்தியக் கண்ணோட்டத்தில் விளக்கம் செய்வதான முயற்சியும் ஆகும்”
எனக் குறிப்பிடப் பட்டது.

ஒரு வகையில் கல்விக் கண்ணோட்டத்தில் நிறைவற்றதுவாயினும், 1939 இல் பண்டிட் சுந்தர்லால் அவர்களால் முதலில் பதிப்பிக்கப்பட்ட பெரும் நூலான இது, மிகப் பரவலான வாசகர்களைச் சென்றடைந்தது.( இந்தியில் ‘பாரத் மே அங்க்ரேசி ராஜ்’
என்று அறியப்பட்டதும் 1929 இல் வெளிவந்ததுமான இந்த நூலின் முதல் பதிப்பு ஆங்கிலேய அரசால் உடனடியாகத் தடை செய்யப்பட்டது. எனினும் 1780 பக்கங்கள் கொண்ட இதன் மறுபதிப்பு 1939 இல் வெளியிடப்பட்டது. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசு வெளியிட்ட தகவல்களை ஆதாரமாகக் கொண்டே எழுதப்பட்ட, ‘பிரித்தானிய அரசு மற்றும் 1860 வரையிலான அதன் பின் விளைவுகள்’ பற்றிய ஆதாரபூர்வமான நூலாக விளங்கியது இது.
பண்டிட் சுந்தர்லாலின் இந்த மகத்தான படைப்பு, அது வெளியிடப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்திய அரசியல் வாதிகளின் மூத்த தலைமுறையினர், கல்வியாளர்களிடையே பெரும் செல்வாக்கு செலுத்தியது. இந்தப் பிரபலமான படைப்பின் ‘இந்திய உள்நாட்டுக் கல்வியின் சிதைவு’ என்ற 40 பக்கங்கள் கொண்ட 36 ஆவது அத்தியாயம் பல்வேறு பிரிட்டிஷ் அதிகாரிகளின் கடிதப் போக்குவரத்திலிருந்து ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறது. இவை ஒரு நூற்றாண்டு காலகட்டத்துக்கு நீள்கின்றன. 3,ஜூன்,1814 இல் இங்கிலாந்திலிருந்து இந்திய கவர்னர் ஜெனரலுக்கு வந்த கடிதம் தொடங்கி, மாக்ஸ்முல்லரின் அவதானிப்புகள், 1919 இல் பிரிட்ட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர் Kir Hardie இன் குறிப்புகள் என நீள்கிறது இது.

இருந்த போதிலும், இந்த நூல் எழுதப்பட்ட காலத்தில், அச்சிடப்படாத விரிவான ஆவணங்களைப் பெறுவதில் இருந்த சிரமங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டால், இந்த ஆசிரியர் தனது ஆய்வுகளை அச்சில் வந்த ஆவணங்களைக் கொண்டு மட்டுமே தொடர முடிந்திருப்பது புலனாகும். இருப்பினும், ஒரு அறிமுகம் என்ற வகையில், இந்தியாவில் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய உள்நாட்டு கல்வி பற்றிய சான்றுகளில் ‘பாரத் மே அங்க்ரேசி ராஜ்’ ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல் ஆகும்.

13ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரையிலான கல்வி நிலவரம் மற்றும் வரலாறு குறித்து அரிதாகவே எழுதப்பட்டிருக்கிறது. ஐயத்துக்கிடமின்றி S.M.Jaaffer அவர்கள் இசுலாமியக் கல்வி பற்றி எழுதியது போன்ற சில நூல்கள் உள்ளன. அவற்றுள் சில அத்தியாயங்களில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நிலவிய கல்வி வரலாறு பற்றியும் இந்திய உள்நாட்டுக் கல்வியின் சிதைவு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. நசுருல்லாவும் நாயக்கும் தங்களது நூல்களின் மொத்தமுள்ள 643 பக்கங்களின் முதல் 43 பக்கங்களில் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய உள்நாட்டுக் கல்வி நிலையின் இயல்பு மற்றும் அளவு பற்றி விவாதிக்கையில் சில சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க கால உள்நாட்டு இந்தியக் கல்வியின் நிலை பற்றிய விவாதங்களும் மாறுபடும் கருத்துக்களும் தங்களது நிலைபாட்டுக்கு ஆதாரமாக கீழ்க்கண்டவ்ற்றை ஆதார சாதனமாகக் குறிப்பிடுகின்றன. (அ) அதிகம் பேசப்பட்ட முன்னாள் கிருத்துவ பாதிரியாரான Adam Smith அவர்களின் 1835 – 38 ஆண்டு கல்வி நிலை குறித்த அறிக்கைகள். அவை வங்காளம் மற்றும் பீகாரின் சில மாவட்டங்களில் நிலவிய சுதேசிக் கல்வி நிலை பற்றிப் பேசின. (ஆ) 1820 களில் சுதேசிக்கல்வி பற்றி பம்பாய் ராஜதானியில் பிரிட்டிஷ் அதிகாரிகள் நடத்திய ஆய்வறிக்கைக் குறிப்புகள் மற்றும் (இ) சுதேசிக்கல்வி பற்றி மதராஸ் ராஜதானியில்(வடக்கே கஞ்சம் தொடங்கி தெற்கே திருநெல்வேலி வரையும் ,மேற்கே மலபார் வரையும் 1822 முதல் 25 வரை விரிவாக நடத்தப்பட்ட மற்றொறு ஆய்வறிக்கையின் பிரசுரிக்கப்பட்ட பகுதிகள். கிட்டத்தட்ட அதே விஷயம் பற்றிய பஞ்சாப் நிலைகுறித்து மிகவும் பின்னால் G.W.Leinter என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை.

