யார் உண்மையான ஞானி ?
————————————–
ஒரு குருவும் சீடனும் ஒரு நாள் அரசனைக் காணச்சென்றனர். குருவானவர் அரசனைப் பார்த்து ,
“ உங்களைப் பார்த்தால் அறிவாளியாகத் தோன்றுகிறது. நீங்கள் தத்துவம் படிக்கலாமே? அறிவாளிகள் தத்துவம் படிப்பது மிகவும் நல்லது !” என்று சொன்னார்.

சீடன் சொன்னான், “ ஐயா, இந்த அரசரைப் பார்த்தால் இவரது மண்டையில் தத்துவம் ஏறாது போலிருக்கிறதே!”

அரசனுக்கு மனம் வருந்தியது. சிறிது காலம் முயற்சி செய்து தத்துவம் கற்றான்.

பின்னர் ஒரு காலத்தில் அந்த சீடனின் நினைவாக ஒரு மண்டபம் கட்டினான். குருவுக்கு ஏதும் செய்யவில்லை. மக்களுக்கு வியப்பாக இருந்தது. குருவை மதிக்காமல் சீடனுக்கு மட்டும் மரியாதை செய்யப்பட்டது ஏன் ? என்று விசாரித்தனர்.

“என்னுடைய பதவியை நினத்து பயப்படாமல், தன்னுடைய மனதில் பட்டதை மறைக்காமல் உண்மையைச் சொன்ன சீடனே உண்மையான ஞானி !” அதனால் தான் அவருக்கு மண்டபம் கட்டினேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

புதுவை ஞானம். ( ஆண்டி வாத்தியார் )

———————————————————-

தலை இருக்க வால் ஆடலாமா ?
———————————————-
ஒரு காட்டில் பாம்பு ஒன்று சந்தோஷமாக எந்தக் கவலையும் இல்லாமல் அங்கும் இங்குமாய்த் திரிந்து கொண்டு இருந்தது. பாம்பின் தலை எங்கெல்லாம் போகிறதோ அங்கெல்லாம் அதனுடைய வாலும் போக வேண்டி இருந்தது. அதனால் வாலுக்கு வருத்தமாக இருந்தது.

வால் தலையிடம் கேட்டது : “எப்போதும் நான் ஏன் உன்னைத் தொடர்ந்து பின்னே வர வேண்டும்? நீ ஏன் என் பின்னால் வரக்கூடாது ? நான் மட்டும் மட்டமா?”

வாலின் முட்டாள் தனமான கேள்விக்கு, “ என்னிடம் தானே கண் இருக்கிறது. நான் தானே பாதையை சரியாகப் பார்க்க முடியும் ? அதனால் தான் நான் முன்னேயும் நீ பின்னேயுமாக
போக வேண்டி இருக்கிறது” என்று பதில் சொன்னது.

உடனே வாலுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.ஒரு மரத்தை இறுக்கமாக சுற்றிக் கொண்டது.

“இப்போது ஓடு பார்ப்போம் ! என்று தலையிடம் சொன்னது.

பாவம். எவ்வளவு முயன்றும் தலையால் ஓட முடியவில்லை.

“சரி எக்கேடும் கெட்டுப் போ !”என்று வால் சொன்னபடி அதன் பின்னால் போகத் தொடங்கியது.

வால் கண் மண் தெரியாமல் தலையைத் தன் பின்னால் இழுத்துக் கொண்டு ஓடியது .ஒரு மலை உச்சியில் இருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்தது. தலையும் வாலும் சேர்ந்துஅடி பட்டு நொறுங்கின.

அனுபவம், அறிவு என்னும் கண்கள் உள்ளவர்களைப் பின் பற்றுவதால் தான் பாதுகாப்புடன் நிம்மதியாக வாழ முடியும்.
வால் போன்ற முட்டாள்களின் பேச்சைக் கேட்டால் துன்பம் தான் விளையும்.

ஆண்டிவாத்தியார்.
Puthuvai_gnanam@rediff mail.

——————————————–

Advertisements