கடற்கரை.

இரவெல்லாம் . . .
எவனோ பொருள் குவிக்க
வழிகாட்டி தலை சுற்றி
இளைப்பாறும்
கலங்கரை விளக்கம்.!

மதச் சார்பின்மையை
மடத்தனமாய்ப் புரிந்து கொண்டு
‘ஈஸ்வர அல்லா தேரே நாம்’
ஈனமாய்ப் பாடினாலும்
என்னைப் போல்
இருபது அம்சத்திலிருந்து
இடைவேளை அனுபவிக்கும்
ஆகாஷவானி !

உறு மீன் ஓடவிட்டு
ஓடு மீன் பிடிக்க
வாடியிருக்கும்
காவல் துறை நிலையம் !

மாமிச மலைகளைக்
காற்று வாங்க இறக்கிவிட்டு
களைப்பாறும் கார்கள் !

நடப்பதாய் . . .
‘ஜனநாயக சோஷலிசம்’ போல்
பாவனை பண்ணும்
மகாத்மா !

வேலையில்லாப் பட்டாளம்
விவேகமற்று உற்பவிக்கும்
QMC _PRESIDENCY !

விழிமின் ! எழுமின் !
வேகமாய்க் கத்தி விட்டு
விரக்தியோடு நிற்கும்
விவேகானந்தர் !

காக்கைக்கும் குருவிக்கும்
விடுதலையை வேண்டியதால்
எச்சம் சுமக்கும்
பாரதியார் !

ஐயகோ . . . !
இவர்களா எனக்குச்
சிலை எழுப்ப வேண்டுமென்று
சீறி வழக்குறைக்கும்
கண்ணகி !

பஸ் ஏறி
வயிற்றிலே பசியும்
கண்ணிலே நிசியும் தாங்கி
கூலிக்கு விரையும்
வெந்ததைத் தின்று
விதி வந்தால்
சாவோமென்போர் !

சொத்து சேர்க்கும்
கலை ஒன்றே விதவிதமாய்
சொல்லித்தரும்
பல்கலைக் கழகம் !

எவனையும் ஏறெடுத்துப் பாராமல்
கருமமே கண்ணாகக்
கல்லைப் புரட்டுபவர் !

உழைப்பாளர் சிலை வரைக்கும்
ஊளைச் சதை குறைய
இருந்து இளைப்பாறி
தினம் தினமும்
நடப்பவர்கள் !

அண்ணா வழி நடப்போர்
நாங்கள்தாம்
நாங்கள்தாம்
லாவணியைக் கேட்கின்ற
சங்கடத்தில் மாட்டிவிட்டு
சந்தனப் பெட்டியில்
சவமாய்
உறங்குபவர் !

பேப்பரிலும்
சில
காண்ற்றாக்டர்
வீட்டிலும் மட்டுமே
மணக்கின்ற
மங்காத
கூவ நதி !

கட்டு மரம் ஏறி
கடலோடு போராடி
கொண்டு வந்த
மீனையெல்லாம்
கடல் தாண்டி
அனுப்பி விட்டு
ஊட்டச் சத்தின்றி
சூம்பி நிற்கும்
பரதவர்கள் !

இத்தனையும் பார்த்து
எதிர்த்தழிக்க இயலாமல்
குமுறும் கடல்
என் மனம் !

( 1976- ல் எழுதப்பட்ட இக்கவிதை இதுவரை
பிரசுரத்துக்கு அனுப்பப்படவில்லை. )

புதுவை ஞானம்
Puthuvai _gnanam @rediff mail .com
27 December 2008

Advertisements