மேலே சொல்லப்பட்ட ஆதாரங்களுள், முந்தைய அரசு ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டதும் தனது சொந்த ஆய்வுகளை உள்ளடக்கியதுமான G.W.Leinter அவர்களின் அறிக்கை மிகவும் வெளிப்படையாகவே பஞ்சாபின் சுதேசீயக்கல்வியின் சிதைவுக்கும் அதன் அழிவுக்கும் கூட பிரிட்டிஷ் அதிகாரிகள் தான் காரணம் என விமர்சித்தது. ( Leinter ஒரு பிரிட்டிஷ் அதிகாரி ஆன போதிலும் அவர் ஆங்கிலேயர் அல்ல என Sir.Philip Hartog குறிப்பிட்டார்.)இருந்த போதிலும், அவ்வளவு வெளிப்படையாக இல்லாமல் பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் கனவான்களின், மனம் புண்படாத நாசூக்கான மொழியில், Adam அவர்களின் அறிக்கையும் சென்னை ராஜதானியின் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் அறிக்கையும் தத்தம் பகுதியின் இந்திய சுதேசிக் கல்வி பற்றிப் பேசின.

20,அக்டோபர் 1931 அன்று லண்டனில் ROYAL INSTITUTE OF INTERNATIONAL AFFAIRS கூட்டத்தில் காந்தி நிகழ்த்திய நீண்ட உரையில் கடந்த 51-100 ஆண்டுகளாக இந்தியாவில் கல்வி அறிவு குறைந்து விட்டது. அதற்கு பிரிட்டிஷார் தான் பொறுப்பு என்ற சில வாக்கியங்கள் Adam மற்றும் Leinter ஆகியோரின் அவதானிப்புகளைக் கூர்மைப்படுத்தி விட்டன. அப்போதுதான், 19ஆம் நூற்றாண்டின் துவக்க கால சுதேசிக்கல்வி பற்றிய மேற்கண்ட ஆதாரங்கள் மிகப் பெரும் முக்கியத்துவம் பெற்றன. ஒரு தனி நபர் என்ற முறையில் மட்டுமல்லாது, பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதி என்ற முறையிலும் காந்தியை வாதுக்கு இழுத்தவர் Sir.Philip Hartog என்ற , ஒரு காலத்தில் டாக்கா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராயிருந்த இந்திய சட்டக்கமிஷன் துணைக்குழுவின் உதவித்தலைவராகவுமிருந்த ஆங்கிலேயர் ஆவார். காந்தியின் வாதங்களுக்கு அடிப்படையான அச்சிடப்பட்ட ஆதாரங்களை முன் வைக்குமாறு அவர் கேட்டார். திருப்தியடையாத அவர் நான்காண்டுகள் கழித்து ( இந்த காலகட்டத்தில் காந்தி பெரும்பாலும் சிறையில் இருந்தார்.) லண்டன் பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையில் காந்தியின் கூற்றுக்களுக்கு எதிராக மூன்று தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். 1939 இல் மூன்று சொற்பொழிவுகளையும் அவற்றுக்கான குறிப்புகளையும் சேர்த்து புத்தக வடிவில் பதிப்பித்தார்.

காந்தியையும் முந்தைய ஆதாரங்களையும் மறுத்தலில், Sir.Philip Hartog உண்மையில் அசலாக இருக்கவில்லை. பிரிட்டிஷ் சட்டங்களையும் கொள்கைகளையும் பாதுகாக்கும் தேய்ந்த பழகிய பாதையையே பின்பற்றினார் என்பதுதான் உண்மை. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ‘விக்டோரியா கால இங்கிலாந்தின் தந்தை’ என பிற்காலத்தில் அறியப்பட்ட William Wilberforce அவர்களால் 125 ஆண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்ட பாதையைத்தான் தொடர்ந்தார். தனது காலத்திலே கூட இது போன்றதொரு முயற்சியில் அவருக்கு முன்னதாக; “ அக்பர் மற்றும் ஜஹாங்கீர் காலத்து பாட்டாளிகளுக்கு இப்போது இருப்பதைவிட அதிகமாகவே உண்பதற்குக் கிடைத்தது” என்று சொன்ன Vincent Smith அவர்களின் கூற்றை மறுத்த W.H.Mooreland இருக்கத்தான் செய்தார். இந்த சவால்தான் மூர்லேண்ட் அவர்களை ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியின் பாத்திரத்திலிருந்து, இந்தியாவின் பொருளாதார வரலாற்றாசிரியர் நிலைக்கு உயர்த்தியது எனத் தோன்றுகிறது. தற்போதைய தலைமுறைக்கு இவர்களது பாத்திரம் கடந்து போன விஷயம் எனத்தோன்றுவது புரிந்து கொள்ளக்கூடியது தான் எனினும், இவர்களைப் போலல்லாது,1940 வரை இருந்த பிரிட்டிஷார்கள் அர்ப்பணிப்பு உணர்வைச் சுமந்திருந்ததால், இயற்கையாகவே , அவர்களது இருநூறு ஆண்டு கால ஆட்சியின் போது இந்தியாவிலும் மற்று எங்காயினும் தாங்கள் வேண்டுமென்றே செய்திருப்பினும் வேறு எவ்வாறு செய்திருப்பினும் அவற்றின் மீதான கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ள முன் வர வில்லை.

இந்த நூலில் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கும் ஆவணங்களின் பெரும்பகுதி சென்னை ராஜதானியின் உள் நாட்டுக் கல்வி பற்றிய ஆய்விலிருந்து முதன் முதலாக இதன் ஆசிரியரால்
1966 இல் தரிசிக்கப்பட்டவை. மேலே சொல்லப்பட்ட இந்த ஆய்வின் மேற்கோள்கள் 1831-32 வாக்கிலேயே House of commons Papers இல் சேர்க்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், பல அறிஞர்கள் Madras Presidency district recods மற்றும் Presidency Revenue Records இல் இந்த ஆவணங்களைக் கண்டிருக்கக்கூடுமாயினும் விவரிக்க இயலாத காரணங்களால் அவர்களின் கல்விரீதியிலான கவனத்திற்குத் தப்பியிருக்கிறது.( பின்னது சென்னையிலும் இலண்டனிலும் இருக்கிறது.) சமீப காலத்திய சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடுகள் கூட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் பற்றி ஆய்வு செய்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கல்வி குறித்த சில குறிப்புகளைத் தந்த போதிலும், இந்தத் தரவுகளை முழுமையாகப் பயன் படுத்தவில்லை.

இந்தப் படைப்பு பிரிட்டி ஆட்சியை கிண்டல் செய்வதற்காக எழுதப்படவில்லை. மாறாக, பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவிய இந்திய நிகழ்நிலை, அந்த சமுதாயம், அதன் உள்கட்டமைப்பு, அதன் பழக்க வழக்கங்கள் – நிறுவணங்கள் , அவற்றின் பலம்- பலவீனம் ஆகியவை பற்றி விரிவாகப் புரிந்து கொள்ளுமுகத்தான் , இத்தரவுகளைப் பயன் படுத்த இந்நூலாசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சிகள்தான் இவை. ஏற்கனவே இந்நூலாசிரியர் எழுதிய 18ஆம் நூற்றாண்டு அறிவியலும் தொழில் நுட்பமும், ஒத்துழையாமை இயக்கம் ஆகிய இரு நூல்களைப்போலவே இதுவும் இந்தியாவின் மற்றொரு அம்சத்தைப் பற்றிப் பேசுகிறது . அதுவுமன்றி முன்னுரையில் அந்த காலகட்டத்தின் உலகளாவிய சுதேசிக்கல்வி நிலை குறித்த செய்திகளை பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த நோக்கத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இங்கிலாந்தில் நிலவிய கல்வியின் நிலை குறித்து சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் பல நண்பர்கள் இந்த ஆவணத்தின் மீது ஆர்வம் செலுத்தி மதிப்பு மிக்க கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கி இருக்கின்றனர்.அவர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்ட நான் கடமைப் பட்டிருக்கிறேன். அவர்களது ஊக்குவிப்பும் ஆதரவும் இன்றி இந்தப் பணி முழுமை அடைந்திருக்காது. பத்தொன்பதாம் ஆண்டின் துவக்கத்திய கல்வித்துறைகள் பாடத்திட்டங்கள் பற்றிய எனது ஐயங்களுக்கு விடை தேட ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் பண்டைய ஆவணங்களைப் பார்வையிட அனுமதித்தமைக்கு அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அது போலவே, India Office &Records (IOR) நிறுவணத்துக்கும், காந்தி – ஹார்டாக் இடையே நடைபெற்ற கடிதப் பரிமாற்றத்தை வழங்கியமைக்கு Mr.Mortin Moir அவர்களுக்கும்,1971-72 இல் எனக்கு Sr.Fellowship வழங்கிய Patna, A.N.Sinha Institute of Social Studies, Gandhi Peace Foundation,New Delhi, காந்தி சேவா சங்கம், சேவாகிராமம், மற்றும் Association of Voluntary Agencies for Rural Development , New Delhi அமைப்புகளுக்கும் தேவைப்படும் போதெல்லாம் இந்த முயற்சியில் ஆர்வமும் அக்கறையும் செலுத்தியமைக்கு நான் கடமைப் பட்டுள்ளேன்.

சென்னை ராஜதானி ஆவணங்களை (பின் இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது).இதனை நான் முதலில் India office Library இல் பார்த்தேன் என்ற போதும் தமிழ் நாடு ஆவணக்காப்பகத்தில் இருந்து (முன்பு இது மதராஸ் ரெகார்ட்ஸ் ஆபீஸ் என அழைக்கப்பட்டது.) வேலைப்பளுவினைச் சுமந்து கொண்டிருந்த போதிலும் இந்த வசதியை எனக்களித்து அன்பு காட்டிய ஊழியர்களுக்கு என் நன்றி. Alexander Walker அவர்களின் குறிப்பும் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது அது ஸ்காட்லாண்ட்டின் எடின்பர்க் தேசீய நூலகத்தின் Walker of Bowland papers என்ற ஆவணத்தில் இருந்து எடுக்கபட்டது. எனக்கு அனுமதியும் வசதியும் செய்து கொடுத்த அந்த தேசீய நூலகத்துக்கும் ஸ்காட்டிஷ் ரெகார்ட்ஸ் ஆபீஸ் எடின்பர்க் பலகலைக்கழகம், உ.பி. மாநில ஆவணக்காப்பகம், அலஹாபாத் ஆகியோருக்கும் இத்தகைய வசதிகளும் அனுமதியும் அளித்தமைக்கு நன்றி.

இறுதியாக சேவாகிராமம் ஆஸ்ரம் பிரதிஸ்தானுக்கு, என்னை அழைத்து, இந்த நூலினை ஆசிரமத்தில் வைத்து எழுத வசதி செய்து கொடுத்து, தங்களில் ஒருவனாக கவுரவித்ததற்காக நன்றி. காந்தியின் குடிலுக்கு அருகில் இருந்து இந்தப் பணியை முடித்தது உண்மையிலேயே எனக்குக் கிடைத்த பெரும் கவுரவம்.

இந்த நூலின் தலைப்பு லண்டன் சாத்தம் நிலையத்தில் 20 ,அக்டோபர்,1931இல் காந்தி ஆற்றிய உறையிலிருந்து எடுக்கப்பட்டது.

“பிரித்தானியர் இந்தியாவுக்கு வந்தபோது, அப்போது இருந்த நிலையை அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக வேரறுக்கத் தொடங்கினர். வேரைக் கண்டு பிடிப்பதற்காக மண்ணைப் பறித்தனர். பிறகு, அப்படியே விட்டு விட்டுச் சென்றனர். அந்த அழகிய மரம் ஈரமின்றிப் பட்டுப் போனது.” என்று அவர் பேசினார்.

துணைத் தலைப்புகளும் அவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நூலின் பெரும்பகுதி சென்னை ராஜதானியில் 1822-25 காலகட்டத்தில் திடட்டப்பட்ட தரவுகளில் இருந்து எடுக்கப்பட்ட போதிலும் இந்தத் தரவுகள் மிகவும் பழங்காலத்திய கல்வி அமைப்பு பற்றியவை ஆகும். 18 ஆம் நூற்றாண்டுக்குப்பின் கல்வி விரைவாக சீரழியத் தொடங்கிய போதிலும் அது தான் அந்தக்காலம் வரை பிரதான அமைப்பாக இருந்து வந்தது. ஆதம் அவர்களின் அறிக்கை இந்தச் சீரழிவு பற்றி 19 ஆம் நூற்றாண்டின் நான்காம் பத்தாண்டுகள் பற்றிக் குறிப்பிடுகையில் பேசுகிறது.

தரம்பால்.

19,பிப்ரவர்ய்,1981,
ஆஸ்ரம் பிரதிஸ்தான்.

தமிழாக்கம் : புதுவை ஞானம்

Puthuvai_gnanam@rediffmail.com

தொடக்க உரை
————-
இந்தியாவின் பெரும்பாலான வரலாற்று அறிவு, குறைந்த பட்சம் சமீபத்திய சில பத்தாண்டுகளிலாவது ,அயல் நாட்டவர்களின் எழுத்துக்களிலிருந்து பெறப்பட்டிருக்கிறது. இது இந்தியக்கல்வி பற்றிய அறிவுக்கும் மற்றும் பல துறைகளுக்கும் பொருந்தும். இந்திய தகவலுக்கான ஆதாரம் கல்வெட்டு ஆகவோ அல்லது தொல்பொருள் துறையினதாகவோ அல்லாமல்,வாய்மொழிப் பாரம்பரியம்,நம்பிக்கை, ஏன் தற்கால இந்திய எழுத்துக்கள் கூட ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படின், வரலாற்றை எழுதுபவர்கள் நம்புவதாகத் தோன்றவில்லை. நாளந்தா தட்சசீலா பல்கலைக்கழகங்களும் சமீப காலம் வரை அதிகம் அறியப்பட்டவையும் எழுதப்பட்டவையும் ஏனைய சிலவும் கூட ,பல நூற்றாண்டுகளுக்கு முன் சில கிரேக்கர்களால் விவரிக்கப்பட்டிருக்கிறது அல்லது இவை பற்றிய சீன யாத்திரிகர்களின் குறிப்புகள் இன்றுவரை காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறது அல்லது அவர்தம் நாட்டினரால் நவீன உலகிற்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதனால்தான் நம்பப்படுகிறது.

கி.பி.10 ஆவது மற்றும் 16 ஆவது நூற்றாண்டுகளில் இந்தியா பற்றிய வெளிநாட்டுத் தகவல்கள் வெகு அரிதாகவே தென் படுகின்றன. மேலும், தெரிந்த சிலவும் எழுத்தாளர்களுக்கும் தொகுப்பாளர்களுக்கும் யார் நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்கள் கண்டறிந்தவையாக இருக்கின்றன. அத்தோடுகூட இத்தகைய வரலாற்றுத் தொகுப்பாளர்கள் பெரும்பாலும் மேற்கு ஆசியாவிலிருந்து வந்தவர்களாக இருக்கின்றனர்.( இவர்களது சொல்முறை பல்வேறு நடைகளைக் கொண்டுள்ளது.) ஐரோப்பாவிலிருந்தோ அல்லது சீனாவிலிருந்தோ வந்தவர்கள் இல்லை என்பதோடு இஸ்லாமிய விரிவாக்கத்தை இந்தியாவுக்குள் கொண்டு வந்தவர்களோடு தொடர்புடையவர்கள் என்பதனால் அதிகம் கவனத்துக்கோ சிறப்புக்கோ ஆட்படவில்லை, 19ஆம் நூற்றாண்டு இந்திய வராற்று ஆசிரியகளுக்கு ஏற்புடையவர்களாக இருந்தால் ஒழிய.

கி.பி 8 அல்லது 10 ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவின் செல்வம் ,தத்துவம்,கல்வி பற்றியெல்லாம் ஏராளமாக எழுதப்பட்டு விட்டதாலும் ( அந்த சமுதாய அமைப்பு அதன் அண்டைய பகுதிகளிலின் நிகழ்நிலையிலிருந்து அடிப்படையில் பெரிதும் மாறுபடவில்லை என்பதனாலும்) அந்தகாலத்து அந்நியநாட்டு யாத்திரிகர்களும் வரலாற்றுத் தொகுப்பாளர்களும் இவை பற்றி எழுதுவதற்கு சிறப்பான காரணம் ஏதுமில்லை எனவும் கருத இடமுண்டு. பொதுவாக பல அறிஞர்கள் கருதுவது போல் கி.பி 8 -10 நூற்றாண்டு தொடங்கி வெளிப்படையாகவே இந்தியா சரியத் தொடங்கி விட்டது அல்லது புலப்படாத வகையில் சரியத் தொடங்கிவிட்டது என்பதனால் அந்நிய யாத்திரிகர்களின் கவனத்தைக் கவரவில்லை எனலாம்.

இருந்த போதிலும் கி.பி.1500-லிருந்தும் அதற்குப் பின்னர் 16 ஆம் நூற்றாண்டு முடியும்போதும் புதிய வகையிலான யாத்திரிகர்களும் துணிககரக் கண்டுபிடிப்பாளர்களும் இந்தியாவின் பகுதிகளில் சுற்றி அலைந்தனர். அவர்கள் எந்தப் பகுதியில் இருந்து வந்தார்களோ அதற்கும் இந்தியாவுக்கும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்புகள் இல்லையாதலால் அவர்களுக்கு இந்தியாவின் பெரும்பான்மையான அம்சங்கள் – அதன் பழக்க வழக்கங்கள்,சமயங்கள்,தத்துவங்கள், பண்டைய மற்றும் நிகழ்காலத்திய கட்டிடக்கலைகள்,செல்வம் அறிவு,அதன் கல்வி முறைகள் ஆகியவை ; அவர்களது சொந்த ஐரோப்பிய பின்புலம் யூகம் மற்றும் அனுபவங்களிலிருந்து மாறுபட்டவையாகத் தோன்றின.அதனால் அவர்கள் வந்த தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவில் செல்வம் தத்துவங்கள்,சமயங்கள் அல்லது வரலாற்று ரீதியான மகத்தான கட்டிடக்கலை எல்லாம் இல்லை எனவாகாது. செல்வத்தைப் பொருத்த மட்டிலுமே கூட ஐரோப்பாவின் வெவ்வேறு பகுதிகளில் நீண்டகாலமாகத் திரட்டிய செல்வங்களை வைத்திருந்த பிரபுக்கள் மட்டுமல்ல ,வியாபாரம் மற்றும் வங்கிதொழிலில் ஈடுபட்ட செல்வந்த வர்க்கமும் இருந்தது. அத்தோடு மட்டுமன்றி
1500 தொடங்கி பெருமளவிலான தங்கமும் வெள்ளியும் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவில் குவியத் தொடங்கி இருந்தது. 1500 ஆண்டு பழமையான சமயமும் ஐரோப்பாவுக்கு இருந்தது. அதன் கொள்கைகள் தத்துவங்கள் அவற்றிலிருந்து பிறந்த உலகக் கண்ணோட்டம் ஆகியவையும் இருந்தன. இருந்தபோதிலும் ஐரோப்பாவின் மேட்டுக்குடியினருக்கு நீண்டநெடுங்காலமாகவே இந்தியாவெனும் உலகம் ; மற்றொரு கிரகம் போல் தோன்றியது. அதுவுமன்றி, 1500 வாக்கில் ஒரு எழுத்துப் பாரம்பரியம் சொல்நேர்த்தி விவரணை மற்றும் அவற்றைவிட முக்கியமாக அச்சுக்கலை ஐரோப்பாவெங்கும் பரவத்தொடங்கியது. எனவே,பல யாத்திரிகர்கள், துணிகரக்கண்டுபிடிப்பாளர்கள் அல்லது மதரீதியான மதச்சார்பற்ற ஐரோப்பிய அரசுகளின் முழு அதிகாரம் கொண்டவர்கள் ஆகியோர் தங்களது அவதானிப்புகள் குறித்தும் அவர்களுக்குப் பிடித்தமானவை குறித்தும் தாங்கள் கண்டவற்றை தமக்குப் புரிந்த வகையிலும் தங்களது ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலும் எழுதத் தொடங்கினர்.(,மாலுமிகளால்தான் இவர்களின் கடற்பயணம் சாத்தியமானது என்ற போதிலும் ,இவர்கள் விறகு வெட்டுவதும் தண்ணீர் சேந்துவதுமான பணிகளில் ஈடுபட்டிருந்த சாதாரண கடலோடிகளைவிட மாறுபட்டவர்கள்.) எடுத்துக்காட்டாக கோழிக்கோட்டு சாமுத்திரன் ராஜா, சூரத்தின் பனியாக்கள்,பார்ஸிகள், அக்பர் மற்றும் ஜஹாங்கீரின் அரசவை பற்றிய நீண்ட விவரங்கள், இந்திய ஏழைகளின் உணவான நெய்யுடன் சேர்த்து உண்ணப்பட்ட கிச்சடிபற்றியும் பதிவு செய்யப்பட்டன. இந்தியப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட முறை கூட அவர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இவை அனைத்தும் 16வது நூற்றாண்டு மற்றும் 17வது நூற்றாண்டின் துவக்க காலம் குறித்தவை.

1770க்கு முன்பு அதாவது பிரிட்டிஷார் இந்தியாவின் பெரும்பாலான பகுதியின் நடைமுறை அரசாக ஆகுமுன்பு, யாருடைய குறிப்புகளையும் அறிக்கைகளையும் இந்நூல் சார்ந்து இருக்கிறதோ அவர்களது அக்கறை வேறாக இருந்தது. அப்போதும் அதற்குப் பின்னரும் கூட அவர்களது அக்கறையானது பெரும்பாலும் வணிகரீதியாகவும்,தொழில் நுட்ப ரீதியாகவும் அல்லது இந்திய நாட்டுத் தொழிலைப் புரிந்து கொள்வதிலும் மதிப்பீடு செய்வதிலும் அதன் மூலம் இந்திய சமயங்கள்,தத்துவங்கள் அறிவு மற்றும் கல்வியின் பரப்பு ஆகியவற்றின் மீது தங்களது செல்வாக்கினையும் ஆதிக்கத்தினையும் விரிவாக்குவதிலுமாக இருந்தது. அதுவரை அவர்களில் சிலர் பார்சிகள் பற்றியும் அல்லது சூரத்தின் பனியாக்கள் பற்றியும் எழுதியதெல்லாம் வெகு அரிதாகவே அவர்களது கவனத்தைக் கவர்ந்தது.

இத்தகைய ஆர்வமின்மை அவர்கள் இந்தியாவிலிருந்து வேறு எதையோ எதிர் பார்த்தார்கள் என்பதனால் தோன்றியதாக இருக்கலாம். இதற்கான பிரதான காரணம், அந்தக் காலத்திய பிரிட்டிஷ் சமுதாயம், அதாவது 16 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி தொடங்கி 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இத்தகைய விஷயங்களில் (சமயம்,தத்துவம், கல்வி,மேதமை ஆகியவற்றில்) சிறிதளவே அக்கறை செலுத்தியதானது,இயற்கையிலேயே ஒருவகையில் உண்முகமாக ஆய்ந்து கொண்டு இருந்தது எனலாம். இதனால் 16,17,18 ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டனுக்கு சமயம்,தத்துவம், கல்வி,மேதமை ஆகியன குறித்து ஒரு பாரம்பரியம் இல்லையென ஆகிவிடாது.பிரான்சிஸ் பேக்கன்,ஷேக்ஸ்பியர், மில்டன், நியூட்டன் போன்ற அறிஞர்களை அக்காலத்தில் உருவாக்கியது பிரிட்டன் தான். 13,14 ஆவது நூற்றாண்டில் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்ட்,கேம்பிரிட்ஜ்,மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள் இருந்தன.18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டனில் சுமார் 500 இலக்கணப்பள்ளிகள் இருந்தன. இருந்த போதிலும் இந்த எல்லா கல்வியும் மேதமையும் வெகு குறுகிய மேட்டுக்குடியினருக்கே கிட்டின, குறிப்பாக, இடைக்காலத்தில் புரட்டெஸ்டெந்த் புரட்சியினால் பெரும்பாலான மடாலயங்கள் மூடப்பட்டு அவற்றின் சொத்துக்களும் வருமானமும் அரசால் பறிமுதல் செய்யப்பட்டதால் நிலைமை இவ்வாறு இருந்திருக்கக்கூடும்.

A.E.Dobbs என்பவரின் கூற்றுப்படி புரொடெஸ்டெந்த் புரட்சிக்கு முன்னர் “ ஆக்ஸ்போர்ட் பகலைக்கழகம் ‘ ஏழைகளுக்கானபிரதான இலவச/தர்மப் பாடசாலையாகவும்,இங்கிலாந்தின் பிரதான இலக்கணப்பள்ளியாகவும் அத்தோடு கூட இறையியல்,சட்டம் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு மகத்தான இடமாகவும்’
சித்தரிக்கப்பட்டது. அத்தோடு பள்ளி முழுவதும் போதனை இலவசமாக இல்லை என்றபோதிலும்,ஏழைகளுக்கு உதவும் வகையில் அனுமதிக்கட்டணமும் ,தங்கும் வசதியும் படி நிலைகளாக வகுக்கப்பட்டிருந்தது.” மேலும் இங்கிலாந்தின் ஒரு மிகப்பழைய சட்டப்படி விதிமுறைகள் வகுக்கப்படும் போது “யாரொருவரும் தங்களுக்கென வருடத்துக்கு 20 ஷில்லிங் வருவாயோ நிலமோ இல்லாவிடில் எந்த நகரத்துக்குள்ளும் அல்லது பேரூருள்ளும் தனது குழந்தையை பயிற்றுவிக்க அனுப்பக்கூடாது ,ஆனால் அவர்களது தாய் தந்தை அல்லது பண்ணை அவர்களை எப்படிப் பயன் படுத்துமோ அவ்வாறான வேலையில் அவர்கள் ஈடுபடுத்தப் படுவார்கள்.இருந்த போதிலும் “.யாரொருவரும் தங்களது குழந்தைகளை இலக்கியம் படிப்பதற்கு அனுப்பலாம்” என்று பேசியது.

இருந்த போதிலும் 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மாறுபட்ட போக்கு ஒன்று உருவானது. அது ஆங்கில பைபிள் (விவிலியம்) தேவாலயங்களில் படிக்கப்படலாகாது என ஒரு சட்டம் இயற்றப்படும் அளவுக்கு இட்டுச் சென்றது . தனிப்பட்ட முறையில் படிக்கும் உரிமை பிரபுக்களுக்கும்,நிலவுடைமையாளர்களுக்கும் வியாபாரிகளுக்குமான குடித்தனங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.ஆனால் வெளிப்படையாகவே, கைவினைஞர்களுக்கும் பயிற்சியாளருக்கும் மற்றும் சிறுநிலச் சொந்தக்காரர்களிடமும் அவர்களுக்குக் கீழான தரத்தில் உள்ளோரிடம் ஏவளாலாகப் பணி புரிவோருக்கும்,உழவுத்தொழில் புரிவோருக்கும்,கூலிகளுக்கும் இந்த உரிமை மறுக்கப்பட்டது. வேதங்கள் சுதந்திரமாகப் பயன்படுத்தப்படும்போது தென்படும் சில கோளாறான போக்குகளை
தவிர்க்குமுகத்தான் இவ்வாறு செய்யப்பட்டது. இந்தப் புதிய போக்கின்படி “ உழவனின் மகன் உழுவதற்கும்,கைவினைஞர்களின் மகன் தந்தையின் தொழிலைச் செய்வதற்கும்,கனவான்களின் குழந்தைகள் அரசாளும் அறிவு பெற்று ‘Common wealth’ அமைப்பினை ஆளவும் தயார் செய்யப்பட வேண்டும். ஏனெனில் மற்ற நாடுகளைப் போலவே நமது நாட்டுக்கும் உழவர்கள் தேவைப்படுகின்றனர். அனைத்து வகையானவரும் பள்ளிக்குச் செல்லத் தேவை இல்லை” எனப் புரிந்து கொள்ளப்பட்டது.

ஒன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அதாவது 17 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் மேலே சொல்லப்பட்ட போக்கினில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. “ சமய உண்மைகளைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு உழைக்கும் வர்க்கத்தின் பொதுக் கல்வித் தரத்தை உயர்த்த வழிவகை செய்யும் விதத்திலும்” , அதை விட அதிகமாக வேல்ஸ்சில் “ ஏழைகள் ஞாயிறு வழிபாட்டில் விவிலியம் படித்துத் தொழும் அளவுக்கு தயாரிப்பதிலும்,வினா- விடை போதனையிப் புரிந்து கொள்ளும் அளவிலும்” தயாரிப்பதற்கென பொதுமக்களுக்காக தரும – இலவசப் பாடசாலைகளை அமைக்கும் அளவுக்கு மாறுதல் வந்தது.

ஒரு குறுகிய தொடக்கத்துக்குப் பின் தருமப்பள்ளிகள் இயக்கம் தொய்வடந்து விட்டது. ஆனால் 1780 இல் ,அதனைத் தொடர்ந்து ‘ஞாயிறுப் பள்ளி’ இயக்கம் வந்தது. இருந்த போதிலும் இந்தக் காலகட்டத்தில் கூட “ பரவலான கல்வி என்பது சமய முயற்சியாகவே அணுகப்பட்டது.” அதன் நோக்கம் ஒவ்வொரு குழந்தையும் விவிலியம் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகள் கவுரவமாக அனுசரிக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தது. இது ஞாயிறுப் பள்ளிகளை அதிகரிப்பதில் அதிகக் கவனம் குவித்து சில ஆண்டுகளில் தினப் பள்ளிகளின் அவசியத்தின் மீதும் கவனம் செலுத்தியது. அப்போது தொடங்கி பள்ளிக்கல்வி விரைவாக வளர்ச்சி அடையத் தொடங்கியது. இருந்த போதிலும், 1834 வரை கூட, “தேசீயப் பள்ளிகளின் பாடத்திட்டமானது மத போதனை, படித்தல் ,எழுதுதல் கணக்கிடல் என இருந்தது; ஆனால் கிராமப் பள்ளிகளில் தீமை பயக்கும் என்ற அச்சத்தில் எழுதுவது தவிர்க்கப்பட்டு வந்தது.”

, ‘ஏழு ஆண்டுகால பயிற்சியாளர் திட்டத்தின் ( Apprenticeship) முதல் நான்கு ஆண்டுகளில் படித்தல்,எழுதுதல்,கணக்கிடுதல் திறன்களை ஈட்டும் விதத்தில் பயிற்சி அளிப்பதன் மூலம் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒரு மணி நேர சமய பயிற்சியும் மீதி நேரத்தில் வழிபாட்டிலும் பயிற்சியாளர்களை முதலாளிகள் ஈடுபடுத்தவேண்டும்’ என அறிவுறுத்திய Peel’s Act of 1802 என்ற சட்டத்தில் இருந்து பகல் நேர தினப் பள்ளிகளுக்கான தூண்டுதல் வந்தது. அந்தச் சட்டம் எதிர்ப்புகளைச் சந்தித்தது என்பதுடன் நடைமுறையில் பெரிய அளவு பலனளிக்கவும் இல்லை. அதே சமயத்தில் Andrew Bell ,Joseph Lancaster ஆகியோரால் (Monitorial) எனப்படும் சடாம்பிள்ளை மூலம் பயிற்சி அளிப்பது நடைமுறைப் படுத்தப் பட்டதானது பொதுக் கல்வியின் முன்னேற்றத்துக்குப் பெரிதும் உதவியது.இந்த சட்டாம்பிள்ளைப் பயிற்று முறையை இந்தியாவிலிருந்து கடன் வாங்கியதாக Andrew Bell சொன்னார். பள்ளியில் பயிலும் மாணவர் எண்ணிக்கை 1792 இல் 40,000 ஆகவும், 1818 இல் 6,74,883 எனவும், 1851 இல் 21,44,377 எனவும் மதிப்பிடப் பட்டது. பொது மற்றும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 1801 இல் 3363 என இருந்த நிலை படிப்படியாக அதிகரித்து 1851 இல் 46,114 ஆக உயர்ந்தது.

இருப்பினும், ‘ ஆசிரியர்கள் அரிதாகவே திறமை வாய்தவர்களாக இருந்தனர்’ என்றும் , அந்த ஆசிரியர்களும் தற்குறிகளாக மட்டுமின்றி குடிகாரர்களாகவும் இருந்தனர் என Lancaster மறைமுகமாகக் குற்றம் சாட்டினார். படிப்பு எத்தனை காலம் நீடித்தது என்பது குறித்து Dobles எழுதுகையில், வருகையில் ஒரு ஒழுங்கு முறை வலியுறுத்தப் படாமையினால் சராசரி கல்வி ஆண்டுக்காலம் 1835 இல் ஒரு ஆண்டாக இருந்தது 1851 இல் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக ஆகியது எனக் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலப் பொதுப்பள்ளிகளைப் பொருத்தவரை பதினெட்டாம் நூற்றாண்டில் அவற்றின் வளம் பெருமளவு குன்றி விட்டதாகச் சொல்லப் படுகிறது.ஜனவரி 1797 இல் புகழ் பெற்ற Shrewbury பள்ளியில் மூன்று நான்கு பையன்களுக்கு மேல் இல்லை. ஆனால் பெருமளவு சீர்திருத்தம் செய்யப்பட்ட பின்னர் ஆண்டுக்கு 20 மாணவர்கள் என உயர்ந்தது .Eton போன்ற பொதுப் பள்ளிகளில் எழுதுவதும் கணக்கிடுவதும் கற்பிக்கப்பட்டது. பல ஆங்கில மற்றும் இலத்தீன் நூல்கள் படிக்கப் பட்டன. ஐந்தாம் படிவத்தில் இருந்தவர்களுக்கு பண்டைய நில நூல் அல்லது அல்ஜிப்ராவும் நீண்டநாள் தொடர்ந்து அங்கு படித்தவர்களுக்கு Euclid இல் இருந்து ஒரு பகுதியும் கற்பிக்கப் பட்டது. இருந்த போதிலும் 1851 வரை முறையான பள்ளிகளில் கணிதம் ஒரு அங்கமாக ஆகவில்லை. அப்ப்டி கற்பித்தவர்களும் முழுமையான தகுதி படைத்த ஆசான்களாகக் கருதப் படவில்லை.

பள்ளிக்கல்வி குறிப்பாக அடிப்படைக்கல்வி மக்கள் மட்டத்தில் 1800 வரை அரிதான பொருளாகவே இருந்தது. இருந்த போதிலும் ஆக்ஸ்போர்ட்,கேம்பிரிட்ஜ், எடின் பர்க் ஆகியவை 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ,இந்தியாவிலும் நவதீப்பிலும் நாளந்தா தட்சசீலா ஆகியவற்றைப் போல் முக்கியத்துவம் பெறவில்லை.இந்தியாவுக்கு குறிப்பாக 1773க்குப் பிறகு யாத்திரிகர்களாகவும் அறிஞர்களாகவும் அல்லது நீதிபதிகளாகவும் .வந்தவர்கள் இந்த மூன்று பல்கலைக் கழகத்தில் தான் படித்தனர்.. இந்திய நிலை பற்றி விவாதிக்கு முன் இவற்றில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை கற்பிக்கப்பட்ட துறைகள் பற்ரிய சுருக்கமான தகவல் தருவது பொருத்தமாக இருக்கும். இவற்றுள் ஒன்றில் 1800 மாணவர்கள் படித்தனர்.

ரோமுக்கும் இங்கிலாந்துக்கும் விரிசல் ஏற்பட்ட பிறகு 1546 இல் இருந்து வரிசைக்கிரமமாய் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட பேராசிரியர் நிலைகள் கீழ் வருமாறு இருந்தன.

1546 ஆம் ஆண்டு – Henry VIII அவர்களால் உருவாக்கப்பட்ட பேராசிரியர் நிலை/இருக்கை : 5.
1.தெய்வீகம் (Divinity) 2. குடிமைச் சட்டம் (Civil Law) 3. மருத்துவம் 4.ஹீப்ரூமொழி 5.கிரேக்கமொழி

1619 ஆம் ஆண்டு : வடிவ கணிதம் மற்றும் சோதிடம்.
1621 ஆம் ஆண்டு :இயற்கைத் தத்துவம்.
அதே ஆண்டு :அறவழி தத்துவம் (Moral philosophy) (1707 லிருந்து 1829 வரை விடுபட்டு இருந்தது)
1622 ஆம் ஆண்டு : பண்டைய வரலாறு (அதாவது ஹீப்ரூ மற்றும் ஐரோப்பியவரலாறு)
1624 ஆம் ஆண்டு: இலக்கணம், அடுக்கு மொழி ,இயல் கடந்த (அப்பாலை) தத்துவம்
இவை பயன் படுத்தப்படாமல் போய் 1839 இல் தர்க்கவியல் நடைமுறைக்கு வந்தது.

1624 ஆம் ஆண்டு : உடற்கூறு இயல்
1626 : இசை
1636 : அராபிய மொழி
1669 : தாவர இயல்
1708 : கவிதை
1724 :நவீன வரலாறு மற்றும் நவீன மொழிகள்
1749 : சோதனை தத்துவ இயல்
1758 :பொது சட்டம்
1780 : மருத்துவ மனைப் பயிற்சி
1795 : ஆங்கிலோ சாக்சன் மொழி மற்றும் இலக்கியம்
1803 : வேதியல்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க கால விவரங்கள் பற்றிப் பார்க்கையில் ஆக்ஸ்போர்டில் பத்தொன்பது கல்லூரிகளும் ஐந்து அரங்கங்களும் (Halls) இருந்ததாகத் தெரிகிறது. அந்தக் கல்லூரிகளில் 500 கற்றறிந்த பேர்கள்(fellows) இருந்ததாகவும் அவர்களில் சிலர் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிய வருகிறது. அத்தோடு கூட, 1800 இல் , 19 பேராசியர்கள் இருந்தனர், இவர்களது எண்ணிக்கை 1854 இல் 25 ஆக உயர்ந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் படிக்கப்பட்ட பிரதானமான துறை இறையியலும் செவ்வியல் இலக்கியமும் ஆகும். ‘Litrrae Humaiores’ எனப்பட்ட செவ்வியல் துறையி தேர்வுகள் நடத்தப்பட்டன. அவற்றுள் கிரேக்க,இலத்தீன் மொழிகளும் இலக்கியமும் அறவழித் தத்துவமும், அடுக்கு மொழி மற்றும் தர்க்கவியல், இயற்பியல் மற்றும் கணிதத்துறையின் அடிப்படைகள் உள்ளடங்கி இருந்தன. சட்டம், மருத்துவம், நிலவியல் (Geology) ஆகியவை பற்றியும் விரிவுறைகள் நடத்தப்பட்டன.

1805 டொடங்கி பல்கலைக்கழகத்தில் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ப்-அத்தொபடாம் நூற்றாண்டுத் துவக்கத்தில் ஆண்டு ஒன்றுக்கு 760 என இருந்த மாணவர் எண்ணிக்கை 1820 – 24 இல் 1300 என அதிகரித்தது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்த கல்லுரிகளின் வருவாயானது அறக்கட்டளைகள்,பிரதானமாக நிலமான்யங்கள் மற்றும் மாணவர்கள்செலுத்தும் கட்டணத்தைச் சார்ந்திருந்தது. இந்த வருவாய் எந்த ஆதாரத்திலிருந்து வருகிறது என்பது கல்லூரிக்குக் கல்லூரி மாறுபட்டது. 1850 வாக்கில்,நான்கு ஆண்டுகால பல்கலைக்கழகப் படிப்புக்கான செலவு என்பது துணிமணி பயணச்செலவு ,விடுமுறைக்காலத்தில் மாணவரை வளர்ப்பது உட்பட பெற்றோருக்கு 600லிருந்து 800 பவுண்டு வரை இருந்தது.

பிரிட்டிஷ், டச்சு போர்ச்சுகீஸ் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் நேரடியாகவோ;அல்லது 16 ஆவது நூற்றாண்டு மற்றும் 17ஆவது நூற்றாண்டின் துவக்கத்தில் தொடங்கிய,அவர்களின் கிழக்கிந்திய வணிக நிறுவணங்கள் மூலமாகவோ, தங்களது ஆதிக்கம் தொழிற்சாலைகள்ஆகியவற்றை இந்தியப் பெருங்கடல் பகுதியில் எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் விரிவுபடுத்திக் கொண்டிருந்த வேளையில் கி.பி 1500 தொடங்கி ஐரோப்பிய அறிஞர்கள் இந்தப் பகுதிகளில் நிலவிய நாகரிகத்தின் பல்வேறு அம்சங்களை விளங்கிக் கொள்ள முயன்று கொண்டு இருந்தனர். இவர்களுள் முதன்மையானவர்கள் குறிப்பாக அறிவியல் மற்றும் சடங்குகள் ,பண்புகள்,தத்துவங்கள் மற்றும் சமயங்கள் பற்றி
கிருத்துவ துறவிகள் குறிப்பாக JESUITS எனப்படும் இக்னோஷியஸ் லயொலா என்பரால் 16 ஆம் நூற்றண்டில் நிறுவப்பட்ட இயேசுனாதர் சங்கத்தின் அங்கத்தினர்கள். அதற்கும் அப்பால் அரசியல், இயற்கை ,பொருளாதாரம், வரலாற்றியல் சார்பான அக்கறை கொண்டவர்களுமிருந்தனர்.பலர்கீழ்த்திசை பற்றி விசித்திரமானதும் நம்பத்தகாததுமான தங்களது சொந்த துணிகரச் செயல்கள் துயரங்கள்பற்றியும் அவ்வப்போது எழுதினர். ஐரோப்பியர்களுக்கு இருந்த பரவலான அக்கறையின் காரணமாக இப்படிப்பட்ட பலதும் ஐரோப்பிய மொழிகளில் பிரசுரமாயின. குறைந்த அளவில் இருந்த போதிலும் மேதமை மிக்கதும் சமயம் தொடர்பானதுமான குறிப்புகளும் விவாதங்களும் பல முறை கையெழுத்துப் பிரதிகளாகப் பதிவு செய்யப்பட்டன.

End of part one.
பச்சைப்பசுமரம் பட்ட மரம் ஆனது ஏன்?
——————————————————-
Beautiful Tree

Advertisements